நாயகன் கார்த்தி கோவாவில் ஒரு திருடனாக சகல கெட்ட சகவாசங்களோடு வாழ்க்கையைக் கழித்து வருகிறார். ஒரு நாள் அவரை போலீஸ் துரத்த பின் அவரது வாழ்க்கையே மாறிப்போகிறது.
மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் பெரும் அரசியல் பிரமுகராக இருப்பவர் சத்யராஜ், அவருக்கு மனைவியாக நடிகை சீதா, அம்மாவாக சௌகார் ஜானகி, மகளாக ஜோதிகா என குடும்பம்.
சத்யராஜின் மகன் சிறுவயதில் காணாமல் போக, 15 வருடங்கள் கழித்து கார்த்தியின் உருவில் மீண்டும் வீடு வந்து சேர ஒரே மகிழ்ச்சி தான். ஆனால் தம்பியை தொலைத்த சோகம் ஒரு பக்கம், மறுபக்கம் வந்துள்ள தம்பியை கொண்டாடமுடியாமல் சந்தேகத்தில் திணறுகிறது அக்காவின் நெஞ்சம்.
சத்யராஜின் மகன் காணாமல் போன பின்னணி என்ன? உண்மையில் என்ன நடந்தது? தம்பி கார்த்தியை கொலை செய்ய துணிந்தது யார்? என்பதே இந்த தம்பியின் கதை.
ஜீத்து ஜோசப்பிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான குடும்பக் கதை சார்ந்த த்ரில்லர் படம். த்ரிஷ்யம் அளவுக்கு இல்லை என்றாலும் அந்தப் படத்தைவிட அதிக திருப்பங்களைக் கொண்ட படம் இது.
படத்தின் முதல் பாதியில் திரைக்கதை மிதவேகத்தில் நகர்கிறது. அதைப் பிற்பாதியில் சரிசெய்து சமன்செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர். படத்தில் சில பாடல்களே இருக்கின்றன.அவை இல்லாமலும் இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கக்கூடும்.
படத்தின் முக்கியமான பலம் துல்லியமான திரைக்கதை. அதற்கு அடுத்தபடியாக பொருத்தமான நடிகர்கள் தேர்வு. முழுப்படத்திலும் தனித்து பிரகாசிக்கிறார் சத்யராஜ். அவர் வழக்கம் போல அனுபவம் வாய்ந்த திறமையான நடிப்பைக்காட்ட தம்பி நல்ல கதைக்களம். முதல் பாதியில் ஒரு தந்தையாகவும், ஊர் தலைவனாக இவர் சந்திக்கும் சூழ்நிலைகள் நம்மை கொஞ்சம் பரிதாபப்படவைக்கிறது.பிற்பாதி வேறு ரகம். அடுத்தபடியாக கார்த்தியும் ஜோதிகாவும் தங்கள் பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
’கைதி’க்குப்பின் கார்த்திக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்லலாம். திருடனாகவும் ஒரு மகனாகவும் அவரின் நடிப்பு சுவாரஸ்யம்.
ஜோதிகா கண்டிப்புடன், பாசமும், ஏக்கமும் நிறைந்த அக்காவாக வருகிறார்.
சீதா அமைதியான அம்மா, மகன் காணாமல் போன ஏக்கம் ஒரு பக்கம் மகள் ஜோதிகாவை அமைதிப்படுத்த முடியாத தாயாக தடுமாறும் சூழ்நிலை மறுபக்கம் என பொறுமை காட்டுகிறார்.
பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகி இப்படத்தில் வாய் பேச முடியாமல், தான் சொல்ல வந்ததை புரியவைக்க முடியாமல் அவர் அவஸ்தை படுவது நல்லநடிப்பு.
சில காட்சிகளே வரும் அம்மு அபிராமிகூட ஒரு காட்சியில் மனம் கவர் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு. காட்சிக் கோணங்களிலும் ஒளி அமைப்பிலும் அசத்தியுள்ளார்.
கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் எளிமை இனிமை ரகம்.
மொத்தத்தில் ’தம்பி ’ சற்று மெதுவாக நகர்ந்தாலும் திருப்பங்கள் சுவாரஸ்யம்.த்ரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் ரசிக்கக்கூடிய படம் இது. ’தம்பி ’ தளர்வில்லாமல் கதைக்குள் நம்மை கொண்டு செல்கிறான். தாராளமாகப் பார்க்கலாம்.