தி பெட்’ (The Bed) திரைப்பட விமர்சனம்

ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி , விஜே பப்பு, விக்ரம், திவ்யா, ஜான் விஜய், தேவி பிரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ். மணி பாரதி எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு கோகுல்,இசை தாஜ் நூர்.
ஆஞ்சநேயா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீநிதி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில்
கே.கந்தசாமி ,கே. கணேசன், வி. விஜயகுமார் , வி. லோகேஸ்வரி விஜயகுமார் தயாரித்துள்ளனர்.

எத்தனையோ பாத்திரங்கள் கதை கூறியுள்ளன. ஒரு பெட் அதாவது ஒரு கட்டில் கதை சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு கட்டில் கதை சொல்வது போல் இந்தப் படக் கதை ஆரம்பிக்கிறது.
அந்தக் கதை என்ன?

ஸ்ரீகாந்த்,அவரது நண்பர்கள் குழு வீக் எண்ட் கொண்டாட்டம் ஒன்றுக்குத் திட்டமிடுகிறார்கள். அதன்படி அந்த வார விடுமுறைக்கு ஊட்டிக்கு சென்று ஒரு விடுதியில் உல்லாசமாக கழிக்கத் தீர்மானிக்கிறார்கள்.அவர்களுடன் சிருஷ்டி டாங்கேவையும் அந்த விடுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். சிருஷ்டி அவர்களது நண்பர் அல்ல. கம்பெனி கொடுக்க வந்தவர், அவர் ஒரு கால் கேர்ள் அதாவது விலை மாது. இப்படி உடன் வரும் சிருஷ்டி டாங்கே மீது நண்பர்கள் காமப் பார்வை வீச நாயகன் ஸ்ரீகாந்த் மட்டும் காதல் பார்வை வீசுகிறார்.அவரை அடைய நண்பர்கள் தவிக்க, ஸ்ரீகாந்த் யாரும் தொட முடியாதபடி தவிர்க்க இந்தப் போராட்டத்தில் திடீரென்று சிருஷ்டி காணாமல் போய்விடுகிறார். உடன் வந்த நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போய்விடுகிறார்.இப்படி யார் கண்ணிலும் படாமல் மறைந்து விட்ட அவர்களை அனைவரும் ஊட்டி முழுக்கத் தேடுகிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியும்போது ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது.அவர்கள் எங்கே சென்றார்கள் கிடைத்தார்களா? சிருஷ்டி டாங்கே யார் என்று தெரிந்தும் ஸ்ரீகாந்த் அவரை விரும்பியது ஏன்?போன்ற கேள்விகளுக்குப் பதில் தான்
‘தி பெட்’ படத்தின் மீதிக்கதை.

 

கதாநாயகனாக தனக்குரிய பாதையில் சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்த ஸ்ரீகாந்த்,இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்கிறாரா என்று சற்றே அதிர்ச்சி தந்தாலும் ஏற்றுக் கொண்ட அந்த வேலு கதாபாத்திரத்திற்கு நம்பக நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

நாயகியாக கிறிஸ்டி என்கிற பாத்திரத்தில் வரும் சிருஷ்டி டாங்கே, அழகோடு கொஞ்சம் கவர்ச்சியும் காட்டி நடிப்பு மற்றும் கவர்ச்சி என வாலிப ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் வருகிறார்கள்.போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய் (இவருக்கு எப்போதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் தானா?) நாயகியின் அம்மாவாக வரும் திவ்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் தேவிப்பிரியா ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் அந்தந்த பாத்திரங்களுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

தாஜ்நூர் இசையில் ஒரு பாடல் வருகிறது. அது கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ற பயணம் செய்துள்ளது.

காதல் மற்றும் திகில் வகை கதைக்கு ஒளிப்பதிவாளர் கோகுல் செய்துள்ள ஒளிப்பதிவு பலம்.
ஊட்டியின் பார்த்துப்பழகிய வழக்கமல்லாத இடங்களில் சென்று ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.மணிபாரதி,கணிக்க முடியாத சஸ்பென்ஸ் இணைத்து இந்தக் காதல் பிளஸ் க்ராம் ஸ்டோரியை உருவாக்கி இருக்கிறார்.

குறைந்தபட்ச பாத்திரங்களும் போலீஸ் விசாரணையின் நீளமும் சற்றே பலவீனங்கள்.ஆனாலும் அதை மறக்கும்படியாக கதையை கையாண்டு உள்ள விதத்தில் இயக்குநர் கவனிக்க வைக்கிறார்.ஸ்ரீகாந்தின் தாயார் சம்பந்தப்பட்ட சென்டிமெண்ட் காட்சிகள் எதிர்பாராதது. முதல் பாதியில் கலகலப்பு இரண்டாம் பாதியில் விசாரணை பரபரப்பு என்று படத்தில் இரு வேறு தன்மையை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு
விலை மாதுவை நாயகியாக மையப்படுத்திய
சற்று தடம் மாறினாலும் படத்திற்கு மலிவான பார்வை வந்துவிடும் வாய்ப்புள்ள கதையில் இந்த விபத்து நேராமல் எச்சரிக்கையுடன் திரைக்கதை அமைத்துள்ளார்.

மொத்தத்தில், ‘தி பெட்’ கட்டில் சொல்லும் கதை அயர்ச்சியல்ல முயற்சி.