இது சைபர் யுகம். சின்னஞ்சிறுவர்களுக்குக் கூட தெரியாதது ஒன்றும் இல்லை என்கிற நிலை. இப்படிப்பட்ட சூழலில் வளரும் பிள்ளைகள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பார்கள். அப்படித்தான் அப்பகுதியில் ஒரே குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்களும் இருக்கிறார்கள். தங்களையும் பெரியவர்கள் போல் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.அவர்கள் எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு சிறுமி தங்கள் பாட்டி ஊரில் பேய் இருப்பதாகக் கூறுகிறாள். அந்த 13 சிறுவர்களும் அந்தப் பேயைத் தேடிப் பயணப்படுகிறார்கள். போகிற வழியில் பல இடையூறுகளைச் சந்திக்கிறார்கள். போகும்போது அவர்கள் ஒவ்வொருவராக மாயமாக மறைகிறார்கள்.காணாமல் போனவர்களைத் தேடி அவர்கள் அலைகிறார்கள். அதன் காரணம் என்ன? அமானுஷ்யமானதா மனிதர்களாலா? என்று கேள்வி வருகிறது. முடிவு என்ன என்பதுதான் கதை.
இந்த டீன்ஸ் படம் பார்த்திபன் தனது பாணியில் இருந்து விலக நினைத்து , தனது பிம்பத்தைத் தானே திருத்தி மாற்றி அமைக்கும் முயற்சி எனலாம்.
படத்தின் கதை என்ன?
பதின் பருவத்தைச் சேர்ந்த அந்த 13 சிறுவர்களும் நன்றாக நடித்துள்ளார்கள். அந்த துறுதுறு தோற்றம், வயதை மீறிய பேச்சு,உலகத்தைப் பற்றிய அறிவு என்று அவர்களின் பாத்திரங்கள நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்களும் தோற்றம் பேச்சு வசனம் நடிப்பு என நன்றாகவே செய்துள்ளார்கள்.
சிலருக்கு இது மிகையாகத் தோன்றலாம்.இன்றைய காலச் சூழலில் இது இயல்புதான்.ஒருவரையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளார்கள்.
முதல் பாதி முழுக்க சிறுவர்கள் காணாமல் போனது பற்றிய பதற்றம் நம்மைப் பற்றிக் கொள்கிறது .காரணம் என்ன யார் என்பதை பற்றிப் பல கேள்விகளை நமக்குள் எழுப்பி இரண்டாவது பாதியில் அதற்குப் பதில் சொல்கிறார்கள்.
இடைவேளையில் போது மலைப்பாம்பு வயிற்றைச் சிறுவர்கள் கிழிக்கும் இடம் பரபரப்பான பதற்றம்தான்.இரண்டாம் பாதியில் சிறுவர்கள் காணாமல் போனதற்கான விடை கிடைக்கிறது.
இப்படத்தில் பார்த்திபன் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்.வால்தனங்கள் செய்யாமல் அடக்கியே வாசித்துள்ளார். யோகி பாபு பாத்திரம் வருவது ஒரு திணிப்பு. இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. குறிப்பாக பொடிசுகளுக்கு இடையே காதல் பிறக்கும் இடங்களில் வெளிப்படும் மெல்லிசை .
பின்னணி இசையிலும் திருப்தி தருகிறார்.
ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு.ஆரி குறைந்த பட்ஜெட்டையும் தாண்டி காட்சியில் பிரம்மாண்டம் காட்டியுள்ளார்.
குறிப்பிட்ட சில படப் படப்பிடிப்பிடங்களில் படப்பதிவு நடந்திருந்தாலும் அந்தக் குறை தெரியாத அளவிற்கு நிறைவு செய்துள்ளார்.
இருந்தாலும் படத்தின் பட்ஜெட் போதாமையை படம் பார்ப்பவர்கள் உணர முடிகிறது. போலீஸ் விசாரணை, கிராமத்தில் குறி சொல்லும் பெண்மணி, பாட்டி, யோகி பாபு என கதையோடு ஒட்டாமல் விலகிப் பயணம் செய்யும் பாத்திரங்களும் அவர்களது பயணங்களும் அயர்ச்சி தருகின்றன.
மொத்தத்தில், இந்த ‘டீன்ஸ்’ தனது பாணியில் இருந்து விலகி ஒரு படம் உருவாக்கியுள்ள பார்த்திபனின் முயற்சி எனலாம்.