‘தென் சென்னை’ திரைப்பட விமர்சனம்

ரங்கா ,ரியா,இளங்கோ குமணன் ,சுமா ,தாரணி ,நிதின் மேத்தா, திலீபன், குழந்தை தன்ஷிவி .வத்ஷன் எம் நட்ராஜன் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியுள்ளார் ரங்கா.ஒளிப்பதிவு சரத்குமார் எம்,எடிட்டிங் இளங்கோவன் சி எம்,பின்னணி இசை : ஜென் மார்டின்,பாடல் இசை : சிவ பத்மயன்,தயாரிப்பாளர்: ரங்கா ஃபிலிம் கம்பனி .

வடசென்னை என்பது சென்னையின் பூர்வ குடிகள் காலகாலமாக வாழ்ந்து வருவதால் அதற்கென்று ஒரு கலாச்சார நிறம் உண்டு.தென்சென்னை வளர்ந்து வரும்,இப்போது வளர்ந்து விட்ட பகுதி ஆதலால் பல்வேறு மக்கள் குடியேறி பல்வேறு கலாச்சாரங்களின் இணைப்பாக இருக்கிறது. அதற்கென்று தனி நிறம் இது என்று கூற முடியாது.ஆனால் தென் சென்னை என்கிற பெயரில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது.

தென் சென்னை படம் எப்படி இருக்கிறது ? இதுவரை தென் சென்னை பற்றி யாரும் படமெடுக்கவில்லை.அப்படி ஒரு கதை எடுத்துக் கொண்டு படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ரங்கா. அதுமட்டுமல்ல, ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ளார்.

வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்கிற கனவோடு தேவராஜன் சென்னைக்குப் பிழைப்பு தேடி வருகிறார்.சமையல் மீதுள்ள ஆர்வத்தால் தனக்குத் தெரிந்த ஓட்டல் தொழிலைத் தொடங்குகிறார்.அதை பெரிதாக வளர்த்து எடுக்கிறார். படரக் கொம்பின்றித் தவிக்கும் கொடி போல் திக்கற்று ஆதரவு தேடி நிற்கும்  ஓர் அண்ணன் தங்கையை கரம் கொடுத்து ஆதரித்து தன் குடும்பத்துடன் இணைத்துக் கொண்டு ஒரே குடும்பமாக வாழ்கிறார்கள்.குடும்பமும் தொழிலும் ஏக காலத்தில் வளர்கின்றன.
அவர்களைத் தன் வாரிசுகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார்.தேவராஜன் மறைகிறார்.பிறகு அந்த நிறுவனத்தை அவரது பேரன் கவனித்துக் கொள்கிறார்.அந்தப் பேரன் தான் நாயகன் ரங்கா.நன்றாக போய்க் கொண்டிருக்கும் அந்த ஓட்டலுக்குள் வில்லன் மூக்கை நுழைத்து ஆக்கிரமிக்கவும் செய்கிறார்.அங்குள்ள பாரில் பல தில்லுமுல்லுகளை அரங்கேற்றுகிறார்.பல மோசடிகள் செய்யும் வில்லன் கையில் ஓட்டல் சென்று விடுகிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் சாலையில் குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தையைக் கண்டெடுக்கிறார் ரங்கா. அந்த நேரம் நாயகி ரியாவையும் சந்திக்கிறார்.அந்தச் சந்திப்பு தற்செயலானதா திட்டமிடப்பட்டதா என்பது கேள்விக்குறி.அந்தக் குழந்தை யாருடையது? சவால்களுக்குள்ளான அந்த ஓட்டல் தொழில் என்னானது?வில்லன் செய்யும் மோசடிகளின் பின்னணி என்ன ?அவர்களின் நோக்கம் என்ன?போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வது தான்’தென்சென்னை’ படத்தின் கதை செல்லும் பாதை.

இதுவரை சென்னை என்றாலே வடசென்னையையே காட்டிக் காட்டி சலிப்பும் அலுப்பும் ஊட்டி விட்டார்கள்.முதலில் தென் சென்னையில் நடக்கும் கதை என்பதே சற்று ஆறுதல் தருகிறது.

முதல் படம் என்பதால் எளிமையான கதையை வைத்துக்கொண்டு அவர் படத்தை உருவாக்கி இருக்கலாம். ஆனால் பல்வேறு தளங்களில் கதையை பயணிக்க விட்டு அக்னிப்பரிட்சைக்குத் தன்னை உள்ளாக்கி இருக்கிறார் இயக்குநர் ரங்கா. அந்த துணிச்சலுக்காகவே அவரைப் பாராட்டலாம்.ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு ஒரு பரப்பரப்பான திரில்லரைக் கொடுக்க முயன்றுள்ளார்.

நடித்துள்ள பிற நடிகர்களுக்கான பல்வேறு பட்ட கதாபாத்திர சித்தரிப்புகளுடன் ஒரு இயக்குநராக தன்னைப் பதிவு செய்து கொண்டவர், தனது பாத்திரத்திற்காக அதிகம் உழைத்திட நேரமில்லாமல் அதில் தனது போதாமையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அவரது பாத்திரத்தினை பலப்படுத்தி இருக்கலாம்.

மருத்துவராக நாயகி ரியா ,திரை பங்களிப்புக்கான வசீகர முகத்துடன் நடிப்பிலும் பதிகிறார்.முன்னாள் ராணுவ அதிகாரி இந்நாள் செக்யூரிட்டி ஏஜன்ஸி நடத்தும் நிதின் மேத்தா தோற்றத்திலேயே பாதி திருப்தி அளித்து விடுகிறார்.அவரது தேர்ந்த நடிப்பு பாத்திரத்திற்கு வலுவூட்டுகிறது. இளங்கோ குமணன் , வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன் எல்லோரும் கொடுத்த பாத்திரத்தைச் சிறப்பாக செய்துள்ளார்.

சண்டைக்காட்சிகள் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை பார்க்கும் உணர்வைத் தருவது நிஜம். அதில் சினிமாத் தனங்களைத் தவிர்த்து இருப்பது சபாஷ் போட வைக்கிறது.

‘டாடா: பிளடி பெக்கர் படங்களுக்கு இசையமைத்த ஜென் மார்டின் பின்னணி இசை அமைத்துள்ளார். படத்திற்கு பின்னணி இசைமிகப்பெரும் பலமாக  அமைந்துள்ளது.சிவ பத்மயன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

சரத்குமாரின்  ஒளிப்பதிவு பட்ஜெட்டைத் தாண்டி நிறைவு அளிக்கிறது.சிறிய பட்ஜெட் என்கிற பேரில் மலிவான படம் எடுத்து நம்மை சோதிப்பவர்கள் மத்தியில் இவர்கள் பட்ஜெட்டைத் தாண்டி பட உருவாக்கத்தின் மூலம் நம்மை வியக்க வைக்கிறார்கள்.

புது நடிகர்கள், புதுக் கலைஞர்கள் வைத்துக்கொண்டு, கதை, அதை நகர்த்திய விதம் என எல்லாவற்றிலும் இயக்குநர் ரங்கா அறிமுக நிலையைத் தாண்டி உயர்ந்திருக்கிறார்.
திரைக்கதையை மட்டும் இன்னும் மெருகேற்றியிருந்தால் சிறப்பான படைப்பாக ஈர்த்திருக்கும். ஆனாலும் ‘தென் சென்னை’ படத்தை புதியவர்களின் முயற்சிக்காக ஒரு முறை ரசிக்கலாம்.