வைரமுத்து தன் உதவியாளரை அழ வைத்த சம்பவம் அண்மையில் நடந்தது.
கவிஞர் வைரமுத்துவிடம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருப்பவர் பாஸ்கரன். கவிப்பேரரசு வைரமுத்துவை நேரடியாகத் தெரிந்த அனைவருக்கும் பாஸ்கரனையும் தெரியும். இத்தனை ஆண்டு காலம் உட னிருந்து பணியாற்றிய அனுபவத்தில் வைரமுத்து என்கிற ஆளுமையின் பலங்கள் , பலவீனங்கள் , சலனங்கள் அனைத்தையும் அறிந்தவர் அவர்.
கவிஞரின் அன்பையும் அணுக்கத்தையும் சம்பாதித்தவர். அந்த பாஸ்கரனின் மகள் ஓவியாவுக்கும் தாயுமானவன் மகன் ராஜ்குமாருக்கும் திருவாரூர் பேரடைஸ் மஹால் திருமண அரங்கில் திருமணம் நடந்தது. கவிஞர் வைரமுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தில் முன்னாள் எம்.பிக்கள் . பி.வி. ராஜேந்திரன் , கம்பம் செல்வேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள். விழாவை மரபின் மைந்தன் முத்தையா அழகுறத் தொகுத்து வழங்கினார்.
விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து மண மக்களை வாழ்த்திப் பேசினார். அவர் பேசும் போது ,
” இந்த திருமண விழா வைரமுத்துவின் உதவியாளன் பாஸ்கரன் இல்லத் திருமண விழா என்ற அளவில் நின்று விடுவது அல்ல .இது என் வீட்டுத் திருமண விழா; உங்கள் வீட்டுத் திருமண விழா; நம் அனைவரின் வீட்டுத் திருமண விழா .
காலம் எனக்கு இரண்டு மகன்களைத் தந்தது. ஆனால்எனக்கு மகளைத் தரவில்லை. என் தம்பி பாஸ்கரனின் மகளை , மகளாகத் தந்திருக்கிறது .ஓவியாவும் என் மகள் தான்.
இங்கே உள்ள எழுச்சியைப் பார்க்கும் போது கபிலனுக்கும் மதன் கார்க்கிக்கும் இருந்த விழா எழுச்சியை மீண்டும் பார்ப்பதாக உணர்கிறேன்.
இங்கே வந்திருப்பவர்களில் பாதிப் பேரின் பெயராவது எனக்குத் தெரியும். . இங்கே வந்திருக்கிற கூட்டம் எனக்காக வந்தது என்று நான் நினைத்தால் நான் ஏமாந்து போவேன். இங்கே வந்திருக்கிற கூட்டம் பாஸ்கரின் அன்புக்காக வந்த கூட்டம். இங்கே மதுரை ,தேனி, திண்டுக்கல் ,திருவாரூர் , நாகப்பட்டினம் ,சென்னை என்று பல மாவட்டங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது தமிழ்நாட்டையே பார்ப்பது போல உணர்கிறேன்.
என்னால் பாஸ்கரன் வளர்ந்திருப்பதாக சொல்வது ஒரு கூற்று. அதேபோல் பாஸ்கரனால் நானும் வளர்ந்திருக்கிறேன் என்பதும் ஒரு கூற்று..
என்உதவியாளனுக்கு நான் எதிர்பார்த்த எல்லாத் தகுதிகளும் பாஸ்கரனுக்கு இருந்தன.
நீங்கள் ஒரு பாடலைக்கேட்கிற போது ஓராண்டுக்குப் பிறகுதான் அது என்ன வரி என்பது உங்கள் காதுக்கு கேட்கிறது. ஆனால் அதை 12 மாதங்களுக்கு முன்பே எழுதிக் கொண்டு போய் கொடுக்கும் முதல் ஆள் பாஸ்கரன்தான். இப்படி முதல்மரியாதை பாஸ்கரன், சிந்துபைரவி பாஸ்கரன், பூவேபூச்சூடவா பாஸ்கரன், ரோஜா பாஸ்கரன், அண்ணாமலை, பாட்ஷா, முத்து, எல்லாமே பாஸ்கரன்கையால் எழுதி பாஸ்கரன் கையெழுத்தில்தான் போகும்..
பாஸ்கரன் கையெழுத்தில் இருப்பதைத் திருத்துவதற்கு யாருக்கும் தோன்றாது. இந்த அழகிய கையெழுத்தை எப்படி மாற்றுவது என்று பலரும் யோசிப்பார்கள். அந்த வரிகள் ஒலிப்பதிவுக் கூடம் செல்கிற போது பாஸ்கரன் கையெழுத்தில் இருப்பதைப்பார்த்து விட்டு இது வைரமுத்து எழுதிய பாட்டுதானே என்று எஸ்.பி.பி சொல்லியிருக்கிறார்., சித்ரா சொல்லியிருக்கிறார்., எஸ்.ஜானகி சொல்லியிருக்கிறார்.
தட்டச்சு வந்த பிறகுஎழுதி எழுதி உனக்கு கை தேய்ந்து விட்டது என்று கணினியில் இனி தட்டச்சு செய் என்று வாங்கிக் கொடுத்தேன். மூன்று மாதத்தில் தட்டச்சு பழகிவிட்டார். இப்போது தட்டச்சில் பாடல் போகிறது.
மணிரத்னம் ஒரு முறை கூறினார் பாடல் நன்றாக இருக்கிறது ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது என்றார். பிறகு யோசித்த போது பாஸ்கரனின் கையெழுத்து இல்லை என்று தெரிந்தது. பாஸ்கரன் கையெழுத்தை அந்த அளவுக்கு பார்த்துப் பழகியிருக்கிறார்கள்.
மூன்று மாதங்களுக்கு முன்பு கோவை சிறையிலிருந்து கைதி பதுமைராஜன் என்பவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். என் பாடல்களை யெல்லாம் ஆய்வு செய்து பலபக்கங்களில் நீண்ட கடிதம் எழுதியிருந்தார். தனக்குள்ள ஒரே விருப்பமாக என்னிடமிருந்து ஒரு கடிதம் கேட்டிருந்தார்.
ஒரு கடிதம் தட்டச்சில் அடித்து அனுப்பினோம். ஒருவாரம் கழித்து அவரிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் ‘ உங்கள் கையொப்பம் இருந்தது ஆனால் உங்கள் கையெழுத்து இல்லையே,. 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு கடிதம் வந்ததது அதிலுள்ளதைப் போலில்லையே.முன்பு வந்த கடிதத்தில் உள்ளதைப்போல உங்கள் கையெழுத்து இல்லையே ‘என்று எழுதியிருந்தார். உடனே தட்டச்சில் அடித்து அனுப்பியதை பாஸ்கரன் கையால் எழுதி மீண்டும் அனுப்பினோம்.
இப்படி பாஸ்கரனின் கையெழுத்துக்கு ஏங்குகிற கூட்டம் இருக்கிறது.
நான் மதுரை மண்ணைச் சேர்ந்தவன். பாஸ்கரன் தஞ்சைமண்ணைச் சேர்ந்தவன்.முன்பெல்லாம் நான் மதுரை வட்டார வழக்கில் வந்தாச்சு என்று கூறினால், பாஸ்கரன் தஞ்சை வட்டார வழக்கில் வந்தாச்சி என்றுதான் எழுதுவான். நான் திருத்துவேன். போகப்போக அவனுக்கு மதுரை மண்ணைச் சேர்ந்த வட்டார வழக்கு பழகி விட்டது என்றால் என்னுடன் எந்த அளவுக்கு ஐக்கியமாகியிருக்க வேண்டும்.?
நான் கவிதை, பாடல் எழுதும் போது மட்டும் என் கைப்பட எழுதுவேன் .காரணம் இரு சொற்களுக்கிடையே இடைவெளி விடுவேன். அது சிலநேரம் சில நிமிடமாக இருக்கும், சிலநேரம் மணிகளாக இருக்கும்; சிலநேரம்நாட்களாகக் கூடஇருக்கும். –
ஆனால் உரை நடை என்பது அப்படியல்ல. நான் சொல்லும் போது சொற்கள்வேக மாக வந்து விழும். அப்படி வேகமாக நான் சொல்லச் சொல்ல எழுதிய வைதான் சிகரங்களை நோக்கி, காவிநிறத்தில் ஒரு காதல் ,போர்க்களமும் இரண்டு பூக்களும், தண்ணீர் தேசம் ,கருவாச்சி காவியம்போன்ற எல்லாமே. நான் என்னை மறந்து லயத்தில் கொட்டிய சொற்களை ஒன்று விடாமல் பாஸ்கரன் எழுதியிருப்பான். ஒரு சொல் தவறியிருக்காது ஒரு எழுத்து தவறியிருக்காது .
இன்று தன் பிறந்த நாளையே தன் மகளின் சிறந்த நாளாக ,மணநாளாக மாற்றியிருக்கும் பாஸ்கரனை எப்படி ப்பா ராட்டுவது?
இந்த நன்னாளில் ,மணமகன் தம்பி ராஜ்குமாருக்கு என் வாழ்த்து. மணமகள் ஓவியாவுக்கும்என் வாழ்த்து.இன்று எத்தனை பெண்களுக்கு இல்லத்தில் தலைமையேற்கும் உற்சாக வாழ்க்கை கிடைக்கிறது?
வேலைக்குப் போன இடத்தில் யாரிடமோ அடிமையாக இருந்து விட்டு வீட்டில் சுதந்திரம் தேடுகிற நிலைதான் பெண்களுக்கு உள்ளது.ஓவியாவுக்கு இல்லத்தில் தலைமையேற்கும் அந்த உற்சாக வாழ்க்கை கிடைத்திருக்கிறது.
சிங்கப்பூர் செல்கிற மணமக்கள் அவ்வூரின் தூய்மை, ஒழுங்கு, பண்பாட்டுடன் தமிழையும் மறக்காதிருக்கட்டும்.
பாஸ்கரனுக்கு இன்னொருமகள் இருக்கிறாள். அவளுக்கும் நானே ஏற்று அனைத்தும் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.
எனக்கு செயலில் சுத்தம், நேர்த்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கோபம் வரும் .நானும் எதுவுமே தெரியாமல் சென்னை வந்த கிராமத்துக் காரன்தான்.மெல்ல மெல்ல கற்றுக் கற்று வளர்ந்தேன். அதே போலத்தான் பாஸ்கரனும் கற்றுக் கற்று வளர்ந்தான். அதைத் தக்கவைத்தான்.
ஒரு முறை கலைஞர் வீட்டுக்குப் போனபோது பாஸ்கரனைக்கலைஞரிடம் உங்கள் மாவட்டத்துக்காரன் வேதாரண்யம் என்று அறிமுகம் செய்து வைத்தேன். .அவன் கலைஞரை விழுந்து வணங்கிய போது சட்டைப்பையில் இருந்த சில்லறைகள் கிழே சிதறி விழுந்தன. அவற்றை ஒன்று விடாமல் பொறுக்கிச் சேகரித்த பிறகுதான் கலைஞரையும் என்னையும் பார்த்தான். அந்த அளவுக்கு சிக்கனக்காரன்.
வேதாரண்யம் மண் சுதந்திரப் போராட்ட வீரர்களை நாட்டுக்கு தந்திருக்கிறது; ஈழத் தமிழர்களுக்கு உதவியிருக்கிறது; உலகிற்கு உப்பு கொடுத்திருக்கிறது; தேவாரத்திற்கு பதிகங்கள் கொடுத்திருக்கிறது எனக்கு உதவியாளனைக் கொடுத்திருக்கிறது. அதற்காக வேதாரண்யம் மண்ணுக்கு நன்றி.
கண்ணதாசனுக்கு எட்டு உதவியாளர்கள் இருந்திருக்கிறார்கள். எனக்கு ஒரே ஒரு உதவியாளன்தான். எட்டு எருதுகள் இழுக்க வேண்டியதை இவன்ஒருவனே இழுத்திருக்கிறான்.
எனக்கொரு ஆசை 26 ஆண்டுகளுக்கு முன் பாஸ்கரன் சித்ரா திருமணத்தை நானே நடத்தி வைத்தேன். 27 ஆண்டுகளுக்குப் பின் இன்று அவர்களின் மகள் ஓவியா திருமணத்தை நானே நடத்தி வைத்தேன். எனக்கொரு ஆசை ஓவியாவின் பிள்ளைகள் திருமணத்தையும் நானே நடத்தி வைக்க வேண்டும்.
நான் அதிகம் உச்சரித்த வார்த்தை பல்லவி என்றால்,நான் அதிகம் உச்சரித்த பெயர் பாஸ்கரன் தான். பாஸ்கரன் தன் குடும்பத்தினருடன் இருந்ததை விட என்னுடன் இருந்த நாட்கள்தான் அதிகம் . அதற்காக தங்கை சித்ராவுக்கு என் தனிப்பட்ட நன்றி. .” என்று கூறி வாழ்த்தினார்.
தன்னைப்பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறியதைக்கேட்டு க்கொண்டிருந்த பாஸ்கரனின் கண்களிலிருந்து கண்ணாடியைத்தாண்டி கண்ணீ ர் வழிந்தோடியது. அவரால் நெகிழ்ச்சியில்அழுகையை அடக்க முடியவில்லை.