தனுஷ் ,செல்வராகவன், யுவன் கூட்டணி என்றாலே இளைஞர்களைக் கவரும் வகையிலான படம் என்கிற முத்திரை விழுந்துள்ளது.குடும்பத்தோடு பார்க்கத் தயங்கும் படம் என்கிற பெயரும் சேர்ந்து.
இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கி உள்ள படம் தான் நானே வருவேன். முன்பு செல்வராகவன் இயக்கிய போது தனுஷ் இருந்த உயரத்தை விட இப்போது அவர் வளர்ந்து இருக்கிறார்.
மிகவும் குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட நானே வருவேன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தனுஷ், இந்துஜா, எல்லி அவரம், பிரபு, யோகி பாபு, ஹியா தவே, பிரணவ், பிரபவ், ஃபிராங்க்கிங்ஸ்டன், சில்வென்ஸ்டன், துளசி, சரவண சுப்பையா, ஷெல்லி என்.குமார்ஆகிய நடிப்பு கலைஞர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கே.செல்வராகவன் நடித்துள்ளார்.
இது ஓர் இரட்டைக் குழந்தைகள் பற்றிய கதை.இரட்டைக் குழந்தைகளில் இருவரும் ஒரே மாதிரி இருப்பது ஒரு ரகம். இருவரும் இருவேறு துருவங்களில் இருப்பது இன்னொரு வகை. இந்த இரண்டாம் வகையில் உள்ள குணச்சித்திர முரண்பாடுகளை வைத்து உருவாக்கி உள்ள படம் தான் இது. சரி என்ன கதை?
பிரபு (தனுஷ்) கதிர் (தனுஷ்) இரட்டைக் குழந்தைகள். பிரபு புத்திசாலி. ஆனால் கதிர் முரட்டுத்தனத்துடன் கூடிய பிடிவாத குணமுடையவன். கதிர் பக்கத்து வீட்டு சிறுமியின் ஆடையை எரித்ததிற்காக மன்னிப்பு கேட்காததால் அவன் தந்தை அவனை மரத்தில் கட்டி இரவு வரை அங்கேயே விட்டு விடுகிறார். சிறிது நேரம் கழித்து அம்மா கதிர் கட்டை அவிழ்க்கச் செல்லும் போது கதிரை காணவில்லை. தவிப்புடன் தேடுகிறார்.காட்டில் எங்கோ ஒரு சைக்கோ மனிதன் அவனைச் சங்கிலியால் பிணைக்கிறான். அவனிடமிருந்து தப்பித்து கதிர் அந்த சைக்கோ மனிதனைக் கொடூரமாக கொன்றுவிடுகிறான். போலீஸ் கதிரைப் பிடிக்கிறது. இதை அறிந்த கதிரின் பெற்றோர் போலீஸில் இருந்து அவனை விடுவிக்கின்றனர். அன்றிலிருந்து கதிரின் அட்டகாசங்கள் அதிகமாகிறது.
கதிர் தனது தந்தையைக் கொன்று விடுகிறான். தாய் கதிரைக் காப்பாற்ற பொய் சொல்லி விடுவிக்கிறார். இதனால் விரக்தியாகும் தாய் ஜோதிடரிடம் கதிர் பற்றி கேட்க, கதிரும் பிரபுவும் பிரிந்து வாழ்ந்தால் தான் நல்லது என்று கூறுகிறார். அதனால் கதிரைக் கோயிலில் தனியாக விட்டு விட்டு தாய் பிரபுவுடன் வேறு ஊருக்குச் சென்று விடுகிறார். பிறகு இருபது ஆண்டுகள் கழித்து பிரபு தனது மனைவி புவனா மற்றும் குழந்தை சத்யாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். சக ஊழியர் குணா (யோகிபாபு) அவனைப் பார்த்து பொறாமை கொண்டு உன்னைப் புரிந்துகொள்ளும் மனைவியும் தெய்வத்தைப் போன்ற மகளும் உனக்கு இருப்பதாகச் சொல்லவே, அப்படிப்பட்ட பிரபு குடும்பத்தில் பெரும் புயல் வீசுகிறது. 12 வயது பிரபுவின் குழந்தை வினோதமாக நடந்து கொள்கிறது. அதற்குக் காரணம் சோனு பேய் என்றும் தன்னை துன்புறுத்துவதாக அவள் கூறுகிறாள். பிரபு மனநல மருத்துவர் ஆலோசனைப்படி சோனு பேயின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்ய புதிர் எழுகிறது. தன் குழந்தையைப் பயமுறுத்தும் பேயிடமிருந்து கிடைத்த குறிப்பின் மூலம் பிரபு கதிர் என்பவனைக் கொன்று தன் தம்பியைக் காப்பாற்றினால் தான் அந்த குழந்தையை விடுவிப்பதாக சோனு பேய் கூறுகிறது. அந்தக் கதிர் தன் சகோதரன் என்று பிரபு அறிகிறான். இரட்டையர்கள் ஏன் பிரியவேண்டும்?
கதிரின் மரணத்தைப் பேய் ஏன் விரும்புகிறது? சோனு யார்? இரட்டைக் சகோதரர்களுக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு?
என்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் படம்.
தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்கி உள்ளார்.படத்தில் வரும் மற்ற நடிகர்களுக்கு இடையே தனித்துத் தெரிபவர் தனுஷின் மகளாய் நடித்திருக்கும் ஹியா டேவி. பிரபு, இந்துஜா, யோகி பாபு, சரவண சுப்பையா, சூப்பர் சிங்கர் ஆஜித் என நிறைய வேடங்களில் பல தெரிந்த முகங்கள். ஆனாலும் யாருக்கும் பெரிய அளவில் எந்தவொரு ஸ்கோப்பும் திரைக்கதையில் இல்லை. செல்வராகவனும் ஒரு கேமியோ காட்சியில் வருகிறார். இதை மனப்பிறழ்வு கொண்ட ஒருவரின் கதையாக எடுத்து இருக்கலாம். அல்லது அமானுஷ்ய பேய்ப் படமாக எடுத்திருக்கலாம் . இரண்டையும் கலந்த மாதிரி எடுத்துள்ளார் செல்வராகவன்.யுவனின் பின்னணி இசை படத்துக்குப் பெரும்பலம்.
பழக்கப்பட்ட கதையான இரட்டையர்கள், ஹாரர், அமானுஷ்யம் என்பதையெல்லாம் கடந்தும் முதல் பாதி நிமிர்ந்து உட்காரவே வைக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் கதை சுத்தமாய் எடுபடவேயில்லை. பிளாஷ்பேக்கே பெருமளவு நேரத்தை எடுத்துக்கொள்கிறது. எந்தவித உப்புசப்புமின்றி வெறும் சம்பிரதாயமாகவே முடிந்துவிடுகிறது. சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட படத்தை, பழகிப்போன கதைக்களத்தில் முடித்திருக்கிறார் இயக்குநர்.எல்லாவற்றையும் விட தன் தம்பியின் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் படியாக காட்சிகளை வைத்துள்ளார்.
அது தனுஷ் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.