‘நாயாடி’ விமர்சனம்

ஆஸ்திரேலியாவில் உழைத்துச் சம்பாதித்து ஓரளவு பணத்தைச் சேர்த்துக்கொண்டு தமிழ் சினிமா ஆர்வத்தில் இங்கே ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ஆதர்ஷ் மதிகாந்தம்.அதில் அவர் வெற்றி பெற்றாரா என்பதைப் பார்ப்போம்.  படம்  ஜூன்  16ஆம் தேதி வெளியாக இருந்தது திரையரங்குகள் கிடைக்காததால் ஜூன் 23 ல் வெளியாகிறது.இது ஒரு திகில் படம் ,தனிமை காடு என்று வழக்கமான சூத்திரத்துடன்தான் கதை நகர்கிறது.  காட்டில் சிக்கிக் கொள்ளும் ஐந்து பேர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று கதையைச் சுருக்கமாகக் கூறலாம்.

ஆதர்ஷ், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி ஆகிய ஐந்து பேரும் அசாதாரணமான நிகழ்வுகளை ஆய்வு செய்து அதை யூடியூபில் பதிவிட்டு வருகின்றனர். தனது பங்களாவில் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும் அதை ஒளிப்பதிவு செய்து வெளியிடலாம் என்றும் ஒருவர் கூறுகிறார்.

இதற்காக இந்த ஐந்து பேரும் அந்த காட்டிற்குள் செல்கின்றனர். அங்கு, எதோ ஒரு அமானுஷ்ய விஷயம் தங்களைப் பின் தொடர்வது போன்று அவர்களுக்குத் தோன்றுகிறது. பயத்துடன் தங்கள் வேலையை தொடர்வதா? திரும்பிச் செல்வதா என்று தவிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். அந்த தீய சக்தி ஒவ்வொருவராக கொலை செய்ய ஆரம்பிக்கிறது.தப்பிக்க நினைத்து ஓடினால் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்கிறார்கள் இந்த நிலையில் இறுதியில் அந்த அமானுஷ்யத்திடம் இருந்து தப்பித்தார்களா? யார் இவர்களை திட்டம்போட்டு இந்த காட்டிற்குள் அழைத்து வந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நடித்தவர்களில் பலரும் புதுமுகங்கள் என்பதால் அந்த முகங்களையும் பாத்திரங்களையும் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது.ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சரியாக செய்ய முயற்சி செய்துள்ளனர்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த நாயாடி என்று பிற சமூகத்தால் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கதையை ஆவி, திகில், பேய் என்று கலந்து கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் .ஆரம்பம் ஏதோ வரலாற்று பூர்வமான பார்வையோடு தொடங்கி பிறகு சாதாரண திகில் படமாகச் சுருங்கி விடுகிறது.
சில காட்சிகள் திகிலாக இருந்தாலும் பலகாட்சிகள் இயக்குநரின் அனுபவமின்மையை வெளிக்காட்டுகின்றன.இயக்குநரின் ஆர்வத்தைப் பாராட்டலாம் .ஆனால் அவர் தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.