பேராசிரியர், நடிகர் மு. இராமசாமியின் 3 நூல்கள் வெளியீட்டு விழா!

நாடகப் பேராசிரியரும், நாடகச் செயல்பாட்டாளரும் ,தேவதை ,மாயன், பருத்திவீரன், சண்டக்கோழி, ஜோக்கர் ,கேடி என்கிற கருப்புத்துரை, வாய்தா, திருச்சிற்றம்பலம், ப்ரீடம், மாயக்கூத்து போன்ற சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகருமான மு. இராமசாமி எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

ஒவ்வோராண்டும் மறைந்த தனது மனைவி செண்பகத்தின் நினைவாக நினைவு நாள் கொண்டாடுவதுடன் நூல் வெளியிடுவது அவரது வழக்கம். இந்த ஆண்டு அவரது 49 வது நூல் வெளியிடப்பட்டது.

செண்பகம் இராமசுவாமியின் 28 ஆம் ஆண்டு நினைவு, காரல் மார்க்ஸின் 143 ஆம் ஆண்டு நினைவு, நிஜ நாடக இயக்கத்தின் 48 ஆம் ஆண்டு நிறைவு ஆகியவற்றை முன்னிட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் மு. இராமசுவாமி எழுதிய

‘மெய்ப்பாட்டியலின் மெய்ப்பொருள்’ பாகம் – 1,

‘நாடகத் தமிழின் வேரும் திராவிட விழுதுகளும்’,

‘மனசுக்கு மருந்தாகும் மாயத்திரை’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப் பட்டன.

பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி, முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் சிவசு விழாவுக்குத் தலைமையேற்றார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைப்பேராசிரியர் தூ. சேதுபாண்டியன் நினைவேந்தல் உரையாற்றினார்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் ‘மெய்ப்பாட்டியலின் மெய்ப்பொருள்’ பாகம் – 1 நூலை வெளியிட்டு விமர்சன உரையாற்றினார்.

பாளையங்கோட்டை, சதக்கத்துல்லா கல்லூரி, முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அ.ச. இராமையா ‘நாடகத் தமிழின் வேரும் திராவிட விழுதுகளும்’ நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக இ .எம். ஆர். சி முன்னாள் தயாரிப்பாளர் சு.ரவிக்குமார் என்கிற ஸ்ரீரசா ‘மனசுக்கு மருந்தாகும் மாயத்திரை’ நூலை வெளியிட்டு உரையாற்றினார். நிறைவாக நூலாசிரியர் பேராசிரியர் மு. இராமசாமி ஏற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வுகளை அருணாச்சலம் தொகுத்து வழங்கினார்.

விழாவில் அவரது மு.இராமசாமியின் நண்பர்களும் மாணவர்களும் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு இறுதிவரை இருந்து சிறப்பித்தனர்.விழா முடிந்தும் கூட்டம் கலையாமல் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தது மற்ற விழாக்களில் காண முடியாத ஒரு காட்சியாக இருந்தது.

இந்நிகழ்ச்சியை மதுரை நிஜ நாடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.