தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட், மன்சூர் அலிகான், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ளார்.ஏர் ப்ளிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இது ஒரு பேண்டஸி ரக கற்பனையான படம்.எமதர்மன், சித்திரகுப்தன், கிங்கரர்கள். இவர்களுக்கும் ஒரு மனிதனுக்கும் இடையே நடக்கும் ஒரு சர்ச்சையே டபுள் டக்கர்.
மரணத்தை முடிவு செய்யும் எமதர்மனின் கணக்குப் பிள்ளையாக இருப்பவர்தான் சித்திரகுப்தன் என்பது அனைவருக்கும் தெரியும்.மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை, அவர்கள் செய்யும் நன்மை, தீமைகளைக் கணக்கெடுப்பவர்கள், லெஃப்ட் மற்றும் ரைட். இந்த கணக்குகளை தங்களுடைய தலைவருக்கு கொடுப்பதோடு, மனிதரின் ஆயுள் காலத்தினை கணக்கிட்டு அவர்களின் உயிரையும் தங்களது தலைவரிடம் எடுத்துச் செல்கின்றனர்.
இந்தப் படத்தின் நாயகன் தீரஜின் ஆயுள் முடிவதற்குள் அவரது உயிரைப் பறித்து விடுகிறார்கள். பின்னர், இந்தப் பிழையினை உணர்ந்து கொண்ட இருவரும், தீரஜின் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். அப்போது, அவரது உடல் காணாமல் போகிறது. அதன் பின்னர் தீரஜின் உடலைத் தேடி அலைகின்றனர்.இப்படி ஒரு புதிருடன் கதை நகர்கிறது .
இதன் பின்னர் என்ன நடந்தது? என்பது தான், டபுள் டக்கர் படத்தின் திரைக்கதை செல்லும் பாதை.
இதே வகையிலான கற்பனையில் சமீப காலத்தில் வந்திருந்த ‘வினோத சித்தம்’ போன்று வேறு சில படங்கள் வந்துள்ளன என்றாலும்,டபுள் டக்கர் படத்தில், அனிமேஷனுடன், சமகால நவீனத்துக்கு ஏற்ற திரைக்கதையின் மூலம், கேள்விகளை எல்லாம் மறந்து சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.
நாயகன் தீரஜ், தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். குறை சொல்ல ஒன்றும் இல்லை.நகைச்சுவை தருணங்களில் அதற்கான காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ம்ருதி வெங்கட், கதாநாயகியாக அவ்வப்போது தலைகாட்டுகிறார்.
கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்த் ஒரு பக்கம், சுனில் ரெட்டி மற்றும் ஷாரா மறுபக்கம் என,சிரிக்க வைக்கிறார்கள். இதில் சுனில் ரெட்டி சபாஷ். மேலும், மன்சூர் அலிகான் – கோவை சரளா இடையே நடக்கும் டெலிபோன் காமெடி, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த சிரிக்க வைக்கும் காட்சிகளைச் சிந்தித்து மேலும் மெருகேற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் காளிவெங்கட் மற்றும் முனீஷ்காந்த், இடைவேளைக்குப் பிறகு தோன்றி சிரிக்க வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு ஓகே! வித்யா சாகரின் பின்னணி இசை, காட்சிகளுக்குப் பலம் சேர்த்துள்ளது.
டபுள் டக்கர் படத்தினை எழுதி, இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் மீரா மஹதி, தன்னால் முடிந்த அளவிற்கு சிறுவர்களைச் சிரிக்க வைக்க முயன்றுள்ளார் .அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.கோடைகால விடுமுறையைக் குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த ‘டபுள் டக்கர்’ படத்தைச் சிறுவர்கள் கொண்டாடலாம்!