‘திரௌபதி 2’ திரைப்பட விமர்சனம்

நட்டி நடராஜ், ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா , ஒய். ஜி. மகேந்திரன்,வேலராமமூர்த்தி, தேவயானி சர்மா ,பரணி, திவி , சரவண சுப்பையா, அருணோதயன், லட்சுமணன்,சிராக் ஜானி ,தினேஷ் லம்பா நடித்துள்ளனர். மோகன் ஜி இயக்கியுள்ளார் .ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிலிப்ராஜ் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நேதாஜி ப்ரொடெக்ஷன் சார்பில் சோழா சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.

ரிச்சர்ட் ரிஷி சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.அந்தப் பகுதி மக்கள் படிக்காதவர்களாக இருக்கிறார்கள். விவசாயம் பார்த்து வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சூழலில் அந்த ஊரில் அவர்களது வாழ்வாதாரமாக இருக்கும் நிலம் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது என்றும் நிலத்தை விட்டுக் கொடுத்து காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என்றும் தகவல் வருகிறது. மிகவும் பதற்றமாக இருக்கும் மக்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள். இவ்வூரில் பல நூறு ஆண்டுகளாக நாமே இந்த மலைக் கோயிலை வைத்து வழிபட்டு வருகிறோம். அப்படி எல்லாம் ஆதாரம் இருக்கும்போது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்களுக்கு எப்படிச் சொந்தமாகும் என்று அவர்கள் திடுக்கட்டு நிற்கிறார்கள். அந்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வருகிற இரண்டு பெண்கள்,தங்கள் மூதாதையர்கள் தான் அந்தக் கோயிலைக் கட்டினார்கள் என்றும்,மீண்டும் புரைமைத்துக் கட்டப் போகிறோம் என்று கூறி அந்தக் கோவிலுக்குச் செல்கிறார்கள். அவர்களில் ஒரு பெண்ணுக்கு உடலில் அசாதாரண மாற்றம் நிகழ்கிறது .சன்னதம் வந்தது போல் பேசுகிறார். தன் பூர்வ ஜென்மக் கதையைக் கூறும் போது அங்கு இருக்கும் ரிச்சர்ட் தான் அப்போது அவரது கணவர் என்கிறார்.அப்படியே சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு செல்கிறது கதை.

முன் கதை விரிகிறது.14ஆம் நூற்றாண்டில் டில்லியை ஆண்ட துக்ளக், தேவகிரியை ஆண்ட அவர் தம்பி பல்வான், மதுரையை ஆண்ட தம்பானி ஆகிய முஸ்லிம் ஆட்சியாளர்களால் முஸ்லிம் அல்லாத மக்கள் பட்ட பாடுகளைக் காட்டுகிறார்கள்.ஜிசியா வரி கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள் அதனை எதிர்க்கிறவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு மறைக்கப்பட்ட வரலாற்றை எடுத்து புனைவாக மாற்றி உருவாகி இருக்கும் படம் தான் இந்த ’திரௌபதி 2’.

திருவண்ணாமலைப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் வீர வெள்ளாளர், அவரது நம்பிக்கைக்குரிய விசுவாசி வீரசிம்ம காடவராயர் ஆகியோரது வீரம் தியாகம் விசுவாசம் நிறைந்த வரலாற்றையும் கூறுகிறது படம்.
மன்னரின் உயிரைக் காப்பாற்ற தியாகம் செய்யும் ரிச்சர்ட் , அவர்களுக்குள் நடக்கும் விசுவாசத்தை சந்தேகம் கொள்ளும் வீரசிம்மரின் மனைவி திரௌபதி என்ன செய்கிறார்?  தனது கணவர் குடும்பத்தை விட நாட்டைப் பெரிதாக நேசிப்பவர் ஆக மாறி முஸ்லிம் மன்னர்களுக்கு எதிராக அவர் எடுக்கும் வீரதீர முடிவுகளும் அதன் விளைவுகளும் என்ன என்பதை நோக்கிச் செல்கிற கதை உச்சகட்டத்தில் முடிகிறது.

முஸ்லிம் மன்னர்களின் மதவெறி பிடித்த துன்புறுத்தலால் மதமாற்றம் செய்யும் கட்டாயத்தினால் மக்கள் படும் அல்லல்களும், ஆட்சி அதிகாரத்திற்குள், புகுந்து சாம்ராஜ்யத்தை வீழ்த்தும் தந்திரங்களும் அதற்குத் துணை போகிறவர்களின் துரோகங்களும் அதனை முறியடிக்கும் விசுவாச மனிதர்களும் என்று பல்வேறு உணர்ச்சிகளையும் கதை மாந்தர்கள் மூலம் காட்சிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

வீரவல்லாளர் பாத்திரத்தில் நட்டி நடராஜ் நடித்துள்ளார்.அவர் சிறந்த பக்திமானாக இருக்கிறார். திருவண்ணாமலை கோபுரத்தைக் கட்டுகிறார்.பிற மத மன்னர்களால் அவருக்கு நேரும் துன்பங்களும் அவருக்கு நேரும் முடிவுகளும் பார்ப்பவரைத் திகில் ஊட்டச் செய்யும். நட்டியின் உயரமும் தோற்றமும் பாத்திரத்திற்குச் சாதகமாக இருக்கிறது . உடல் மொழியும் வசனங்களுமஅவரது தோற்றத்திற்கு துணை செய்கின்றன.அவருக்கு நேரும் முடிவால் பார்வையாளர்கள் மத்தியில் அனுதாபத்தை அள்ளுகிறார்.
வீரசிம்ம காடவராயர் பாத்திரத்தில் வரும் ரிச்சர்ட்டின்  நடிப்பு, சண்டைக் காட்சிகள், மன்னரிடம் உள்ள விசுவாசம் ,புத்திசாலித்தனமான காய் நகர்த்தல்கள் என  ரசிக்க வைக்கின்றன.தோற்றத்தை மேம்படுத்தி நடிப்பிலும் மேலும் நுட்ப முக பாவனைகளைக் காட்டி இருக்கலாம்.

ரிச்சர்ட் மனைவியாக வரும் ரக்ஷனா ஏற்றுள்ள திரௌபதி பாத்திரம் படம் பார்ப்பவர்களை ஆக்கிரமிக்கிறது.விசுவாசம் ,வீரம் ,தியாகம், புத்திசாலித்தனம், சமயோசிதம் என்று அனைத்தும் கொண்ட பாத்திரமாக அது முழுமை பெற்றுள்ளது. அதில் தன்னை நம்பிக்கைக்குரிய நடிகையாக அவர் வெளிப்படுத்தி உள்ளார். தோற்றமும் நடிப்பும் அவருக்குக் கை கொடுத்துள்ளன.சபாஷ்.
அவர் மதுரை சுல்தானைப் பார்க்கும் காட்சிகள் சுவாரசியமான கட்டங்கள். வீரத் தமிழ் பெண்ணாகத் தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.

வில்லன்களாக எதிர்மறைக் குணச்சித்திரங்களாக.டெல்லி சுல்தான் ஆக வரும் சிராக் ஜானி, மதுரை தம்பானியாக வரும் தினேஷ் லம்பா , தேவகிரி சுல்தான் பல்வான் ஆக வரும் நடிகர் என அந்த நடிப்புக் கலைஞர்களும் தங்கள் பாத்திரத்தின் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் வசவை அள்ளுகிறார்கள்.

ராமபஜனை பாடிக்கொண்டு ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு உருகும் ராம பக்தராக ஒய்.ஜி. மகேந்திரன் கவனம் பெறுகிறார்.பிற துணைப் பாத்திரங்களில் வரும் வேலராமமூர்த்தி, தேவயானி சர்மா ,பரணி, திவி , சரவண சுப்பையா, அருணோதயன், லட்சுமணன் ஆகியோரும் தத்தம் பாத்திரங்களின் மூலம் பதிகிறார்கள்.

700 ஆண்டுகளுக்கு முந்தைய கோட்டைகள், படைகள், அரண்மனைகள், போர் வீரர்கள், கோயில்கள் ஆகியவற்றைக் கலை இயக்கத்தில் கண்முன் கொண்டு வந்துள்ளார்கள்.அதற்காக உழைத்துள்ளது காட்சிகளில் தெரிகிறது.அந்தக் காலத்து மண்ணின் மனிதர்கள் அவர்களது உடல் மொழி தோற்றம் உடைகள் போன்றவற்றிற்காக உழைத்துள்ளார்கள்.

ஜிப்ரானின் இசையும் பாடல்களும் படத்தைப் பட்ஜெட்டையும் தாண்டி தூக்கி நிறுத்துகின்றன .பிலிப்ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு தெளிவாக அழகாகக் காட்சிகளைக் கண் முன் நிறுத்துகிறது. ஆக்ஷன் சுந்தரின் சண்டை காட்சிகளும் ஓகே ரகம். .இருந்தாலும் திரைக்கதையில் மேலும் சுவாரசியத்தையும் தீவிரத்தையும் கூட்டியிருக்கலாம், மேலும் அழுத்தமான காட்சிகளை உருவாக்கி இருக்கலாம்.

இந்த மண்ணும் மனிதர்களும் எத்தனையோ போராட்டங்களையும் காயங்களையும் வலிகளையும் கடந்துதான் வந்து இப்போது நிலைகொண்டிருக்கிறார்கள். அப்படிச் சில காயங்களின் வடுக்களைத் தோண்டிப் பார்க்கும்போது தோன்றுகிற கதை தான் இது.மோகன்ஜி அதை எடுத்துக்கொண்டு திரைப்படமாக்கியுள்ளார்.

படப்பிடிப்பு நாட்களை எண்ணிப் பார்க்கும்போது மோகன் ஜி ஓர் அசுரத்தனமான உழைப்பைப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.படக் குழுவினரையும்  அப்படியே வேலை வாங்கி உள்ளார்.மற்றபடி மோகன்ஜியை ஒரு சாதாரணஉணர்ச்சிகரமான பிரச்சினை எடுத்துக் கொண்டு மசாலாப் படம் எடுக்கும் இயக்குநர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார் என்றே கூற வேண்டும்.

மொத்தத்தில் ’திரெளபதி 2’ ஒரு வரலாற்றுப் பதிவு.