என். டி. சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ‘தங்கரதம்’ என்ற தமிழ் திரைப்படம் ஜுன் 16 ஆம் தேதியன்று வெளியாகிறது. இதனை தமிழகம் முழுவதும் சத்யம் சினிமாஸ் வெளியிடுகிறது.
இது குறித்து படக்குழுவினர் தெரிவித்ததாவது..
தமிழகத்தின் பெரிய சந்தைகளில் ஒன்று ஒட்டன்சத்திரம் சந்தை. தென் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து பொருள்கள் செல்கிறது. எப்போதும் பரபரப்புடன் பல்வேறு வகையான மனிதர்களுடன் வலம் வரும் இந்த சந்தையை பின்னணியாகக் கொண்டு இது வரை தமிழில் எந்த திரைக்கதையும் வெளியாகவில்லை. இந்நிலையில் படத்தின் இயக்குநர் பாலமுருகன் இந்த சந்தையில் ஒரு வணிகராக இருந்து செயல்பட்ட போது கிடைத்த அனுபவங்களை ஆதாரமாக வைத்து உருவானது தான் இந்த படத்தின் திரைக்கதை.
இந்த சந்தைக்கு பக்கத்து கிராமப்பகுதியிலிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் காய்கறிகளை தங்களது டெம்போ வண்டியில் ஏற்றி வரும் இரு இளைஞர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்வது தான் இந்த படத்தின் ஹைலைட். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் டெம்போ குறையாத ‘தங்கரதம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட டெம்போவின் கதை.
தங்கரதம் என்பது கதையின் நாயகன் செல்வா (வெற்றி) ஒட்டி வரும் டெம்போவிற்கும், பரமன் (சௌந்தரராஜா) என்ற டெம்போவிற்கும் இடையே நடைபெறும் தொழில் போட்டியை அதன் இயல்பு தன்மை மாறாமல் சொல்லியிருக்கிறோம். அத்துடன் செல்வாவிற்கும், ஒட்டன்சத்திரம் கல்லூரியில் படிக்கும் ஆனந்தி (பரமனின் தங்கை)க்கும் இடையே ஏற்படும் காதலையும் மண்ணின் மனம் மாறாமல் சொல்லியிருக்கிறோம்.
திரைக்கதையை வலுப்படுத்துவதற்காக மலைச்சாமி என்ற கேரக்டரில் ‘நான் கடவுள் ’ராஜேந்திரன் நடித்திருக்கிறார். இவரின் தோற்றத்தையும், கேரக்டரின் சிறப்புகளையும் சொல்லும் வகையில் பாடலொன்று இடம்பெற்றிருக்கிறது. அந்த பாடலை இயக்குநர் பாலமுருகன் எழுதியிருக்கிறார். இந்த பாடலின் போது நான் கடவுள் ராஜேந்திரனுடன் நடனமாடியிருக்கிறார் சுசித்ரா. இவர் முன்னாள் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் இளைய சகோதரி என்பதும். தெலுங்கில் இவர் நடித்திருந்தாலும், இவர் தமிழில் அறிமுகமாவது இந்த பாடலில் தான் என்பதும் இதன் சிறப்பம்சம்.
படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் வெற்றி. இவர் ஏற்கனவே சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன் என்ற படத்திலும், பா விஜய் நடித்த ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தில் வில்லனாகவும் நடித்தவர். இவர் கதையின் நாயகனாக நடித்து அறிமுகமாகும் முதல் படம் இது. ஆறடிக்கும் அதிகமான உயரம் கொண்ட இவர், படத்தில் டெம்போ டிரைவராக நடிக்கும் போது தன் தோற்றத்தை கேரக்டருக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அத்துடன் படத்தில் இவர் ஓட்டும் வாகனத்தையும் இவர் உயத்திற்கேற்ற வகையில் மாற்றியமைத்து படமாக்கினோம். அதே போல் சேசிங் மற்றும் சண்டைக்காட்சிகளின் போது இவர் டூப் போடாமல் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் எந்த ஒரு கட்டோ அல்லது வசனங்களை மௌனமாக்க வேண்டும் என்றோ சொல்லாமல் ‘யூ ’சான்றிதழ் கொடுத்து படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்கள். இதே உற்சாகத்துடன் இப்படம் ஜுன் 16 ஆம் தேதியன்று வெளியாகிறது