தனது தேக்கமான காலங்களில தானே இயக்கி நடிப்பது அர்ஜுனின் வழக்கம். ஆனால் தனது 150 வது படமான ‘நிபுணன் ‘ படத்தி்ல் அருண் வைத்தியநாதன் கதை, இயக்கத்தில் நடித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி, ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், சுமன், சுகாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அர்ஜுன் காவல்துறையின் புலனாய்வு பிரிவில் டி.எஸ்.பி.யாக இருக்கிறார். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் . எந்தச் சிக்கலான கேஸையும் புலன் விசாரணை செய்வதில் நிபுணர். திருமணம் ஆகி மனைவி ஸ்ருதியும் ஒரு பெண் குழந்தையும் உண்டு.இன்ஸ்பெக்டர்களாக பிரசன்னாவும், வரலட்சுமியும் உடன் பணியாற்றி வருகிறார்கள்.
அர்ஜுன் பணிபுரியும் போலீஸ் ஆபீசுக்கு மாஸ்க் போட்ட பொம்மை ஒன்று கூரியரில் வருகிறது. ஆனால் ஆரம்பத்தில் அவர்கள் அதை சாதாரணமாக எடுத்து கொண்டு விட்டு விடுவார்கள். அதனைத் தொடர்ந்து ஒரு கொலை நடக்கும் .பிறகுதான் அந்தக் கொலைக்கும் அந்த மாஸ்க் பொம்மைக்கும் தொடர்பிருப்பது தெரிய வருகிறது.
இதே போல அடுத்தடுத்து 3 கொலைகள் நடக்கின்றன. இறுதியாக அந்த அனாமதேய ,மர்மக் கொலைகாரனின் குறி அர்ஜுன் தான் என்பது தெரிய வரும்.
அர்ஜுன் அந்த கொலைகாரனிடம் இருந்து தப்பிக்கிறாரா? இல்லையா? தொடர் கொலைகளின் பின்னணி என்ன என்பதை கண்டு பிடிக்கிறாரா ? என்பது தான் படத்தின் முடிவை நோக்கிய மீதிக் கதை.
அர்ஜுன் இப்படத்தில் வழக்கமான போலீஸ் தொடர்பான வேடத்தில் நடித்திருந்தாலும் தனது நடிப்பை கச்சிதமாக வெளிப்டுத்தியுள்ளார். மேலும் தன் மகளுக்கு சிறந்த அப்பாவாகவும், சிறந்த கணவராகவும் வெவ்வேறு வகையில் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அர்ஜுனின் உதவியாளர்களாக வருகிற பிரசன்னா மற்றும் வரலக்ஷ்மி இவர்களது நடிப்பு அர்ஜுனுக்கு பக்க பலமாக இருந்தாலும் இவர்களின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.
சுமன், சுகாசினி , வைபவ் ரெட்டி மற்றும் உமா ரியாஸ்கான் ஆகியோர் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவர்களுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் விதம் பலே!
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவே படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. . அவரது பணியை போதுமான அளவிற்கு கொடுத்துள்ளார். மேலும் படத்தொகுப்பை சதீஸ் சூர்யா செய்துள்ளார்.
படத்திற்கு எஸ்.நவீன் இசையமைத்துள்ளார்.நவீனின் பின்னணி இசை பல இடங்களில் அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.பாடல்கள் அனைத்தையும் கேட்கும் விதத்தில் உள்ளன. பாடல்களில் ‘இதுவும் கடந்து போகும்’ , ‘வாடா மோதிப் பார்க்கலாம்’ இரண்டும் இதம்.
இயக்குநர் அருண் வைத்தியநாதன் வழக்கமான திரில்லர் கதையாக இருந்தாலும் படத்தை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்துள்ளார்.
படுகொலைகளை படமாக்கியவிதம் கொடூரமாக இருந்தாலும் அது ஏன்..? எதற்காக இந்தக் கொடூரம் என்பதற்கும் ஒரு காரணத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதுவே படத்தின் மீதான ஆர்வத்திற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
நடிகர்களின் குறைவில்லாத பங்களிப்பு.. எல்லாவற்றுக்கும் மேலாக சிறப்பான இயக்கம்.. இது எல்லாமும் சேர்ந்து இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டிய படம் என்று சொல்ல வைத்திருக்கிறது.
நிச்சயமாக இந்த ‘நிபுணன் ‘போரடிக்காத போலீஸ் ஸ்டோரி!