பாவனா, கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார் , கிரிஷ். பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பைரி வினு,பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், ரோஷினி, சித்திக், வினோலயா நடித்துள்ளனர்.ஜெய் தேவ் இயக்கியுள்ளார் .ஒளிப்பதிவு கெளதம்.ஜி, இசை வருண் உன்னி, தயாரிப்பு ஜூன் ட்ரீம்ஸ் ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில் நவீன் ராஜன்.
நீண்ட இடைவெளிக்குப்பின் பாவனா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்த இந்தப் படம் வெளியாகியுள்ளது.
படத்தின் தலைப்பு ‘தி டோர்’,அதாவது கதவு. மர்மங்கள் பூட்டப்பட்ட அறையின் கதவுகள் அடுத்தடுத்து திறப்பது போன்ற கதை.சரி கதை என்ன?
பாவனா ஒரு கட்டடக்கலை நிபுணர். அவர் ஒரு அடுக்குமாடிக் கட்டடம் வடிவமைக்கிறார். அதன் கட்டுமானத்தின் போது ஒரு சிறு கோயிலை இடிக்க நேர்கிறது . அதற்குப் பிறகு அடுத்தடுத்த சில மணிகளில் அவர் தந்தை விபத்தில் சிக்கி இறக்கிறார்.சில மாதங்களுக்குப் பிறகு தனது பணியைத் தொடர்கிறார் அவரைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதை அறிய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். நண்பர்களுடன் தன்னைத் பின் தொடர்கிற அந்த அமானுஷ்ய சக்தியின் பின்னணியை ஆராய்கிறார்.ஆனால் தொடர்ந்து துர் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கும் பாவனாவுக்கும் என்ன சம்பந்தம்? அவரைப் பின் தொடர அமானுஷ்யத்தில் பின்னணி என்பது என்ன? என்பதை மர்மங்கள் நிறைந்த திகில் படமாக எடுக்கப்பட்டுள்ளதே ‘தி டோர்’.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தமிழில் மறுபிரவேசம் ஆகியுள்ளார் பாவனா.தன்னைச் சுற்றி நடக்கும் மர்ம சம்பவங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியில் அவர் செல்லும் பயணம் எதிர்பாராத திருப்பங்கள் கொண்டது.அதுவே படத்தை தொய்வின்றி நடத்திச் செல்கிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன் ஏற்கெனவே போட்ட சட்டை தான் என்பதால் காக்கியில் வழக்கமாகவே பொருந்துகிறார். அவர் தனது பாத்திரத்தில் எந்தவித குறையும் இன்றி செய்திருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என ஏகப்பட்ட முகங்கள் தெரிந்தாலும் ஒவ்வொன்றும் பதிகிறது.
ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி, பாவனாவை மட்டுமல்ல காட்சிகளையும் அழகுணர்ச்சியோடு படமாக்கி உள்ளார்.இசையமைப்பாளர் வருண் உன்னியின் பின்னணி இசை சில காட்சிகள் மூலம் திகிலடைய செய்கிறது.பின்னணியின் டெசிபிளை குறைத்திருக்கலாம் .
ஆரம்பத்தில் திகில் படமாக தொடங்கி, அடுத்தடுத்த காட்சிகளில் கிரைம் திரில்லராக மாறுகிறது படம்.படத்தொகுப்பாளர் அதுல் விஜய் காட்சிகளை பரபரப்பு குறையாமல் தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஜெய்தேவ், வழக்கமான பாணியிலான திகில் கதையாக ஆரம்பித்தாலும், அதில் திகில் உணர்வுகளைக் குறைத்துவிட்டு, சுவாரஸ்யமான திரைக் கதையால் பார்ப்பவர்களுக்கு திருப்தியூட்டுகிறார்.
பாவனா தேடும் நபர் யார்? என்ற எதிர்பார்ப்பு, அந்த தேடல் பயணத்தில் ஏற்படும் திருப்பங்களும் மர்ம மரணங்களும், அதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று பார்வையாளர்களைக் கவனம் பிறழாமல் பார்க்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘தி டோர்’ விறுவிறு அனுபவம்.