‘தணல்’ திரைப்பட விமர்சனம்

அதர்வா முரளி ,அஸ்வின் காக்கு மனு, லாவண்யா திரிபாதி , தரணி,ஷாரா, லட்சுமி பிரியா நடித்துள்ளனர் .ரவீந்தர மாதவா இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன் ஆர் படத்தொகுப்பு செய்துள்ளார்.தயாரிப்பு – ஜான் பீட்டர்.

அதர்வாவும் அவருக்குத் தெரிந்த நண்பர்கள் ஐந்து பேரும் புதிதாக போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளனர்.ஒரு நாள் முழுக்க போலீஸ் காவல் நிலையத்தில் அவர்கள் காத்திருக்கிறார்கள். தங்கள் ஜாலியான முன் கதைகளைக் கூறிக்கொண்டு சிரித்து மகிழ்கிறார்கள்.கடைசியில் உயர் போலீஸ் அதிகாரி அவர்கள் ஆறு பேரையும் ரவுண்ட்ஸ் போகும்படி கூறுகிறார்.அதன்படியே செல்கிறார்கள் .அப்போது ஊரை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் போது பாதாள சாக்கடை மூடியைத் திறந்து கொண்டு ஹெல்மெட் போட்டுக் கொண்டு ஒருவன் வெளியே வருகிறான். இவர்களை கண்டதும் வேகமாக ஓடுகிறான்.ஏதோ தவறு நடக்கிறது என்று அறிந்து கொண்ட இவர்கள் துரத்துகிறார்கள்.அவன் தெருக்களின் புகுந்து வளைந்து நெளிந்து மதில் தாண்டி குதித்து புகுந்து ஓட ஓட இவர்கள் துரத்த துரத்த கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் காணாமல் போகிறான்.அவன் காணாமல் போன பகுதி குடிசைப் பகுதியாக இருக்கிறது ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது .அடி எது நுனி என்று எது என்று தெரியாமல் இருக்கிறது.போன வழி தெரியாமலும் திரும்பும் வழி அறியாமலும் திகைத்து நிற்கின்றனர்.அங்கே அஸ்வின் நிற்கிறார் .அவரை இவர்கள் போலீஸ் பாணியில் விசாரிக்க செல்கிறார்கள். அப்போது அஸ்வின் தரணியைக் கத்தியால் வெட்டி விடுகிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியாகும் ஐவரும் அங்கிருந்து தப்பிக்க ஓடுகிறார்கள்.இவர்களைப் பிடிக்க அஸ்வினின் ஆட்கள் துரத்துகிறார்கள். இவர்கள் ஓடி ஒளிந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.அது ஒரு சமூக விரோதக் கும்பல் என்று தெரிகிறது அவர்கள் ஏதோ திட்டத்துடன் இருப்பது தெரிகிறது. அதை அறிய மோப்பம் பிடிக்கிறார்கள்.அவர்கள் வங்கிகளை கொள்ளையடிக்கவும் போலீஸ்காரர்களைச் சுரங்கப்பாதைக்கு வரவழைத்து கூட்டத்தோடு போட்டுத் தள்ளவும் திட்டமிட்டு இருப்பது தெரிகிறது.அதை சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளான அதர்வா தடுக்க என்ன செய்கிறார்? அவர்களின் இந்த பழிவாங்கலுக்கான காரணம் என்ன ? போன்றவற்றைச் சொல்வதுதான் ‘தணல்’ திரைப்படம்.படத்தில் எழும் கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் பதில் வைத்திருக்கிறார் இயக்குநர்.

நாயகன் அதர்வா ஏற்றுக்கொண்ட போலீஸ் பாத்திரத்தில் சரியாகப் பொருந்தியுள்ளார் .ஒரு பதற்றத்தோடும் உயிர் பயத்தோடும் இயங்கக்கூடிய  நிர்பந்தம் உள்ள மன அழுத்தத்தை முக பாவனையில் காட்டியுள்ளார்.காதல் காட்சிகளிலும் குறையில்லை.

அஸ்வினை வில்லன் என்று சொல்வதை விட இன்னொரு கதாநாயகன் என்று தோன்ற வைக்கிற அளவிற்குப் படத்தில் ஆக்கிரமித்துள்ளார்.அவரைக் கண்டாலே படம் பார்ப்பவர்களுக்கு பீதி கொள்ளும் அளவிற்கு மிரட்டி உள்ளார் .யாரோ சில போலீசாரால் பாதிக்கப்பட்டதற்காக ஒட்டுமொத்த போலீசையும் அழிக்க நினைப்பது அநியாயம் இல்லையா?அதேபோல் வங்கிகளைக் கொள்ளை அடித்து அந்தப் பணத்தை யாருக்கும் உதவாமல் சாக்கடைக்குள் போடுவது எந்த ஊர் நியாயம்?
என்ற கேள்விகளும் எழுகின்றன.
நாயகி லாவண்யா அழகான தோற்றம் அளவான நடிப்பு என்று அவர் வருகிற காட்சிகளை அழகாக்கி இருக்கிறார்.ஐடியா மணியாக வரும் ஷாரா, அதர்வாவின் காதல் வெற்றி பெற கொடுக்கும் ஐடியாக்கள் பணால் ஆவது சிரிக்க வைக்கின்றன.
படத்தில் நடித்துள்ள பிற துணைப் பாத்திரங்களுக்கான நடிகர்களும் குறை இல்லாத பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

படத்தில் கதை பயணிக்கும் போது சாதாரணமாக புறப்பட்டு திடுதிப்பென பெரிய சுழலுக்குள் நம்மை ஆழ்த்தி பரபரக்க வைக்கிறார்கள்.படம் முடியும் வரை நம்ம இருக்கை நுனியில் இருத்துகிறார்கள்.
இரண்டாம் பாதியில் தான் கொடூர அஸ்வினின் முன் கதை விரிகிறது.

வங்கிக் கொள்ளையும் காவல்துறையினர் அனைவரையும் விரோதி போல் காண்பிப்பதும் பார்ப்போர் மனதில் சமரசப்படுத்தவில்லை.அதனால் விறுவிறுப்பான கதைக்குள் சற்றே விலக்கம் வந்து விடுகிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணியிலும் குறை இல்லை.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரங்கப்பாதைக்குள் நடக்கும் காட்சிகள் நம்மை பதற்றத்தில் மூச்சுத் திணற வைக்கின்றன.சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் உழைப்பு  தெரிகிறது.

தணல் என்றால் நெருப்பு என்றொரு பொருள் உண்டு.ஆங்கிலத்தில் (Tunnel)தணல் என்றால் சுரங்கப்பாதை என்று பொருள்.படத்தில் வில்லனின் மனம் தான் தகிக்கும் தணலாக இருக்கிறது. உச்சகட்ட காட்சியில் சுரங்கப் பாதை வருகிறது .எனவே இரண்டு வகையிலான தணலும் இந்தப் படத்திற்கு பொருந்துகிறது.

சிறு சிறு தர்க்க மீறல்களைக் கடந்து விட்டு இந்த விறுவிறுப்பான திரில்லரை ரசிக்கலாம்.