‘கிளாப்போர்டு புரொடக்ஷன்’ சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் ‘தப்பு தண்டா. இயக்குநர் பாலு மகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் ‘தப்பு தண்டா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் திருமதி அகிலா பாலு மகேந்திரா, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர் சக்தி சிதம்பரம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (மாநகரம்), இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (8 தோட்டாக்கள்), நடிகர் உதய், இயக்குநர் – நடிகர் பிரவீன்காந்த் மற்றும் தப்பு தண்டா படத்தின் படக்குழுவினர்களாகிய தயாரிப்பாளர் – கதாநாயகன் சத்யா, இயக்குநர் ஸ்ரீகண்டன், கதாநாயகி சுவேதா கய், அஜய் கோஷ், இ ராமதாஸ், ஜான் விஜய், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஒளிப்பதிவாளர் ஏ வினோத் பாரதி, படத்தொகுப்பாளர் எஸ் பி ராஜா சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் வில்லன் நடிகர் அஜய் கோஷ், மேடையில் மண்டியிட்டு தமிழக ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
“தமிழ் படங்களும், தமிழ் ரசிகர்களும், தமிழ் ஊடகம், பத்திரிகை மற்றும் இணையத்தள நண்பர்களும், ஒரு தரமான அங்கீகாரத்தை எனக்கு பெற்று தந்திருக்கின்றனர். இந்த கௌரவமே ஒரு நடிகனுக்கு மிக பெரிய சொத்து. விசாரணை, தப்பு தண்டா ஆகிய படங்களில் உள்ள என்னுடைய கதாபாத்திரங்கள், மற்றும் இங்கு உள்ளோரின் நல்லாசியுடன் தமிழ் திரையுலகில் நானும் ஒரு முன்னணி வில்லனாக வருவேன் என்ற நம்பிக்கையை தருகிறது.” என்று கூறினார் அஜய் கோஷ்
“நம் தமிழ் சினிமாவின் வருங்காலம், இந்த மேடையில் அமர்ந்து இருக்கும் இயக்குநர்கள் லோகேஷ் மற்றும் ஸ்ரீ கணேஷ் போன்ற திறமையான இயக்குநர்களின் கைகளில் தான் இருக்கின்றது. அவர்களின் வரிசையில் நிச்சயமாக இயக்குநர் ஸ்ரீகண்டனும் இடம் பெறுவார் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். தப்பு தண்டா படத்தின் பாடல்களும், டிரைலரும் என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது. ரசிகர்களின் உள்ளங்களை வெல்ல கூடிய எல்லா சிறப்பம்சங்களும் இந்த படத்தில் நிறைந்து இருக்கின்றது” என்று கூறினார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு
“திரையுலகில் முதல் முதலாக அடியெடுத்து வைத்திருக்கும் எனக்கு நடிப்பு என்பது ஆரம்பத்தில் சற்று சவாலாகவே இருந்தது. ஆனால் என்னுடைய இயக்குநர் ஸ்ரீகண்டன் அதை மிகவும் எளிதாக மாற்றிவிட்டார். எங்கள் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக தப்பு தண்டா திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு கோடை விருந்தாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தப்பு தண்டா படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான சத்யா.
“படத்தின் தலைப்பும், டிரைலரும் சற்று திரில்லர் பாணியில் இருந்தாலும், இந்த படத்தை எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் தான் உருவாக்கி இருக்கின்றேன். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோரின் நடிப்பு நிச்சயமாக அனைவராலும் பாரட்டப்படும். தப்பு தண்டா படத்திற்கு பிறகு அஜய் கோஷின் வில்லன் அடையாளம் தமிழ் திரையுலகில் மேலும் வலு ப் பெறும். இந்த மே மாதத்தில் எல்லோராலும் பேசப்படும் படமாக எங்களின் தப்பு தண்டா இருக்கும். நான் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவன். அவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் மனைவி அகிலா அம்மா வந்து என்னை வாழ்த்தியது எனக்கு வாழ்நாள் பெருமை ” என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் இயக்குநர் ஸ்ரீகண்டன்.