‘தொட்டு விடும் தூரம்’ நிச்சயம் ரசிகர்கள் மனதை தொடும்! – இயக்குநர் நம்பிக்கை!


2020 ஆம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமை, ஜனவரி 3 ஆம் தேதி வெளியாகும் படம் என்ற பெருமையைப் பெறவுள்ள படம், ‘தொட்டு விடும் தூரம்’ .

கடந்த ஆண்டு பிரமாண்ட படங்களின் இடையே அறிமுக இயக்குநர்களின் மற்றும் சிறு முதலீட்டு படங்களின் வெற்றியும் சாத்தியப்பட்டுள்ளது.இவ்வெற்றி யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் இடம்பெறும் நம்பிக்கையில் முதல் படமாக ‘தொட்டு விடும் தூரம்’ படம் வெளியாக உள்ளது.

இப்படத்தை உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விவேக் ராஜ் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு இது 3 வதுபடம்., மோனிகா சின்னகொட்லா நாயகியாக நடித்திருக்கிறார்.இவருக்கு இது 4 வதுபடம். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன், உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

நோவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ராம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ராம்பாதி 5 பாடல்களை எழுத, வீரசெந்தில் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஆர்.சுரேஷ் இணைத் தயாரிப்பை மேற்கொண்டிருக்கிறார்.

இப்படம் பற்றி இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் கூறும் போது.,

”கிராமத்திலிருந்து காதலியைத் தேடி வரும் காதலனின் ஒரு காதல் பயணம் சார்ந்த கதையம்சத்தைக் கொண்ட இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் செண்டிமெண்டை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறோம்.

பாலசரவணன், சிங்கம்புலி உள்ளிட்ட காமெடி நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும், படத்தில் சமூகத்திற்குத் தேவையான, முக்கியமான கருத்து ஒன்றையும் சொல்லியிருக்கிறோம். காதலர்களின் காதல் பயணம், அம்மாபாசம் போன்றவை நிச்சயம் ரசிகர்களின் இதயங்களை தொட்டு விடும் விதத்தில் இருக்கும், அதே சமயம் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து மற்றும் அதை சார்ந்த செண்டிமெண்ட், யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருக்கும், என்றார் .

சினிமாவில் தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி இல்லை.அதை விட்டு விடும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை .எனவே சிரமப்பட்டு உழைக்க வேண்டும் என்பதை அறிந்து உழைத்திருப்பதாகக் கூறுகிறார்கள் .‘தொட்டு விடும் தூரம்’ . படத்திற்கான படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. ஆறு ,கடல் ,மலை, காடு என்று சகல பகுதிகளிலும் சிரமப்பட்டுக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளனராம் .

இப்படத்தைத் தயாரித்திருக்கும் பி.ராமநாதனுக்கு இது தான் முதல் படம். இவர் படம் தயாரித்ததே தனது நண்பருக்காகத்தான் என்கிறார் அவர். இயக்குநர் நாகேஸ்வரனும், தயாரிப்பாளர் ராமநாதனும் கல்லூரி நண்பர்களாம். கல்லூரியில் படிக்கும் போதே நாகேஸ்வரனுக்குத் தன்வீட்டில் தங்க இடம் கொடுத்துப்படிக்க பல வகையில் உதவி செய்திருக்கும் ராமநாதன், சினிமாவிலும் நாகேஸ்வரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இப்படத்தைத் தயாரித்துள்ளாராம்.

பல சிறு முதலீட்டு படங்களின் வெளியீட்டுக்குப் வழிகாட்டி,உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், இப்படத்தின் வெளியீட்டுக்கும் உதவி செய்திருக்கிறார்..

குடும்பத்தோடு பார்க்க கூடிய காதல் படமாக உருவாகியிருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ 2020 ஆம் ஆண்டின் தரமான படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் முதல் படமாக இருக்கும், என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.