சீயான் விக்ரம்,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி,டேனியல் நடிப்பில் உருவாகி, இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை
பா .ரஞ்சித் இயக்கி உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலம்.கதாநாயகன் தங்கலான் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மக்களுடன் வாழ்ந்து வருகிறார்.அவர்கள் ஒரு இன குழுக்கள் போல் வாழ்கிறார்கள். வெள்ளைக்காரர்களின் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் மிட்டா மிராசுக்கள், தங்கலானுடைய மக்களை அடிமைபோல் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையை மாற்றி தனது மக்களை அடுத்தகட்டத்துக்கு அழைத்து செல்லவேண்டும் என நினைக்கிறார் தங்கலான். இந்த நேரத்தில் வெள்ளைக்காரன் கூறும் ஆசை வார்த்தைகள் மூலம் தங்கம் தேடும் வேலை இவர்களுக்கு வருகிறது.அதனை செய்வதன் மூலம் அதிக வருமானம் கிடைத்து அடிமை வாழ்க்கையில் ஒரு விடிவு காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவன் பின்னே செல்கிறார்கள்.
மிராசிடம் இருக்கும் தங்களின் நிலங்களை மீண்டும் வாங்கிவிடலாம் என எண்ணி தனது மக்களை தங்கம் தேடும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்.அந்தத் தேடுதல் வேட்டையின் முடிவு என்ன?அங்கே அவர்கள் சந்தித்த சவால்கள் என்ன? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் பா. ரஞ்சித் தன் படங்களில் ஏதாவது ஒரு அரசியல் பேசுவார் இதில் நிலம் பற்றிய அரசியலில் பேசுகிறார்.நில உடமை என்பது மனிதனின் மிகப்பெரிய உரிமை என்பதைப் புரிய வைக்கிறார்.ஆனால், திரைக்கதை சற்றுக் குழப்பமாக பூடகமாக இருக்கிறது. அதைத் தெளிவாகக் கூறி இருக்கலாம். அதுவே படத்தின் மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. அதே போல் நடிகர், நடிகைகள் பேசும் வசனங்கள் பல இடங்களில் புரியவில்லை.அது அவர்களது உணர்வுகளோடு நம்மைத் தொடர்பு படுத்த முடியாத தடையை ஏற்படுத்தி விடுகிறது.
விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா,டேனியல் என அனைவரும் நடிப்பில் முழுமையான பங்களிப்பை அளித்துள்ளனர்.அவர்களது நடிப்பு படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
விக்ரமின் அர்ப்பணிப்பான நடிப்புக்கு இந்தப் படம் முதல் சாட்சியாக இருக்கும் .அந்த அளவுக்கு நடிப்பின் மூலம் தனது உழைப்பைப் போட்டு உள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்கிறார்.
ஜிவி பிரகாஷின் இசை ஒரு தனிப்பட்ட பாத்திரம் போல் ஒளி விட்டுள்ளது.படத்தில் ஏற்படும் தொய்வுகளை எல்லாம் அவரது பின்னணி இசை சமன் செய்து விடுகிறது.மேலும் பாடல்களும் பளீர் ரகங்கள்.
ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம் இரண்டுமே நம்மைத் தங்கலான்உலகத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கிறது. அந்த உலகத்தைப் பார்ப்பது வேறு ஒரு அனுபவமாக உள்ளது.அதேபோல் பட உருவாக்கத்தின் வெற்றியில் ஒளிப்பதிவு மிகமுக்கிய காரணம் எனலாம்.
ரஞ்சித்தின் பாத்திரங்களின் சித்தரிப்புக்காகவும் விக்ரமின் நடிப்பிற்காகவும் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.