‘தண்டட்டி ‘விமர்சனம்

தண்டட்டி என்பது மதுரை ராமநாதபுரம் பகுதிகளில் வயதான பெண்கள் அணியும் ஓர் அணிகலன்.  தங்கத்திலான இது எடை மிக்கதாக காதில் தொங்கிக் கொண்டிருக்கும். இதற்காகவே காது வளர்ப்பவர்கள் உண்டு. இதைப் பாரம்பரியப் பெருமையாகவும் தங்களது கம்பீரமாகவும் நினைத்து பெண்கள் மகிழ்வது உண்டு.அப்படிப்பட்ட தண்டட்டியைத் தலைப்பாக வைத்து உருவாகி உள்ள படம் தான் இது.

சாவு வீட்டில் ஒரு தண்டட்டி காணாமல் போய்விடுகிறது. பிணத்தின் காதில் உள்ள தண்டட்டியைத் திருடுகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய கொடுமை. பிணத்தைச் சுற்றிலும் இவ்வளவு பேர் இருக்கும் போது என்றால் எப்படி?இப்படி ஒரு தண்டாட்டியை யாரோ திருட,அது யாரோ ஒரு மனிதர் மேல் சுமத்தி நகரும் ஒரு மலிவான கதையாக நம்மை கற்பனை செய்ய விடாமல்,கதை வெவ்வேறு பின்புலத்துடன் பயணிக்கிறது. இப்படி ஒரு கதையை எந்த வணிக சினிமா இயக்குநரும் சிந்திக்க மாட்டார்.ஆனாலும் காணாமல் போகும் தண்டட்டி, அதை கண்டுபிடிக்க வரும் போலீஸ்காரர், அவருக்கு ஒரு முன் கதைகிராமம், ஒரு காதல்கதை, சாவு வீடு, மண்,மக்கள், பல்வேறு குணச்சித்திரங்கள்,  என்று நாம் எதிர்பாராத சுவாரசியங்களை குழைத்து கிராமிய மணம் கமழக்கமழ நகைச்சுவை தெறிக்கத் தெறிக்க ரத்தமும் சதையுமாக மண்வாசனை மாந்தர்களை உலவ விட்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ராம் சங்கையா.

நட்சத்திரங்களைத் தேடி ஓடாமல் வணிகக் கதைகளை தேர்வு செய்யாமல் இப்படிப்பட்ட வித்தியாசமான கதைகளத்தை தேர்வு செய்தமைக்காக
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.லக்‌ஷ்மன் குமாரைப் பாராட்டலாம் வாழ்த்தலாம்.

படத்தில் சுப்பிரமணியாக பசுபதி, தங்கப் பொண்ணுவாக ரோகிணி, சோ பாண்டியாக விவேக் பிரசன்னா, செல்வராசுவாக முகேஷ்,பொன்னாத்தாவாக தீபாசங்கர்,சின்னாத்தாவாக பூவிதா,பூவாத்தாவாக ஜானகி,விருமாயியாக செம்மலர் அன்னம் நடித்திருப்பதாக தயாரிப்பாளர்களின் தொழில்நுட்பக் குறிப்பு கூறுகிறது .ஆனால் அப்படி யாரும் நடித்ததாகத் தெரியவில்லை அந்தப் பாத்திரங்கள் மட்டுமே கண்ணில் தெரிகின்றன.அந்த அளவிற்கு நடிப்பு கலைஞர்கள் பாத்திரங்களோடு கரைந்துள்ளனர்.

தேடிப்பார்த்தால் இப்படத்தில் போலீஸ்காரராக வரும் பசுபதி நவரச நடிப்பையும் காட்டியிருக்கிறார்.
அவரது சின்னச் சின்ன முகபாவனைகள் நடிப்பின் நுட்பங்கள்.அப்பத்தாவாக ரோகிணி அலட்டாமலேயே அசத்தியுள்ளார். மற்றவர்கள்?அனைவரும் அப்படியே வாழ்ந்துள்ளனர்.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராம் சங்கையாவைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது .ஓர் இளைஞரின் மனதில் இப்படி ஒரு கதையா?
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமியின் கேமரா அந்த தென் தமிழ் நாட்டுக் கிராமத்து வீடுகளிலும் தெருக்களிலும் சாலைகளிலும் புகுந்து புறப்பட்டு நம்மை அழைத்துச் செல்கிறது.கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசை நேட்டிவிட்டி மாறாமலும் புதுமை என உணர வைக்கும் வகையிலும் உள்ளது.

படத்தை விறுவிறுப்பு குறையாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் சிவா.இப்படிப்பட்ட படத்தில் ஏகாதசி, ராம் சங்கையா பாடல்கள் இருந்தாலும் பட்டினத்தார் பாடலும் இடம்பெற்றுள்ளது சிறப்பு .அதை முகேஷ் பிரமாதமாகப் பாடியுள்ளார்.

மொத்தத்தில் தண்டட்டி ஒரு மாறுபட்ட சுவாரசியமான நேட்டிவிட்டி பட அனுபவம்.