நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக நிகழ்வு.!

ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக
நிகழ்வு நடைபெற்றது.

கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசியதாவது, “இந்தப் படம் நான் நள்ளிரவு ஒரு மணிக்கு ஒத்துக்கொண்டேன். நான் செய்ய நினைத்ததை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார்.

எடிட்டர் நிர்மல், “இந்தப் படம் ஆரம்பிக்க காரணமாக இருந்த நெல்சன் சாருக்கு நன்றி. சிவபாலன் சார் எங்கள் டீம் என்பதால் காமெடி படம்தான் எடுப்பார் என நினைத்தேன். ஆனால், அதையும் தாண்டில் நல்ல கதையை படமாகக் கொடுத்திருக்கிறார். டிரெய்லரில் இருப்பது போலதான் கதை இருக்கும். நிச்சயம் தீபாவளிக்கு படம் பார்த்து என்ஜாய் செய்வீர்கள்” என்றார்.

நடிகர் பார்த்திபன், “படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. காமெடி செய்து போர் அடித்திருந்த சமயத்தில் என் நடிப்புக்கு தீனி போடும் விதமாக சீரியஸ் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறேன். நல்ல வாய்ப்பு! ஹேப்பி தீபாவளி!”என்றார்.

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், “இயக்குநர் சிவபாலன் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். கமர்ஷியலாக அழகாக படம் வந்திருக்கிறது. இவருடன் பணிபுரிந்ததில் நிறைய விஷயங்கள் சவாலாகவும் புதிதாக கற்றுக் கொள்ளும் அனுபவமாகவும் இருந்தது. படத்தின் கதை கேட்டபோது இது எப்படி படமாக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் இருந்தது. அதை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். கவின் சிறப்பான நடிகர். சிங்கிள் டேக்கில் ஒரு காட்சியை நடித்துக் கொடுத்திருக்கிறார். படத்தில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் அசாத்திய உழைப்பைக் கொடுத்திருக்கின்றனர்” என்றார்.

நடிகை பிரியதர்ஷினி, “நெல்சன் சார் தயாரிப்பில் நான் நடித்திருப்பதை இப்போது வரையிலும் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது வித்தியாசமான பிளாக் காமெடி படம். எல்லோரும் சின்சியராக நடித்திருக்கிறார்கள். என்னுடைய காமெடி சென்ஸ் நடிப்பை இன்னும் இம்ப்ரூவ் செய்ய கவின் உதவினார். தீபாவளிக்குப் படம் வெளியாகிறது” என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ், “கவின் மற்றும் சிவபாலனுக்காக நெல்சன் இந்தப் படத்தை சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார். எல்லோரும் 100% உழைப்பைக் கொடுத்துள்ளனர். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை. படம் வெற்றியடைய வாழ்த்துகள்”என்றார்.

ஃபைவ் ஸ்டார் செந்தில், “’ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமையை எனக்குக் கொடுத்த நெல்சன் சாருக்கு நன்றி. இந்தப் படம் தீபாவளி சரவெடி. கவினுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி, “என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘ப்ளடி பெக்கர்’. ஏனெனில், இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்குத் திருமணம் நடந்தது. எல்லோரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். சிவபாலன் தனக்கு என்ன வேண்டும் என்பதை மிகச்சரியாக எடுத்துள்ளார். டிரெய்லருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. நிச்சயம் படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படத்துக்குப் பிறகு கவினின் நடிப்பிற்கு பெரிய பாராட்டு கிடைக்கும். நான் வாழும் வாழ்க்கை, சாப்பாடு, டிரஸ் எல்லாமே நெல்சன் சார் கொடுத்தது. அவருக்கு நன்றி” என்றார்.

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார், “நான் இந்த இடத்திற்கு வர நிறைய பேர் உதவியிருக்கிறார்கள். அதில் நெல்சன் சார் முதன்மையானவர். அவருக்கு நன்றி. இயக்குநராக அவர் எங்களிடம் நிறைய கேள்வி கேட்பார். என் படத்தை தயாரிக்கும்போதும் அப்படித்தான் இருப்பார் என நினைத்தேன். ஆனால், எனக்கான எல்லா சுதந்திரமும் கொடுத்தார். அவருக்குப் படம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். படம் ஆரம்பிக்கும் முன்பிருந்தே கவின் எனக்கு நல்ல நண்பன். நான் எழுதியிருந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். ரெடின் அண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். என்னுடைய டெக்னிக்கல் டீம் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட். அவர்களுக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் நெல்சன் பேசியதாவது, “’வேட்டை மன்னன்’ படத்தின் போது என்னிடம் சிவபாலன் சேர்ந்தார். ’ஜெயிலர்’ படம் வரையிலுமே என்னிடம் வேலை பார்த்தார். ‘ஜெயிலர்’ பட சமயத்தில்தான் இந்தக் கதை சொன்னார். நீண்ட நாட்கள் என்னிடம் வேலை பார்த்ததால் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ‘ஜெயிலர்’ வெற்றிப் பெற்றால் மட்டுமே சிவபாலன் படம் தயாரிப்பேன் என்று சொல்லியிருந்தேன். இதனால், ‘ஜெயிலர்’ படம் வெற்றி பெற வேண்டும் என அவர்தான் மிகவும் எதிர்பார்த்திருந்தார். படம் வெற்றி பெற்றதும் ‘ப்ளடி பெக்கர்’ தயாரிப்பது உறுதியானது. கவினை வைத்து செய்யலாம் என சிவபாலன் சொன்னார். ஆனால், இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய்சேதுபதி என சில பெயர் சிவபாலனிடம் சொன்னேன். ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து லுக் டெஸ்ட் செய்தார். அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. படத்தின் முதல் பாதி நன்றாகவே செய்திருந்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. முழுப்படமும் பார்த்தபோது சிவபாலனுக்குப் பிறகு சிறப்பாக வேலை செய்திருப்பது கவின்தான். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது. த்ரில்லர் படமான இதில் டார்க் காமெடி, எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இருக்கும். தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’ படங்களும் வெளியாகிறது. அந்தப் படங்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார். 

நடிகர் கவின், “ஒருவர் மீது மற்றொருவருக்கு இருந்த நம்பிக்கைதான் இந்தப் படம் உருவாக காரணம். நான் இதுவரை என்னென்ன விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தில் கொண்டு வரவேண்டும் என நினைத்தேன். எனக்கு சினிமாவில் ஒரு இடத்தைக் கொடுத்தவர் நெல்சன் சார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இது இருக்கும். ஏனெனில், சிவபாலன் இயக்கும் முதல் படம், நெல்சன் சார் தயாரிக்கும் முதல் படம். நமக்கு அமைந்த நல்ல மனிதர்களுக்காக எந்த விஷயமும் செய்யலாம் என்பதுதான் என் நம்பிக்கை. ’ப்ளடி பெக்கர்’ எளிமையான கதைதான். உங்களுக்குப் பிடிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். படத்தில் என்னுடன் நடித்த நடிகர்கள் எல்லோருமே அவ்வளவு எனர்ஜியாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். டெக்னிக்கல் டீமும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ படங்கள் பார்த்து தீபாவளியை கொண்டாடுங்கள்” என்றார்.