‘நையப்புடை’ விமர்சனம்

01ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஆதரவற்ற எஸ்.ஏ. சந்திரசேகரன் சென்னை குடிசைப்பகுதி சிறுவர்களுடன் நட்பாக இருக்கிறார். பிறகு எப் எம். ஆர்.ஜே சாந்தினியின் அன்பும் டிவி ரிப்போர்ட்டர் பா.விஜய்யின் நட்பும் கிடைக்கிறது. அவர்களுக்குத் திருமணமும் செய்து தன்னுடன் தங்கவைக்கிறார். அவர்களிடையே கசப்புவந்து பிரிய நேரும்போது அறிவுரை கூறி சேர்த்து வைக்கிறார். ஒரு தவற்றைத் தட்டிக் கேட்டதால் ரவுடி பேபி அனகோண்டாவின் பகை அவரைத் துரத்துகிறது. அவனது கொட்டத்தை அடக்கவும் துணை போகும் போலீஸ் அதிகாரியின் அயோக்கியத்தனத்தை முடக்கவும்  எஸ்.ஏ.சி,பா.விஜய், சாந்தினி 3 பேர் கூட்டணி என்ன செய்கிறார்கள்  என்பதே முடிவு.

சிறு பசங்களுடன் விளையாட்டுக்கு துடிக்கும் துறுதுறு கிழவராக  எஸ்.ஏ. சந்திரசேகரன் அறிமுகமாகிறார். முதலில் அவர்கள் இவரை உதாசீனப் படுத்தி, பிறகு தங்களுக்குள் ஒருவராக்கிக் கொள்கிறார்கள். பிறகு பா.விஜய்யின் நட்பு,  போலீஸ் அதிகாரி எம்.எஸ்.பாஸ்கரின் அடாவடி என்று கதை செல்கிறது.

இளமைத் துள்ளலுடன் எஸ்.ஏ:சியின் அறிமுகம் நன்றாகவே இருக்கிறது.சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார்.குறிப்பாக அந்த பஸ்ஸில் நடக்கும் சண்டை!

பா.விஜய்- சாந்தினி பாடல் காட்சிகளில் இளமை கொடி கட்டிப் பறக்கிறது.ஆனாலும் கதைப்போக்குக்கு உதவ வில்லை.எம்..எஸ்.பாஸ்கர் கெட்ட போலீசாக வந்து மிரட்டுகிறார். மொட்டை ராஜேந்திரன் தாதாவாக வருகிறார். அடிக்கடி பாட்டுப்பாடி சிரிக்கவும் வைக்கிறார்.

மசாலா என்கிற பெயரில் எம்.ஜி.ஆர் காலத்து பாணியிலான காட்சிகள் வைத்து இருப்பது பலவீனம்.

எஸ்.ஏ.சியை இன்னமும் சரியாகப் பயன் படுத்தியிருக்கலாம் கெட்ட .போலீஸ் எம்..எஸ்.பாஸ்கரை அவரது கண்ணைக்கொண்டே குத்த வைப்பது நல்ல திருப்பம்தான். ஆனால் அதை இன்னமும் சரியாக நேர்த்தியாகக் காட்டியிருக்கலாம்.

19 வயது இயக்குநர் விஜய்கிரண் இயக்கியதாலோ என்னவோ சிறுபிள்ளைத் தனமான காட்சிகள் நிறையவே உண்டு .73வயதில் ஒரு நடிகராக எஸ்.ஏ.சி வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.