நாயகன் செங்குட்டுவனின் பெற்றோர்களான நரேன்-ஷர்மிளா ஆகியோர் தங்கள் மகன் மீது மிகுந்த பாசம் வைத்து இருக்கிறார்கள். அவன் எது கேட்டாலும், அதை தட்டாமல் அவனுக்கு செய்து கொடுத்து வருகிறார்கள்.
செங்குட்டுவன் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நற்பணி மன்றம் மூலமாக ஊருக்கு பல நன்மைகளை செய்து வருகிறார்.
மன்றத்தின் உறுப்பினர் ஒருவருடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே, அந்த எதிர்ப்பையெல்லாம் மீறி அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார் செங்குட்டுவன்.
காதல் மீது எந்த பிடிப்பும் இல்லாதவர் செங்குட்டுவன். தனக்கு பிடித்தமான பெண் கிடைத்தால் கண்டிப்பாக காதலிப்பேன் என்ற கொள்கையோடு இருந்து வருகிறார்.
ஒருநாள் கோவிலில் நாயகி அக்ஷயாவை பார்க்கிறார் செங்குட்டுவன். அவளை பார்த்தவுடன் அவருக்கு பிடித்துப்போய் விடுகிறது. அவள், தனது சிறு வயது தோழி என்பதை அறிந்துகொள்கிறார். அவளிடம் அதை எப்படியாவது கூறவேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால், நாயகிக்கோ இவரை சற்றும் அடையாளம் தெரிவதில்லை. சிறுவயதில் ‘அப்புப்பிள்ளை’ என்ற செல்லப் பெயர் வைத்து அழைத்திருப்பதால், நாயகிக்கு அந்த பெயர் மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது.
இந்நிலையில், நாயகியிடம் தனது செல்லப்பெயரை சொல்ல நாயகன் முயற்சிக்கிறார். ஆனால், அது எல்லாமே தோல்வியிலேயே முடிகிறது. ஒருகட்டத்தில் செங்குட்டுவன், திருடன் என்றும் தவறாக நினைக்கிறாள்.
இப்போது நாயகனுக்கு தனது பெயரைச் சொல்வதைவிட, தான் திருடனில்லை என்று அவளுக்கு புரிய வைக்க நினைக்க, நாயகியை காதலிப்பதை செங்குட்டுவன் தனது அப்பா நரேனிடம் கூறுகிறார்.
அவரும் மகன் மீதுள்ள பாசத்தில் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். செங்குட்டுவன் தனது காதலியை, நரேனுக்கு காட்டுகிறார்.
அப்போது, அவளோடு இருக்கும் அவரது அப்பாவைப் பார்த்ததும் நரேனின் முகம் மாறுகிறது. அவருடைய பெண்ணுக்கு உன்னை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிடுகிறார் நரேன். இதற்குள் நாயகியின் முறைமாமன் அவளை அடைய முயற்சி செய்கிறான்.
இறுதியில், நாயகன், நாயகியிடம் தான் நல்லவன் என்பதை நிரூபித்து, தனது செல்லப்பெயரை அவளிடம் கூறி, தனது காதலை வெளிப்படுத்தினாரா? நாயகியின் குடும்பத்துக்கும், நாயகன் குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன? முறைமாமனிடம் இருந்து தனது காதலியை நாயகன் மீட்டாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் செங்குட்டுவனுக்கு இதுதான் முதல் படம் என்பதால் இவரிடம் அதிக நடிப்பு எதிர்பார்க்கமுடியாது. இருப்பினும், நன்றாகவே நடித்திருக்கிறார். அதேபோல், நாயகி அக்ஷயாவின் நடிப்பும் நன்றாகவே உள்ளது.
நரேனுக்கு, அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லித்தர வேண்டியதில்லை. தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், நரேனுக்கு ஜோடியாக வரும் ஷர்மிளாவும் அழகாக நடித்திருக்கிறார்.சிங்கம் புலியின் காமெடி நாடகத்தனம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் ராதாபாரதி இப்படத்தை இயக்கியிருக்கிறார். சரியான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாமல் படத்தை சுமாராக எடுத்திருக்கிறார்.சினிமாவின் கால மாற்றத்தை அறியாமல் படத்தை எடுத்திருக்கிறார்.
மாறிவரும் நவீனத்துக்கு ஏற்றார்போல் படத்தை எடுக்காமல், பழைய காலத்து பாணியிலேயே படத்தை எடுத்திருப்பது ரசிக்க மறுக்கிறது.
ஸ்ரீகாந்த் இசையில் பாடல்கள் அனைத்தும் குத்தாட்டம் போட வைக்கிறது. செல்வாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.