மனிதனின் ஆதார உணர்ச்சியான பசி , கோபம், காமம் போல புறங்கூறும் உணர்ச்சியும் கூடவே இணைந்துவிட்டது.
புறங்கூறுதல் என்கிற போக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு இருந்தது போலும். அதனால் தான் வள்ளுவர் புறங்கூறாமை பற்றி எழுதி இருக்கிறார்.
யாரோ ஒருவரைப் பற்றிப் புறம் பேசுவதில் அவதூறு செய்வதில் இன்பம் காணும் போக்கு இப்போதைய சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. அதுவும் சமூக வலைத்தளங்களில் பரபரப்புக்காக எந்த ஒரு அப்பாவியையும் குற்றவாளியாகச் சித்தரித்து விட முடியும். அப்படி விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செய்த ஒரு காரியம் எப்படி ஒருவரின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதைச் சொல்லும் படம்தான் பயணிகள் கவனிக்கவும்.
பொழுதுபோக்குப் படங்களில் மத்தியில் சமுதாயத்தில் பரவியிருக்கும் நோயைப் பற்றிக் கூறிப் பழுது நீக்கும் படமாக வெளியாகி உள்ளது இப்படம்.
விதார்த், லட்சுமிபிரியா சந்திரமௌலி, கருணாகரன், மாசூம் சங்கர், சரித்திரன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான ’விக்ருதி’ படத்தின் மறு உருவாக்கம் இப்படம்.தமிழில் இதனை இயக்கி உள்ளவர் எஸ்.பி. சக்திவேல்.ஒளிப்பதிவு எஸ். பாண்டி குமார்.
ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் மலையாளத்தில் பேசப்பட்ட ஒன்றாகும். இப்படம், தமிழில் ஆஹா ஓடிடி தளத்தில் ஏப்ரல் 29 ஆம்
நேரடியாக வெளியாகிறது.
ஓடிடி தளங்கள் என்கிறபோது ஒரு சுதந்திரம் இருப்பதாக நினைத்துக்கொண்டு விருப்பம் போல வெளிவரும் படங்கள் மத்தியில் இது ஒரு நேர்த்தியான முயற்சியாக வெளிவந்துள்ளது.
சரி கதைதான் என்ன?
விதார்த்தும் லட்சுமியும் காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாதாரண நடுத்தர வர்க்க வாழ்க்கை.அதிலும் மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்கின்றனர். இன்னொரு புறம் துபாயில் இருந்து ஊருக்கு வரும் கருணாகரனுக்கு வீட்டில் பெண் பார்த்து திருமண ஏற்பாடுகளுக்குத் திட்டமிட்டு உள்ளனர்.
விதார்த் மெட்ரோ ரயிலில் தூங்குவதைக் கருணாகரன், குடிபோதையில் தூங்குகிறார் என்று தவறுதலாக படமெடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார். அது வைரஸ் நோய் போல் பரவி விடுகிறது. இதனால் விதார்த் வாழ்க்கையில் என்ன ஆனது? கருணாகரனுக்குத் திருமணம் நடைபெற்றதா என்பது தான் பயணிகள் கவனிக்கவும் படத்தின் கதைச்சுருக்கம்.
மாற்றுத் திறனாளியாக மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு விதார்த்திற்குப் பாராட்டுகளும் கைகுலுக்கல்களும். வாய் பேச முடியாமல் சைகை உடல்மொழியால் ஒவ்வொன்றையும் கூறும்போது அசத்துகிறார். உணர்ச்சிகரமான முக்கியமான தருணங்களில் சிறப்பாகவே நடித்துள்ளார்.
வெளிச்சம் விழாத சில நடிகர்கள் வாய்ப்பு கிடைத்தால் சாதிப்பார்கள் என்பதற்கு விதார்த் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்குள் அவர் வெளிப்படுத்தியுள்ள நடிப்புத் திறமை சாட்சியமாக இருக்கிறது.
லட்சுமியும் விதார்த்தின் மனைவியாக வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்.
உயர்ந்தவர்கள் படத்தில் கமல்ஹாசனும் சுஜாதாவும் நடித்திருப்பதை நினைவூட்டி விதார்த் -லட்சுமி இருவரின் யதார்த்த நடிப்பும் கவர்கிறது.
வண்டியில் போவது தொடங்கி, போகுமிடங்கள்,சாப்பிடும் சாப்பாடு வரை தங்கள் ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுத்து பதிவேற்றி விளம்பரத்திற்கு அலையும் சமூகத்தின் குரூர இளிப்பு முகங்களின் இயல்பு ஒரு பாத்திரத்தின் மூலம் காட்டப்பட்டுள்ளது.
கருணாகரனின் நண்பராக வரும் சத்யன் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களும் ரசிக்கும் படியாக உள்ளன.
பொதுவெளியில் யாரென்றே தெரியாத ஒருவரின் சிறு செயல்களை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உணர்ச்சி பூர்வமாக இப்படம் கூறுகிறது. சாதாரணமாகப் பதிவிட்டுவிட்டுக் கடந்து போய் விடும் நாம் அதன் பின் நிகழ உள்ள தாக்கத்தைக் கண்டு கொள்வதில்லை. இதனை அழுத்தமாக சொல்ல வேண்டும் என்று இயக்குநர் சக்திவேல் செய்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது.
படத்தில் வணிக நோக்கிலான வெற்றுப் பரபரப்புகள் இல்லாமல் கதை அதன் போக்கில் சென்று கொண்டிருக்கிறது . அதனால் சற்று மிதமான வேகத்தில் செல்வது போல் இருந்தாலும் முடிவும் சொல்லியிருக்கும் கருத்தும் நன்று.