சம்யுக்தா விஜயன், கீதா கைலாசம், கஜராஜ்,மஷாந்த், பிரசன்னா பாலச்சந்திரன், கே.வி. என் மணிமேகலை, செம்மலர் அன்னம், ஹரிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகிய மூன்று பொறுப்புகளை ஸ்டீவ் பெஞ்சமின் ஏற்றிருக்கிறார்.
பர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன் சார்பில் மாலா மணியன் தயாரித்திருக்கிறார்.
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல நினைக்கப்படுபவர்கள் இவர்கள்.இவர்கள் பூவாத பூக்கள்.குரோமோசோம்களின் எண்ணிக்கை மாறாட்டத்தில் உருவாவது இந்த வினோத வடிவம். ஹார்மோன்களின் விளையாட்டு இவர்கள் பிறவிகளை முடிவு செய்கிறது.ஆணாகப் பிறந்த போதும் ஹார்மோன் மாறுபாட்டால், பாதிப்பால் வேறு பாலினத்தவராக மாறும் நபர்களை இந்தச் சமூகம் வேறு விதமாகப் பார்க்கிறது. அவர்களை திருநங்கைகளாகவே பார்க்கிறது, பெண்ணாக அங்கீகரிப்பதில்லை. அப்படி ஒரு சூழலுக்கு தள்ளப்படும் கதையின் நாயகனான அரவிந்த், பெண்மை கொண்ட பானுவாக மாற்றம் அடையும் போது நிகழ்கிற பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்களும் வலிகளும் வேதனைகளும் தான் இந்தப் படத்தின் கதை.
ஒரு பெண்ணாகப் பாலினம் மாற விரும்பும் படத்தின் நாயகன் அரவிந்த் தனது பெற்றோர் முதல் உறவினர்கள்,சக பணியாளர்கள், இந்த சமூகம் என்று எதிர்ப்படுவோரிடமெல்லாம் எதிர்கொள்ளும் இடர்களைப் பேசுகிறது இந்த ‘நீல நிறச் சூரியன்’.
‘ஐ அம் பானு ‘என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயலும் ஒற்றை வாக்கியத்தில் இருந்து தொடங்குகிறது படம்.
அரவிந்த மற்றும் பானு என்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சம்யுக்தா விஜயன், முதன்மை வேடத்தில் நடித்ததுடன், படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். வேற்று பாலினத்தவர்களின் வலியை சோகமாக மட்டுமே சொல்லாமல், திரை மொழியில், சிறப்பான உருவாக்கம் மூலம் சொல்லியிருப்பது மட்டுமல்ல படைப்பாற்றல் உள்ள ஒரு இயக்குநராகவும் மிளிர்ந்துள்ளார்.
பிறப்பில் அரவிந்த் என்ற ஆணாக இருந்தாலும், பெண்ணாக வேண்டும் என்ற விருப்பத்தை நோக்கி அவர் பயணிக்கும் போது தனக்குள் இருக்கும் பதற்றத்தை தனது நேர்த்தியான நடிப்பு மூலம் சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார் சக்யுக்தா விஜயன்.
பானுவாக மாறிய போது இந்த சமூகத்தின் பார்வையை எப்படிக் கடந்து செல்ல வேண்டும் என்பதை தனது இயல்பான நடிப்பு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.அவரது தோற்றம் ,உடல் மொழி, வசன உச்சரிப்பு அனைத்தும் பிரமாதம்.
மனநல மருத்துவராக நடித்திருக்கும் கிட்டி, அரவிந்தின் தந்தையாக நடித்திருக்கும் கஜராஜ் மற்றும் தாயாராக நடித்திருக்கும் கீதா கைலாசம், அரவிந்தின் உறவினராக நடித்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன், பள்ளி வி பியாக நடித்திருக்கும் கே.வி.என்.மணிமேகலை, கார்த்திக் வேடத்தில் நடித்திருக்கும் மசாந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமச்சந்திரன், மோனா பத்ரா, செம்மலர் அன்னம், கெளசல்யா, விஸ்வநாத் சுரேந்திரன், வைதீஸ்வரி என மற்ற பாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவருமே சொற்ப காட்சிகளில் வந்தாலும் பதிகிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பணிகளைக் கவனித்துள்ள ஸ்டீவ் பெஞ்சமின், தனது பணி மூலம் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
பாலினச் சிக்கல் உள்ளவர்களையும் பாலினம் மாறக்கூடியவர்களையும்
இந்தச் சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் சம்யுக்தா விஜயன், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை மிகவும் நேர்த்தியுடன் கையாண்டு பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்து விடுகிறார்.
இயக்குநர் சொல்ல வந்தது ஏற்கெனவே பல்வேறு ஊடகங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், முதிர்ந்த கூறுமுறையால் தான் சொல்ல வந்ததைத் தனித்துக் காட்டியிருக்கிறார் சம்யுக்தா .திரைப்பட உருவாக்கத்தில் சர்வதேசத் தரத்தை எட்டி உள்ளார்.
மொத்தத்தில், ‘நீல நிறச் சூரியன்’ மக்களைச் சிந்தனை செய்ய வைக்கும்.ஒரு கணம் தங்களுக்குள் திரும்பிப் பார்த்து தங்கள் மனசாட்சியை,உள்ளுணர்வைப் பரிசீலனை செய்ய வைக்கும் படம் என்று கூறலாம்.