வெப் சீரிஸ் என்று அழைக்கப்படும் இணையத் தொடர்கள் படைப்பாளிகளுக்குப் புதிய சுதந்திரம் அளிக்கும் தளமாக உள்ளன.தணிக்கைக் கடிவாளம் இல்லாததால் பல புரட்சிகரமான கருத்துக்களையும் சிந்தனைகளையும் சொல்வதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளன. அதே வேளை சினிமாவில் தடை செய்யப்பட்டவற்றை தாராளமாக திணிப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாகக் கருது வோரும் உண்டு.
இந்நிலையில் அரசியல் பின்னணியைக் கதையாகக் கொண்ட ஒரு தொடராக ‘தலைமைச் செயலகம்’ உருவாகி உள்ளது.
கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒய் ஜி .மகேந்திரன், சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.வணிகப் படங்களிலேயே செவ்வியல் முயற்சிகளை மேற்கொள்ளும் வசந்த பாலன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார்.வைடு ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ரவிக்குமார் படத்தொகுப்பு செய்திருக்கும் இந்தத் தொடரை ராடன் நிறுவனத்தின் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கிறார்.
இந்தத் தொடர் எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. இம்மாதம் 17 ஆம் தேதி ஜீ5 இணையத்தில் வெளியாக இருக்கிறது.
அரசியல் என்பது ஒரு போர்க்களம் போன்றது. இங்கே விசுவாசம், பகைமை, துரோகம் போன்ற பல்வேறு மனித உணர்ச்சிகள் வெளிப்படும் .இந்த உணர்ச்சிகளைப் பயன்படுத்தி தான் இந்தத் தொடர் உருவாகியுள்ளது.
சரி தொடரின் கதை என்ன?
அருணாச்சலம் தமிழக முதல்வர் . அவர் மீது ஊழல் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.வழக்கு சில காலம் இழுத்துக் கொண்டிருக்கிறது.கழுத்தை நெருங்கி வரும் கத்தி போல ஒரு கட்டத்தில் தீர்ப்பு முதல்வருக்கு எதிராக வரும் சூழல். இவ்வழக்கு ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கிறது. முதல்வர் சிறை சென்றால் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி முதல்வரின் குடும்பத்துக்குள்ளும் கட்சிக்குள்ளும் நிலவுகிறது.முதல்வர் நாற்காலிக்கு சில கழுகுகளும் கழுதைப்புலிகளும் முயற்சி செய்கின்றன.பிறகு என்ன நடந்தது ?விடை தேடும் முயற்சிதான் தலைமைச் செயலகம்.
நடிகர் கிஷோர் தான் முதலமைச்சர் அருணாசலமாக நடித்துள்ளார். கிஷோரின் மூத்த மகள் ரம்யா நம்பீசன், கிஷோரின் இரண்டாவது மருமகன் நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவி ஆசையில் இருக்கிறார்கள்.
இந்த சூழலில், கிஷோர் இன் விசுவாசியாகவும் ஆலோசகராகவும் நெருக்கமாக இருக்கும் ஷ்ரேயா ரெட்டியும் ஆசைப்படுகிறார்.எதையும் வெளிப்படையாகப் பேசுவதால் ஷ்ரேயா மீது முதல்வருக்கு மரியாதை உண்டு.இது ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம்
ஜார்கண்ட் மாநிலத்தில் பல கொலைகளைச் செய்து தப்பி வந்த துர்கா என்ற கதாபாத்திரத்தைத் தேடி, சிபிஐ வலை வீசிககொண்டுள்ளது.தொடர்ச்சியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மர்மமாகக் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
தமிழகத்துக் கொலை ஒன்றை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான பரத்,தொடர் கொலைகளையும் மோப்பம் பிடிக்கிறார்.வேறொரு வழி கிடைக்கிறது. அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? முதல்வர் சிறை சென்றாரா ? பிறகு என்ன நடந்தது ? போன்ற விடை தெரியாத கேள்விகள் எல்லாம் ஒரு புள்ளியில் வந்து நிற்கின்றன அதற்கு விடை தேடும் முயற்சிதான் ‘தலைமைச் செயலகம்’ தொடர்.
கதையின் முதல்வர் என்கிற பிரதானமான பாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகர் கிஷோர். பாத்திரம் உணர்ந்து தோற்றம் உடல் மொழி, வாய்மொழி என்று அனைத்திலும் அவர் ஸ்கோர் செய்கிறார்.சிறு சிறு அசைவுகளில் கூட பாத்திரத்தின் கனபரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இன்னொரு பிரதான பாத்திரம் ஷ்ரேயா ரெட்டிக்கு.அந்தக் கொற்றவை பாத்திரத்தில் தனது பண்பட்ட நடிப்பை வழங்கி அதை முழுமை செய்துள்ளார்.
போலீஸ் அதிகாரியாக நடித்த பரத், மிகப்பொருத்தம்.சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனனின் அனாயாசமான விசாரணைப் பயணம் ரசிக்க வைப்பவை.
முதல்வரின் மகளாக வரும் ரம்யா நம்பீசன் தனது பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.இவர்களைத் தொடர்ந்து , கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட கதாபாத்திரங்களும் தங்களுக்கு இட்ட பணியைச் செவ்வனே செய்துள்ளனர்.
இதுவரை நாம் பார்த்த இந்திய அரசியல், தமிழக அரசியல் இரண்டையும் கலந்து ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தை சர்ச்சைக்கு இடமில்லாத வகையில் பாதுகாப்பான மைதானத்தில் விளையாடி உள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.
தமிழகத்தில் தென்னகத்தின் பேசு பொருள்களாக இருந்த கண்டெய்னர், ஹெலிகாப்டர் விபத்து, ஊழல் வழக்கு வேறு மாநில விசாரணை, சிறை சென்ற முதல்வர்,முதல்வரின் வாரிசு,கட்சிக்குள் துரோகம் , மாநில அரசைக் கைப்பற்ற துடிக்கும் மத்திய அரசு போன்றவை அப்படி தொடரில் இடம் பெற்றுள்ளன.ஜனநாயகத்திற்கும் ஊழலுக்கும் உள்ள தொடர்புகள் படத்தில் பேசப்படுகின்றன.ஜனநாயகத்தின் பலமும் காட்டப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட இந்த கதையே ஒரு பரபரப்பான திரில்லர் தொடர் போல் மாறி உள்ளது.
அரசியல் தொடராக வந்திருக்கும் இப்படைப்பு அனைவராலும் விரும்பப்படும்.
இந்தியா வெங்கும் சுற்றிப் படமாக்கி இருக்கும் வைடு ஆங்கிள் ரவிசங்கரின் கேமரா ஓடிஓடிப் படப்பதிவு செய்துள்ளது.ஜிப்ரானின் பின்னணி இசைதொடருக்கு முதிர்ந்த தோற்றத்தை கொடுத்துள்ளது. அரசியல் பின்னணி கொண்ட இணையத் தொடரை ஒரு திருப்தி அளிக்கும் படைப்பாக உருவாக்கிய இயக்குநர் வசந்தபாலன் வெற்றி பெற்றுள்ளார்.