ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மசாலா படம்’. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, லக்ஷ்மி தேவி மற்றும் கௌரவ் நடிக்கும் இப்படத்தை ஆல்இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் தயாரிக்கிறார். மசாலாப் படங்களைப் பற்றிக் கூற வரும் இப்படத்தின் நாயகி லக்ஷ்மி தேவி அவரது மனதில் இருக்கும் மசாலா படங்களை பற்றி கருத்துகளைக் கூறியுள்ளார்.
“நல்ல படமோ, மொக்க படமோ ஒரு மசாலா படம் நம்மை மகிழ்விக்க கூடியவை. நாம் வாழ கனவு காணும் அந்த கதாப்பாத்திரங்களை நம் கண் முன் நிறுத்துபவை. நாம் எதிர்பார்க்கும் வியப்புகளை மட்டுமே அடக்கியதே மசாலா படங்கள்.” எனக் கூற ஆரம்பித்தார் லக்ஷ்மி தேவி.
என்ன ஒரு கதாநாயகி திரைப்படங்களின் மீது இவ்வளவு ஆர்வம் என்று பார்த்தால். மசாலா படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் என்பது தெரிய வந்தது. “ கவிதைகள், சிறு கதைகள், நாடகங்கள் இப்பொழுது சினிமா என எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும்.”என்றார்.அப்படிப்போடு அரிவாள !
“ இயக்குநர் லக்ஷ்மன், தயாரிப்பாளர் விஜய், நான் என அனைவரும் நல்ல நண்பர்கள். மசாலா படங்களை பற்றி ஒரு படம் எடுக்கலாம் என்று திட்டமிடவில்லை. பலரும் இங்கு மசாலா படங்கள் மற்றும் ஆன்லைன் சினிமா விமர்சகர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இதை அடிப்படையாய் வைத்தே தான் இக்கதையை எழுதினோம். இது பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.”
“ கேமரா முன்பு நடிப்பு, மற்ற சமயம் இயக்கம், தயாரிப்பு என ‘ மசாலா படம்’ என்னை ஒரு நேர்த்தியான சினிமாவை கற்றுக் கொடுத்துள்ளது. என்னால் இரவு பகல் பாராமல் உழைக்க முடியும் என்பதை உணர்த்தியுள்ளது இப்படம். மிர்ச்சி சிவாவுடன் பொது இடங்களில் ஷூட் செய்யும்பொழுது அவரை சுற்றி ரசிகர்கள் சூழ்வதை பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாய் இருக்கும். மறு பக்கம் பாபி சிம்ஹாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், ஒரு காட்சியில் அவர் என்னை தள்ளி விடுவார் நான் ஒதுங்கி விட வேண்டும் அனால் நானோ பொம்மைபோல் கீழே விழுந்து விடுவேன். எப்படியோ அந்தக் காட்சியில் கீழே விழாமல் படமாக்கி முடித்து விட்டோம்” எனக் கூறினார் லக்ஷ்மி தேவி.
இந்த மசாலா படம் நல்ல படமா, மொக்க படமா சில நாளில் தெரிந்து விடும்.