
‘ஒரு குப்பை கதை’ படத்தின் இயக்குனர் காளி ரங்கசாமியும் இந்த ஒரு சிலர் பட்டியலில் ஒருவராக இடம் பிடிக்கிறார்.
சமுதாயத்திற்கு பயன்படும் கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும் இந்தப்படம் கமர்ஷியலாகவும் இருக்கும் என கூறும் காளி ரங்கசாமி இந்தப்படம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்..
”சத்தியமங்கலம் பக்கத்தில் வீரப்பனூர் தான் என் சொந்த ஊர்.. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவன், அப்படி இப்படி என போராடி இயக்குனர் எழிலிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றினேன்.. பின்னர் இயக்குனர் அஸ்லமிடம் இணை இயக்குனராக சேர்ந்து ‘பாகன்’ படத்தில் வேலை பார்த்தேன்.. இதோ இப்போது ‘ஒரு குப்பை கதை’ படம் மூலம் இயக்குநராகியுள்ளேன்..

எனக்கு சின்னவயதில் இருந்தே கமர்ஷியல் படங்களை விட, நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் கொஞ்சம் சீரியசான படங்கள் தான் பிடிக்கும்.. கமர்ஷியல் படங்களை அந்த நேரத்தில் ரசித்துவிட்டு மறந்துவிடுவோம்.. ஆனால் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற படங்கள் நீண்ட நாட்கள் நம் மனதில் நிற்கும். பின்னாளில் நாம் படம் இயக்கினால் அப்படி ஒரு படத்தை தான் இயக்கவேண்டும் என அப்போதே முடிவுசெய்து விட்டேன்.

நம் தினசரி வாழ்க்கையில் தவிர்க்கமுடியாமல், ஏதோ ஒரு விதத்தில் நாம் சந்திக்கும் கதாபாத்திரம் தான் குப்பை அள்ளும் மனிதர்கள்.. அவர்களை பார்க்கும்போதெல்லாம் இவர்களின் கதாபாத்திரத்தை படத்தில் கொண்டுவரவேண்டும் என நினைப்பதுண்டு.. அதேசமயம் குப்பை அள்ளுபவர்களின் வாழ்க்கையை, அவர்களது பிரச்சனைகளை மையப்படுத்தி இந்தப்படத்தை எடுக்கவில்லை. குப்பை அள்ளும் மனிதனின் ஒருவனின் வாழ்க்கை, அவனது குடும்பம், அதில் ஏற்படும் பிரச்சனை என்றுதான் கதை சொல்லியிருக்கிறேன்.
இந்தக்கதையில் அப்பாவியான கணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு நபரை தேடவேண்டும் என நினைத்தபோது கொஞ்சம் புதிய முகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கேற்றவாறு டான்ஸ் மாஸ்டர் தினேஷை அழைத்து வந்தார் தயாரிப்பாளர் அஸ்லம். அவரும் நான் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரத்திற்கு இயல்பாக உயிர்கொடுத்திருக்கிறார்.
அவரை கதாநாயகன் ஆக்கியபிறகு அவரது உயரத்திற்கு ஹீரோயின் தேடுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. அதேசமயம் மனப்பொருத்தம் இல்லாமல் வாழும் கணவன்-மனைவி பற்றிய கதை என்பதால் நாயகி, நாயகனை விட கொஞ்சம் உயரமாக இருந்தாலும், அது கதைக்கான லாஜிக்காகவே இருக்கும் என்பதால் அந்த கோணத்தில் நாயகியை தேடினோம்..
ஆனால் தினேஷ் மாஸ்டர் ஹீரோவா என ஆர்வமாக நடிக்க வந்த சில கதாநாயகிகள் கூட, கதாநாயகி கேரக்டரை பற்றி கேட்டதும் இதில் நடிக்க தயங்கினார்கள்.. காரணம் கதைப்படி ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் இந்த கதையை கேட்டதும் உடனே சம்மதம் சொல்லிவிட்டார் ‘வழக்கு எண்’ மனிஷா. நாயகனுக்கு சமமான கதாபாத்திரம், கதையை தனது தோளில் சுமந்து செல்லக்கூடிய கதாபாத்திரம்.. அதை சரியாக செய்திருக்கிறார் மனிஷா.
குடும்ப கதை என்பதே கத்தி மேல் நடப்பது மாதிரியான விஷயம்.. கொஞ்சம் அசந்தால் சீரியல் மாதிரி ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. அதனால் படம் ரசிகர்களுக்கு போராடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.. அந்த வேலையை யோகிபாபு படம் முழுக்க கச்சிதமாக செய்திருக்கிறார்.
நம் சமுதாயத்தில் குடும்ப அமைப்பு என்பது மிக முக்கியமானது.. அதை எக்காரணம் கொண்டும் சிதைய விடக்கூடாது.. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளை ஊதி பெரிதாக்காமல் விட்டுக்கொடுத்து போய்விடுவது நல்லது, அப்படி இல்லாவிட்டால் குடும்பத்தை அது எப்படி பாதிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன்.
தயாரிப்பாளராக மாறிய இயக்குனர் அஸ்லம் இந்தப்படத்தை எடுத்து முடிக்க ரொம்பவும் பக்கபலமாக இருந்தார்.. கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் படப்பிடிப்பு நடத்தியபோது சிலர் குடித்துவிட்டு, பணம் கேட்டு படப்பிடிப்பை நடத்தவிடாமல் தகராறு செய்தார்கள். உடனே தயாரிப்பாளர் அஸ்லம் அவர்கள் முன்னே வந்து ஒரு மிகப்பெரிய வி.ஐ.பிக்கு போன் செய்வது போல பாவ்லா செய்தார்.
உடனே பயந்துபோன அவர்கள், ஏன் சார் அவருக்கு போன் போட்டீங்க.. இது அவரு படமா என கேட்டு, அப்படியே சுபாவம் மாறி, எங்களுக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. இப்படி படம் இறுதிக்கட்டத்தை எட்டும் வரை பல சிக்கல்களை திறமையாக கையாண்டார் அஸ்லம். இறுதியாக இந்தப்படம் உதயநிதி சாரின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைகளுக்கு போன பிறகு இந்தப்படத்தின் வெற்றி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்” என்கிறார் இயக்குநர் காளி ரங்கசாமி.