விஜய் ஆண்டனி,ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், ஒய்.ஜி. மகேந்திரன்,யோகி பாபு,சங்கீதா, சாயாசிங், மதுமிதா கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், மாஸ்டர் பிரணவ் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்களாக ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்,
இசை – இளையராஜா,
பாடல்கள் – பழனிபாரதி, A.R.P ஜெய்ராம்,கலை – மிலன்,
ஸ்டண்ட் – அனல் அரசு,
எடிட்டிங் – புவன் சந்திரசேகர்,
நடனம் – பிருந்தா, சதீஷ் என தொழில்நுட்பக் கூட்டணி சேர்த்துக் கொண்டு, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாபு யோகேஸ்வரன்.
தயாரிப்பு – கெளசல்யா ராணி.
படத்தின் கதை என்ன?
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன தமிழரசன் மேலதிகாரியின் சொல்பேச்சு கேட்காமல் தனது மனசாட்சியின் படி நடந்து கொள்பவர். மேலதிகாரி சொல்வது எல்லாவற்றிற்கும் தலையாட்டாமல் கேட்க மறுப்பதால் ஒரு கட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவரது மகனுக்கு இதயத்தில் பிரச்சினை, மாற்று இதயம் பொருத்த வேண்டும் ,அதற்கு எழுபது லட்ச ரூபாய் மருத்துவமனையில் கேட்கிறார்கள். 15 லட்ச ரூபாய் திரட்டிக் கொடுக்கிறார் . மருத்துவமனை நிர்வாகம் பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறது.இதய மாற்று அறுவை சிகிச்சைப் பட்டியலில் தமிழரசனின் மகன் பெயர் இடம் பெறவே இல்லை.இதனால் தவித்துப்போன தமிழரசன் ஒரு கட்டத்தில் துப்பாக்கி தூக்குகிறார் .அந்த மருத்துவமனையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.ஒரு கட்டத்தில் தான் தன் மகனுக்குத் தனது இதயத்தையே தானமாக கொடுத்து உயிர் விடத் துணிகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
எப்போதும் விஜய் ஆண்டனி தனக்குரிய பாத்திரத்தை தனக்காக அளவெடுத்து தைத்த சட்டை போல் அணிந்து கொள்பவர்.அதிகம் பேசாமல் ஆர்ப்பாட்டம் செய்யாமல் நீள வசனங்கள் பேசாமல் தன் பாத்திரங்களைத் தேர்வு செய்பவர் .அப்படித்தான் இதிலும் அந்த தமிழரசன் பாத்திரம் அவருக்குப் பொருந்துகிறது.வழக்கம் போலவே இயல்பாக நடித்துள்ளார்.
முதல் பாதியில் சாது மிரண்டு காடு கொள்ளாத ஆக்சன் பாதையில் படம் செல்கிறது.படத்தின் மறுபாதியில் பாசமுள்ள தகப்பனாக நடிப்பில் வீரியம் காட்டுகிறார்.
நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் , பாசத்தில் மகனைக் காப்பாற்றுவதற்காக எந்த எல்லை வரையும் செல்லும் தந்தையாகவும் அவர் நடிப்பில் பளிச்சிடுகிறார் விஜய்ஆண்டனி.
அவரது மனைவியாக வரும் ரம்யா நம்பீசன் குறைவில்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார். சுரேஷ்கோபி நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழில் தெரிகிறார்.மருத்துவமனையின் நிர்பந்தத்தில் இயங்கும் ஒரு மனிதாபிமான டாக்டராகவும் சுரேஷ்கோபி மிகப் பிரமாதமாக நடித்துள்ளார்.அதேபோல் மருத்துவமனை எம்டியாக வரும் சங்கீதாவும் போலீஸ் கமிஷனர் ஆக வரும் ராதாரவியும் தமிழரசனின் உயர் அதிகாரியாக வரும் சோனு சூட்டும் அவரவர் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.
ஆனால் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் யோகி பாபுவும் உடன் இருக்கும் கும்கி அஸ்வினும் நகைச்சுவை என்ற பெயரில் பாடாய்ப் படுத்துகிறார்கள்.அவர்கள் தோன்றும் காட்சிகள் எரிச்சல் ஏரியா.
ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு நம்மை மருத்துவமனைக்குள் வாழ வைக்கிறது.இசை இளையராஜா. வழக்கம் போல அவர் தன் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார்.எஸ் பி பி கடைசியாகப் பாடிய பாடல் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது சிறப்பு.
மருத்துவமனை வசூல் மோசடிகள் பற்றி நிறைய படங்கள் வந்திருப்பதால் சில காட்சிகள் முன்பே பார்த்த உணர்வைத் தருகின்றன.
இருந்தாலும் தன் மகனுக்காக இயங்கும் இந்த பாசக்கார தந்தையாக விஜய்ஆண்டனி வெளிப்படும் காட்சிகள் நிறைந்த எபிசோட் கண் கலங்க வைக்கும்.இடையிடையே செறிவான வசனங்களும் இயக்குநரின் எழுத்தில் மிளிர்கின்றன. மொத்தத்தில் தமிழரசன் ஆக்சன் செண்டிமெண்ட் கலந்த கமர்சியல் விருந்து எனலாம்.