தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். ரஜினிகாந்த் எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். நீங்கள் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று கூறி ரஜினி வாழ்த்தினார். ஆரம்பத்தில் இருந்து ஐசரி கணேஷ் தான் இந்த கட்டிடம் கட்ட பாண்டவர் அணிக்கு பக்கபலமாக இருந்தார். ஆனால் பாதி கட்டிடம் முடிந்த நிலையில், வேலைகள் அப்படியே நின்று போய் விட்டது. கிடப்பில் கிடக்கும் இந்த கட்டிடம் கட்ட இந்த சுவாமி சங்கரதாஸ் அணி முழுவீச்சில் செயல்படும். பாண்டவர் அணியின் மீதான அதிருப்தியால் தான் பலர் அங்கிருந்து வந்து இந்த அணியில் சேர்ந்துள்ளனர். இந்த அணியின் செயல்பாட்டில் அரசியல் இல்லை, அரசியல் இருந்தால் நானே போட்டியிட மாட்டேன் என்றார் கே.பாக்யராஜ்.
மறைந்த நாடகக் கலைஞர் மற்றும் நடிகர் ஐசரி வேலன் அவர்களின் மகன் நான். 32 ஆண்டுகளாக நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த நடிகர் சங்கத்தை உருவாக்கி, ஆசிர்வாதம் செய்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவர் பெயரை தான் இந்த அணிக்கு வைத்துள்ளோம். இது தான் வெற்றி பெறும் அணி. நீண்ட நாட்களாகவே நடிகர் சங்கத்துக்கும், நாடக கலைஞர்களுக்கும் நிறைய நல்லது செய்யணும் என்ற ஆசை இருந்தது. முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வந்தேன். பாண்டவர் அணியில் இருந்து அதிருப்தியில் வெளியேறிய உதயா, சங்கீதா, நிதின் சத்யா ஆகியோர் பின்னால் இருந்து நிறைய நல்லது செய்கிறார்கள், அதை நீங்கள் ஏன் முன்னின்று செய்யக் கூடாது என கேட்டார்கள். அதனால் தான் இந்த சங்கப் பொறுப்புக்கு தலைமை ஏற்க வந்தேன். இந்த கட்டடத்தை முடித்தால் நிறைய நாடக கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும். நாங்கள் பொறுப்புக்கு வந்தால் ஆறு மாதங்களில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் மிக மிக மெத்தனமாக செயல்படுகிறார்கள் பாண்டவர் அணியினர். ஒன்றரை வருடமாக கட்டிட வேலை நடக்காமல் அப்படியே நிற்கிறது. கட்டிடம் முடிக்க இன்னும் 22 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதற்காக பாண்டவர் அணியினர் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சங்க கட்டிடம் கட்டவும் நாடக கலைஞர்கள் நல்வாழ்விற்காகவும் தான் இந்த அணியை துவக்கியுள்ளோம். பொருளாளர் பதவிக்கு வந்தால் நான் தூங்காமல் 24 மணி நேரமும் வேலை செய்வேன் என சொல்லியிருக்கிறார் தம்பி பிரஷாந்த். கே.எஸ்.ரவிக்குமார் எங்கள் அணியில் போட்டியிடுகிறார். நல்ல ஒரு அணியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம், நிச்சயம் வெற்றி பெற்று சங்கத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றார் டாக்டர் ஐசரி கே கணேஷ்.
நேற்று விஷால் பேசியபோது எறும்பு, பாம்பு என்றெல்லாம் பேசியிருக்கிறார். என்றைக்கும் அவர்கள் எங்கள் குழந்தைகள் தான். அவர்கள் மீது எங்களுக்கு எப்போதும் காழ்ப்புணர்ச்சி இருக்காது. இது எப்போதும் நியாயமாக செயல்படும் அணி. அவர்கள் மீது எங்களுக்கு எந்த பகையும், கோபமும் இல்லை என்றார் நடிகை குட்டி பத்மினி.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ், பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் டாக்டர் ஐசரி கே கணேஷ், துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா, நடிகை குட்டி பத்மினி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் பிரஷாந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பூர்ணிமா பாக்யராஜ், கே ராஜன், ஆர்த்தி கணேஷ், விமல், நிதின் சத்யா, சங்கீதா, காயத்ரி ரகுராம், ரமேஷ் கண்ணா, சின்னி ஜெயந்த், ஸ்ரீகாந்த், சிவகாமி, ரஞ்சனி, அயூப்கான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு நடிகர்கள் அருண் பாண்டியன், பாபு கணேஷ், ஷாந்தனு, ஆரி, விஜய் கார்த்திக், வருண், விஜித் ஆகியோர் நேரில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.