‘தி அக்காலி’ திரைப்பட விமர்சனம்

இரு வேடங்களில் நாசர், ஜெய்குமார், தலைவாசல் விஜய், சுயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர் ,யாமினி, தாரணி , பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர் அலி, மனிஷா சபீர் நடித்துள்ளனர்.

முகமது ஆசிப் ஹமீது இயக்கி உள்ளார் .கிரி மர்ஃபி ஒளிப் பதிவு செய்துள்ளார். கலை தோட்டா தரணி. இப்படத்தை பி யுகேஸ்வரன் தயாரித்துள்ளார்.

கொலைக்குற்றம், போதைப் பொருள் பிரயோகம், அமானுஷ்யம் ,மன நோயாளிகள்,சைக்கோ கொலையாளிகள், புதிரான மனிதர்கள் என்று கலந்து கட்டிய திகில் படம்.

காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் ஒரு குழு போதைப் பொருள் கடத்தல் வேட்டையில் இறங்குகிறது.
மயானத்தில் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருள் பற்றிய தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.மயானத்தைத் தோண்டத் தோண்ட மேலும் பல அதிர்ச்சிகள்.

சாத்தானை வழிபடும் சைக்கோ கும்பல் பற்றித் தெரிய வருகிறது.சாத்தான் வழிபாடு, விசித்திர பூஜைகள் நரபலிகள் பற்றிய தகவல்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றன.அந்தக் கும்பலில் பெண்களும் சிக்கி இருப்பது மேலும் அதிர்ச்சி.இதன் பின்னணியில் உள்ள அனைத்து மர்மங்களையும் தோண்டி துருவிக் கண்டுபிடித்து ஜெய்குமார் எப்படி மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார் என்பதுதான் கதை.

சாத்தான் வழிபாடு, நரபலி சம்பவங்களைக் கொண்டு இந்த அமானுஷ்ய பின்னணித் திரைப்படத்தை எடுத்துள்ள இயக்குநரின் முயற்சி புதியதுதான்.ஆனால் அதைச் சொல்கிற விதத்தில் துண்டு துண்டாகக் காட்சிகளைக் காட்டி காட்சிகளைப் பார்வையாளர்கள் எளிதில் தொடர்பு படுத்த முடியாமல் சோதித்திருக்கிறார்.

படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்குமார், இரட்டைப் பிறவியாக வந்து இருமுகம் காட்டியுள்ள நாசர், காவல் உயர் அதிகாரியாக வரும் தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தங்கள் பாத்திரம் உணர்ந்தே நடித்திருக்கின்றனர்.

பேய் பிடித்த ஆக்ரோஷம் போல் தோன்றும் தாரணி, பிளாக் மேஜிக்கால் ஈர்க்கப்பட்ட யாமினி, சாத்தான் குழுவால் பாதிக்கப்பட்ட அர்ஜய், இருள் உலகத்தைச் சேர்ந்த வினோத் கிஷன், நாசர் ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பும்,அவர்களிடம் நடிப்பை வாங்கி உள்ள விதமும் இயக்குநரின் திறமைக்குச் சான்று கூறுகின்றன.

ஒளிப்பதிவாளர் கிரி மர்பி, அரிதான படப்பிடிப்பிடங்களில் நுழைந்து காட்சிப்படுத்தியுள்ளார். நிழல் உலகமும் மர்மமும்பின்னிப்பிணைந்த கதை என்பதால் அதற்கு ஏற்ப பயன்படுத்தி இருக்கும் ஒளியும் வண்ணங்களும் சபாஷ் . கலை இயக்குநர் தோட்டா தரணியின் கலைப்பணி கதையின் தன்மையோடு இணைந்து வெளிப்பட்டுள்ளது.விஷுவல் எஃபெக்ட் காட்சிகள் படத்திற்குப் பெரும்பலம்.

எழுதி இயக்கியிருக்கும் முகமது ஆசிப் ஹமீத் நரபலி என்ற கதைக்களத்தை வித்தியாசமான பாணியில் சொல்ல முயற்சித்திருப்பது தெரிகிறது. ஆனால் அதையே முரண்பட்ட காட்சிகளால் தெளிவில்லாமல் சொன்னதால் ஆங்காங்கே நெளிய வைக்கிறது.
மர்மம், திகில் என்ற வகைமையில் இப்படம் திரைப்பட உருவாக்கத்தில் குறை சொல்லாதபடி உருவாகி உள்ளது.திரைக்கதையில் தான் பின்னடைவு.மொத்தத்தில், இந்த ‘தி அக்காலி’ யின் முயற்சி வித்தியாசமாகச் சொல்ல நினைத்து தெளிவான சிலவற்றைச் சொல்ல மறந்த கதை.