விமல் நடிப்பில் புதுமுக இயக்குநர் மார்டின் நிர்மல் குமாரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தெய்வமச்சான்’.
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் உதயகுமார், கீதா உதயகுமார், எம்.பி.வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விமல், நேஹா ஜா ஜோடி. இவர்களுடன், அனிதா சம்பத், பாண்டியராஜன்,வேல ராமமூர்த்தி, தீபா,ஆடுகளம் நரேன், கிச்சா ரவி, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
கிராமத்து நாயகனாகத் தனக்கென்று ஒரு தனிப்பாணியில் மக்கள் மனதில் பதிந்துள்ள விமல், இதில் சற்று திகில் கலந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார் விமல்.அவரது பெயர் `தபால்’ கார்த்தி.
விமலின் தங்கை குங்குமத்தேன்.தங்கைக்குப் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.அரும்பாடு பட்டு ஒரு வழியாக ஒரு பிடித்த வரன் அமைகிறது.அதனால் குடும்ப மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, விமலுக்கு ஏற்கெனவே ஒரு பிரச்சினை உள்ளது.கனவு வரும்.அதில் ஒரு சாட்டைக்காரன் வருவான்.
அவன் விரைவில் இறப்பவர்களின் பெயர்களைச சொல்வான். அப்படியே நிஜத்திலும் நடக்கிறது.
அப்படி இவரது பாசத் தங்கைக்குக் கணவனாக வரும் மாப்பிள்ளை இறந்து விடுவதாகக் கனவு வருகிறது.அதுவும் திருமணத்திற்கு முதல் நாள் வருகிறது,மாப்பிள்ளை திருமணமாகி இரண்டு நாட்களில் இறந்து விடுவார் என்று. விமல் பயந்து விடுகிறார். இவர் அதைத் தடுப்பதற்காகப் போராடுகிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் கதை.
கிராமத்துப் பின்னணியில் அதுவும் கல்யாண கலகலப்பு +திகில் பின்னணியில் ஒரு கதையாக இப்படம் உருவாகி உள்ளது.
படத்தில் அண்ணன் கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற விமல், வழக்கம்போல் தன்னுடைய அலட்டல் இல்லாத தனக்குக் கைவந்த கிராமத்து நாயகனாக வந்து யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.விமல் எப்போதுமே கிராமத்து எளிய நாயகனாக வருவார். இப்படத்தில் கதையின் மொத்த கவனமும் அவர் மீது குவிவதால் கொஞ்சம் மெனக்கட்டுள்ளார் என்றே தோன்றுகிறது. விமலின் தங்கையாக குங்குமத்தேன் பாத்திரத்தில் அனிதா சம்பத் நடித்திருக்கிறார். இவரும் தனது திருப்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நேஹா ஜா, சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.
படம் முழுக்க கிராமத்துப் பாணியில் கதை செல்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு கிராமத்து பின்னணியிலான கதைக்காட்சிகள் பார்க்க இதமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே வரும் ஊர்ப்புற நகைச்சுவைகளும் கலகலப்பூட்டுகிறது.குறிப்பாக விமல் ,பால சரவணன் கூட்டணியில் ஆங்காங்கே சிரிப்பு வெடிகள்.
ஆனால், படத்தில் வரும் தேவையற்ற சில சலிப்பூட்டும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.
வெகுளியான, வில்லங்கமான கதாபாத்திரத்தில் தீபா வருகிறார். பாண்டியராஜன், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், ‘கிச்சா’ ரவி ஆகியோரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் பாண்டியராஜனின் புகழ் பெற்ற அப்பாவித்தனத்தையும் திருட்டு முழியையும் மேலும் பயன்படுத்தி இருக்கலாம்.
சில நகாசு வேலைகளை செய்திருந்தால் படம் மேலும் கலகலப்பாக மாறி இருக்கும்.