ஜீவா ,ஹரிஷ்மிதா, சித்து,பிரபு சாஸ்தா, இந்திரா, துருவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.கதை எழுதி இயக்கியுள்ளார் எம் ஆர் பாரதி.இப்படத்திற்கு ஒளிப்பதிவு – சாலமன் போவாஸ் , இசை – இளமாறன்,வசனம் ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம்,எம். டி .தமிழரசன்,தயாரிப்பு வடிவமைப்பு எஸ் .ரதி,
திரைக்கதை எம்.டி. தமிழரசன் கிருத்திகா தாஸ்,எடிட்டிங் எஸ். பி .அஹமத், இணை இயக்கம் எம்.பொன் புவனேஸ்வரன்..சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் என் .காவேரி மாணிக்கம் டாக்டர் ஆர். குணசேகரன் B. ஆதித்யன் இணைத் தயாரிப்பாளர்களாகப் பங்கெடுத்துள்ளனர்.
சரி ட்ரீம் கேர்ள் படத்தின் கதை என்ன?
நாயகன் ஜீவா திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் உள்ளவர். அவர் தயாரிப்பாளர்களைப் பார்த்து கதை சொல்கிறார். அப்படி ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார்.நாயகி ஹரிஷ்மிதா திரைப்படப் பின்னணி பாடகி ஆக வேண்டும் என்ற கனவில் உள்ளவர்.ஒவ்வொருவரும் தனித்தனியான லட்சியத்தை நோக்கிய கலைக் கனவில் சஞ்சரித்து வருகிறார்கள்.கனவு மலரும் இந்த இரு மனங்களுக்கு இடையில் காதல் மலர்கிறது. நாயகன் ஜீவா வாழ்க்கையில் ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவு நிஜ வாழ்க்கையில் சம்பவங்களாக நிகழும் போது இனிக்கின்றன. ஆனால் கனவில் கண்ட அசம்பாவிதமும் நடந்து விடுமோ என்று நாயகன் அஞ்சுகிறார். கனவைத் துரத்தியவர், ஒரு கட்டத்தில் அந்தக் கனவு நனவாகி விடக்கூடாது என்று பதற்றம் ஆகிறார். அதன் முடிவு என்ன என்பதுதான்
‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தின் நாயகியைக் காதலிப்பவனாக ஒருவன் வருகிறான். அவன் எதிர்மறை குணம் கொண்டவன். சந்தேகப் புத்தி கொண்டவன்.அவன் வில்லனா என்றால் ஒரு கட்டத்தில் கனவு தான் வில்லன் போல் பார்வையாளர்களுக்குத் தோன்றுகிறது.இப்படி கனவையே ஓர் எதிர்மறைப் பாத்திரமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.
சினிமாவில் எவ்வளவு தகுதி இல்லாத கதாநாயகன் பின்னும் காதல் என்கிற பெயரில் புத்திசாலிப் பெண்கள் சுற்றுவதாகக் காட்டுவார்கள்.அப்படி எல்லாம் பெண்கள் ஏமாளிகள் அல்ல,சிந்திக்கத் தெரியாத அறிவில்லாதவர்களும் அல்ல. இப்படத்தில் வழக்கமான கதாநாயகனும் நாயகியும் பேசிக்கொள்வது போல் இல்லாமல் இவர்கள் படித்த புத்திசாலியாக இருக்கிறார்கள்.எனவே முதிர்ச்சியாக உரையாடுகிறார்கள்.திரைப்பட இயக்குநருடன் படத்தில் நடிக்கும் நாயகி கதை விவாதத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு அவள் புத்திசாலியாக இருக்கிறாள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது சிறப்பு. குறிப்பாக நாயகி புத்தகம் படிப்பவளாக இருக்கிறாள்.புத்தகக் கடையில் வேலை பார்க்கிறாள். உலகின் செவ்வியல் நாவல்கள் பற்றி விவாதிக்கிறாள். அந்த அளவிற்கு பெண்மையை உயர்த்தி இருக்கிறார் இயக்குநர்.
நாயகனாக நடித்திருக்கும் ஜீவா மற்றும் நாயகியாக நடித்திருக்கும் ஹரிஷ்மிதா இருவரும் புதியவர்கள். என்றாலும் அது தெரியாத அளவிற்கு எதார்த்த நடிப்பில் மனதில் பதிகிறார்கள்.இந்த இரு பிரதான பாத்திரங்களைச் சுற்றியே கதை நகர்வதால் இருவரும் பகிர்ந்து சுமந்து படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.
குறிப்பாக கதாநாயகி ஹரிஷ்மிதா முதல் பாதியில் வருபவர் கனவில் இருப்பவராகவும் இரண்டாம் பாதியில் வருபவர் நிஜத்தில் இருப்பவராகவும் இருக்கிறார் .அந்த இரு பாத்திர மாற்றத்தையும் உணரச் செய்துள்ளது அவரது நடிப்பு.மேலும் அர்ஜுன் ஆக வரும் சித்து, அரவிந்தாக வரும் பிரபு சாஸ்தா, இந்திராவாக வரும் இந்திரா, துருவனாக வரும் துருவன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாக செய்து வெளிப்பட்டுள்ளார்கள்.
இளமாறன் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் கேட்பதற்கு இதம்.பின்னணி இசை கதையை மகிமைப்படுத்துகிறது.குறிப்பாகச் சில காட்சிகளுக்கு புல்லாங்குழல் இசை கொண்டு செழுமை சேர்த்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ் ஊட்டியின் எழில் கொஞ்சும் பகுதிகளை இதமாகப் பின்புலம் ஆக்கியுள்ளார்.காட்சிகளைப் பார்க்கும் போது மனதிற்குள் குளிர் காற்று அடிக்கிறது.
செயற்கைப் பரபரப்பு இல்லாத இந்தக் கதையில் படத்தொகுப்பாளர் ஸ்.பி.அஹமத் காட்சிகளை இயல்பாகத் தொகுத்திருக்கிறார்.
நடிப்பது பற்றி இரு பாத்திரங்கள் பேசும் போது , நடிப்பு கடினமா என்கிற போது ,எல்லோரும் வாழ்க்கையில்
‘ நடிச்சிட்டுதானே இருக்கிறோம்?’ என்று கூறுவதும் ‘சந்தேகமும் சர்க்கரை வியாதியும் ஒன்னு. வந்தால் போகவே போகாது ‘என்பதும் இயல்பான வசனத்திற்குச் சிறு உதாரணம்.னவிலும் நிஜத்திலும் வருகிற மாதிரி சில காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் சலிப்பூட்டாத படி அதைப் படமாக்கி இருக்கிறார்கள்.
திரைக்கதை முக்கோணக் காதல் கதையை வேறு ஒரு வடிவத்தில் சொல்கிறது.கதை எழுதி இயக்கியிருக்கும் எம்.ஆர்.பாரதி, கனவைத் துரத்தும் காதல் ஜோடிக்குள் ஒரு கனவு, அப்படி வரும் அந்தக் கனவு கொடுங்கனவாக மாறும் போது ஏற்படும் விளைவுகள் என்ற ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு, அழகான மற்றும் அழுத்தமான காதல் சித்திரத்தை வரைந்திருக்கிறார்.
ஊட்டி என்கிற குளுமைப் பின்புலம் படத்திற்கு ஒரு இதமான உணர்வை அளிக்கிறது.நாமும் காதலர்களோடு ஊட்டியில் சுற்றும் உணர்வையும் தருகிறது.
மொத்தத்தில், ‘ட்ரீம் கேர்ள்’ இரைச்சல் நடுவே ஒலிக்கும் மெல்லிய கொலுசு ஒலி .


