டிச-13ல் வெளியாகும் ‘மிஸ் யூ’

தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், 7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில்,   இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார்.

ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. ஏற்கனவே நவ-29ல் இந்தப்படம் வெளியாகவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் தாக்கிய பெஞ்சல் புயல் மற்றும் கனமழை பாதிப்பு காரணமாக இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது வரும் டிச-13ஆம் தேதி இப்படம் திரையரங்குளில் வெளியாகும் எனபுதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட நடிகர் சித்தார்த் பேசும்போது, “ஒரு நல்ல தேதி கிடைத்து படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுவதை ஒரு வரம் கிடைத்ததாகவே பார்க்கிறோம்.

டிசம்பர் 13 என்பது ஒரு நல்ல தேதி தான். வழக்கமாக இந்த 13ம் தேதியை ஹாரர் படங்களுக்கு சொல்வார்கள். ஆனால் அப்படி இல்லாமல் ஒரு லவ் ஸ்டோரியுடன் உங்களிடம் வருகிறோம். எட்டு பாடல்களுடன் நீண்ட நாட்கள் கழித்து எனக்கு ஒரு நல்ல லவ் ஸ்டோரியாக இந்த படம் வந்துள்ளது.

இந்தப்படத்திற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்துதான் குடும்பங்களுடன் பார்த்து ரசிக்க கூடிய இன்னும் பல காதல் படங்களில் நடிக்க வாய்ப்பாக அமையும்.

இந்த வருடம் எனது இரண்டு படங்கள் வெளியாகும் நிலையில் அடுத்த வருடம் மாதவன், நயன்தாரா, நான் இணைந்து நடித்த ‘டெஸ்ட்’
மற்றும் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகும் எனது நாற்பதாவது படம் உள்ளிட்ட மூன்று படங்கள் ரிலீசாக இருக்கின்றன.ஒரு படம் வெளியாகி விட்டாலே அனைவருக்கும் அது சொந்தம். நீங்கள் பணம் கொடுத்து படம் பார்க்கிறீர்கள். உங்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு” என்று கூறினார்.