‘நேசிப்பாயா’ திரைப்பட விமர்சனம்

ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், குஷ்பூ ,சரத்குமார், பிரபு ,கல்கி கோச்சலின் ராஜா, விஷ்ணுவர்தன் நடித்துள்ளனர்.விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

நாயகன் ஆகாஷ் முரளி, நாயகி அதிதி ஷங்கரைக் கண்ட நாள் முதல் காதல் கொள்கிறார்.இடைவிடாத பின் தொடர்தலால் ஆகாஷ் முரளி அரும்பாகி மொட்டாகி காயாகி கனிய வைக்கிறார் தன் காதலை.கனிந்து இணைகின்ற காதலில் ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதத்தில் பிரிவு நேர்கிறது
நாயகிஅதிதி ஷங்கர் வேலைக்காக போர்ச்சுக்கல் நாடு சென்று விடுகிறார். நாயகன் ஆகாஷ் உள்ளூரில் பணி செய்ய ஆரம்பிக்கிறார்.
இந்தக் கதையில் எதிர்பாராத திருப்பம் , போர்ச்சுக்கல் சென்ற அதிதி ஷங்கர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார்; சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

இந்தத் தகவல் ஆகாஷுக்குத் தெரிய வருகிறது. தன் காதலியைக் காப்பாற்ற அவர் போர்ச்சுக்கல் செல்கிறார்.அவர் தன் ஆசை நாயகி காப்பாற்றினாரா ? கொலைக்கான காரணம் என்ன? பின்னணி என்ன? அதிதி சிக்கியது எப்படி? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது தான் ‘நேசிப்பாயா’ படத்தின் திரைக்கதை செல்லும் பாதை.

இந்தப் படத்தில் அர்ஜுனாக ஆகாஷ் முரளியும் தியாவாக அதிதி ஷங்கரும் ஆதிநாராயணனாக சரத்குமாரும் கௌதமாக பிரபுவும் வசுந்தராவாக குஷ்பூவும் வருகின்றனர்.

திரைப்படங்களில் இதயம் முரளி பாத்திரம் பிரபலமானது. காதலைச் சொல்வதற்கு தயங்கும் பாத்திரம் அது.ஆனால் அவரது மகன் ஆகாஷ் முரளி இந்தப் படத்தில் துணிச்சலான நாயகனாக வெளிப்பட்டுள்ளார்.துடிக்கும் வயது, துறுதுறுப்பான தோற்றம் என்று தான் ஏற்ற நாயகன் பாத்திரத்திற்கு முடிந்தவரை ஈடு கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார் ஆகாஷ் முரளி.அவரது உயரமும் நடிப்பு வெளிப்பாடும் திரையுலகில் அவருக்கான இடத்தைத் தேடி தரும்.

ஒரு பக்கம் கல்லூரி மாணவியாகவும்,இன்னொரு பக்கம் வாழ்க்கை பற்றிய முதிர்வான சிந்தனையுடனும் இருக்கும் பெண்ணாகவும் வரும் அதிதி சங்கர் வாழ்வின் இரு வேறுபட்ட  கட்டங்களில் ஈடு கொடுத்து தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நடிகர் ராஜா  சைலண்டாக வில்லத்தனம் செய்திருக்கிறார். முக்கியமான ரோலில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் குஷ்பூ தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஷிவ் பண்டிட்டிற்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் கச்சிதமாக அதனை செய்துள்ளார். நடிகர் பிரபு ஒரு சீனில் வந்தாலும் பதிகிறார். அதிதிக்காக வாதாடும் வக்கீலாக வருகிறார் கல்கி கோச்சின். மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது முதிர்ந்த நடிப்பு மூலம் திரைக்கதைக்குப் பலம் சேர்க்கிறார்கள்.

ஒரு காதல் கதையில் துப்பாக்கிகள் பேசும் இடங்களும் உள்ளன.சரத்குமார் குஷ்பூ சம்பந்தப்பட்ட துப்பாக்கிக் காட்சிகள் பரபர ரகம்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இளமை பொங்குகிறது. பாடல்கள் சுமார் ரகம் தான்.என்றாலும் பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணம் செய்துள்ளது.

ஒளிப்பதிவாளர் எரிக் பிரைசன் கேமரா காட்சிகளை பிரமாண்டமாக்கி உள்ளது.துரத்தல்கள் சண்டைக்காட்சிகளில் இது தமிழ்ப் படமா? என்று வியக்க வைக்கிறது.
படத்தொகுப்பாளர் ஏ.ஸ்ரீகர்பிரசாத் திரைக்கதைக்கு சுவாரஸ்ய பலம் சேர்க்கும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் .

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றிப் படத்தில் காட்டியுள்ளார்கள்.அப்படி ஒரு பிரச்சினையைச் சந்திக்கும் நாயகி அதை மீட்கப் போராடும் நாயகன் என்கிற ஒரு வரிக் கதை தான் படம்.என்றாலும் அதில் காதல்,ஆணவத்தால் நிகழும் மோதல்,ஆக்சன் என்று வணிக மசாலாக்களை தூவி பிரம்மாண்டமான முறையில் ஒரு வெற்றிப் படத்திற்கான வடிவத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

மொத்தத்தில், ‘நேசிப்பாயா’ இளம் திரை ரசிகர்களைக் கவரும்.