‘டிரெண்டிங்’ திரைப்பட விமர்சனம்

கலையரசன்,பிரியா லயா, பிரேம்குமார், பெசண்ட் ரவி நடித்துள்ளனர்.சிவராஜ் இயக்கி உள்ளார் .பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார். ராஜ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் ,ஆனந்த் ஜி தயாரித்துள்ளனர்.

இது சமூக ஊடகங்களின் காலம் .அனைத்து சமூக ஊடக வகைகளிலும் தன்னை வெளிப்படுத்தி விளம்பரப் படுத்திக் கொள்வது என்கிற போக்கு ஒரு நோயாகவே இன்று சமூகத்தில் உள்ளது. தனது ஒவ்வொரு அசைவையும் படம் எடுத்து, வீடியோ எடுத்து பதிவேற்றி வருவது இன்றைய இளைஞர்களிடம் பரவியுள்ள ஒரு மனப்போக்காக உள்ளது. டிரெண்டிங் என்று எதையும் இப்போது செயற்கையாக உருவாக்கி பேச வைக்க முடியும்.அதில் அர்த்தம் இருக்கிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்.

கலையரசனும் பிரியா லயாயும் அர்ஜுன் மீரா என்கிற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் ஒரு நாள் அவர்களின் சேனல் நீக்கப்பட்டு விடுகிறது. அந்தச் சேனல் வருமானத்தை நம்பி கடன் வாங்கி வீடு வாங்கி இருக்கிறார்கள்.சேனல் நீக்கப்பட்டதால் பதறித் தவிக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும் அதில் கலந்து கொண்டு ஏழு நாட்கள்  ஆட வேண்டும் என்றும் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் இரண்டு கோடி ரூபாய் பரிசு என்றும் ஆசைத் தூண்டிலை வீசுகிறார்கள்.பண நெருக்கடியும் யூடியூப் வருமானத்தை நம்பி வாங்கிய கடன்காரர்களின் தொல்லைகளும் அவர்களை அந்த ஷோவில் பங்கேற்கத் தூண்டி விடுகிறது.அந்த ஷோ என்ற மாய விளையாட்டில் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள் .அதன்படி ஆடி சில லட்சங்கள் சம்பாதிக்கிறார்கள். ஒவ்வொரு கட்டமாகச் செல்லும்போது, அடுத்த கட்டத்தை நெருங்கும் போது சில லட்சங்களை இழக்கிறார்கள். இழந்த பணத்தை மீட்க வெறி கொண்டு துரத்துகிறார்கள்.இந்த விளையாட்டை ஆடும்போது அவர்களுக்குள் இதனால் கருத்து வேறுபாடுகளும் வருத்தமும் வருகிற போது இது விளையாட்டுக்குத்தான் விளையாட்டுக்குத்தான் என்று சமாதானமாகிச் செல்ல வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகக் கொண்டு இதை விளையாட்டை ஆடுகிறார்கள்.

அப்போது அவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய சில கேள்விகளும் அந்தரங்கத்தை கிளறும்படியான சில கேள்விகளும் உள்ளன.இதில் அவர்கள் தங்களை வெளிப்படுத்தும் போது இருவருக்கும் மன வேறுபாடு நிலவுகிறது.அவர்களது மறக்கப்பட்ட கடந்த காலம் அவர்களை மீண்டும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகிறது.

ஒரு கட்டத்தில் அவர்களது அந்தரங்க வாழ்க்கையைச் சீண்டிவிடும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. மனம் இல்லாமல் பணத்துக்காக வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார்கள். அந்த டாஸ்க்கைக் கடக்கும்போது இருவரது மனமும் விலகிச் செல்கிறது.ஆனாலும் அதை சந்தித்தால்தான் இரண்டு கோடி ரூபாய் கிடைக்கும் என்கிற ஆசை அவர்களை துரத்துகிறது .அந்த விஷப்பரீட்சைக்குத் தயாராகிறார்கள். முடிவு என்ன என்பதுதான் ட்ரெண்டிங் படத்தின் கதை.

கதை இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி உருவாகி இருக்கிறது ட்ரெண்டிங் என்கிற பெயரில் தன்னை முன் வைக்கும் ஒரு கலாச்சாரத்தை மனப்போக்கை இந்தப் படம் அப்பட்டமாகக் காட்டுகிறது. எப்படியாவது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறியை தீய சக்திகள் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்கிற எச்சரிக்கையையும் இந்தப் படம் சொல்லாமல் சொல்கிறது.

இந்தப் படத்தில் கலையரசன் அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகனாக இருந்தாலும் எதிர்மறை நிழலை முகத்தில் படிய வைத்து கதையின் போக்கை மாற்ற உதவும் வகையில் தனது பாத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகி மீராவாக பிரியா லயா வருகிறார். அவரது தோற்றமும் அழகும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்து காட்சிகளை சுவாரஸ்யப் படுத்துகின்றன.அவர் நடிப்புக்கான சந்தர்ப்பங்களில் தன்னை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.பிரேம்குமார் சில காட்சிகள் வந்தாலும் படத்தில் திருப்புமனை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் பெரும் பகுதி அர்ஜுன்- மீரா என்கிற இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றிவந்தாலும் கதை நிகழ்விடம் ஒரு வீட்டுக்குள்ளேயே நடந்தாலும் அந்த அலுப்போ சலிப்போ இல்லாமல் காட்சிகளை சுவாரசியப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சிவராஜ்.

படத்திற்கு பெரும் பலமாக ஒளிப்பதிவும் இசையும் பயணித்துள்ளன.

இந்தக் காலத்து இளைஞர்கள் கதையைப் பிரதிபலிக்கும் வகையில் ட்ரெண்டிங் படத்தை இளமை துள்ளும் காட்சிகளுடன் விறுவிறுப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சிவராஜ்.

படத்தில் திருப்பம் விறுவிறுப்பு என்ற பெயரில் திணிக்கப்பட்டுள்ள அந்த செடியூஸ் செய்யும் காட்சிகளைத் தவிர்த்து இருந்தால் இளைஞர் படமாக இருக்கும் இந்தக் கதை அனைவருக்குமான படமாக மாறி இருக்கும்.
மொத்தத்தில் இந்தக் காலத்தின் இளைஞர்களின் போக்கை பிரதிபலிக்கிறது இப்படம்.