‘பராரி’ திரைப்பட விமர்சனம்

ஹரி சங்கர் ,சங்கீதா கல்யாண் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழில் பெரிய வேடி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு சாம் ஆர் டி எக்ஸ், கலை ஏ .ஆர் . சுகுமார்.ராஜுமுருகன் எழுதிய கதையைக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

கிராமங்களில் பொதுவாக ஏழைகளைப் பராரிகள் பஞ்சப்பராரிகள் என்பார்கள்.”நீயும் கூலி நானும் கூலி .நீயும் நானும் அடிச்சுக்கிட்டு ஏண்டா அம்மணமா நிக்கணும்?” இது படத்தில் முக்கியமானது மட்டுமல்ல முன்னோட்டத்தில் இடம்பெற்று பரபரப்பாக அனைவரையும் சென்றடைந்துள்ள வசனம். இதன் மையத்தைப் பிடித்துக் கொண்டு செல்கிறது கதை.

உள்ளூரில் இருவேறு ஜாதிகளாக மேல் கீழ் தன்மைகளோடு மோதிக்கொள்ளும் அவர்கள், பிழைப்பு தேடி வெளி மாநிலம் செல்லும் போது அங்கு அவர்கள் எதிர்கொள்வது என்ன என்பதைச் சொல்லும் கதை தான் இது.ஜாதி, மதம், இனம் என்று மக்களைப் பிரித்து வெறுப்பு அரசியல் செய்து அதில் குளிர் காய்ந்து ரத்தம் குடிக்கும் அதிகார வர்க்க ஓநாய்கள் பற்றிய கதை என்றும் கூறலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரே மொழி பேசும், ஒரே நம்பிக்கைகள் கொண்ட, ஒரே கடவுளை கும்பிடும் ,ஒரே தொழிலைச் செய்கிற ,ஒரே மாதிரி பொருளாதார நிலை கொண்ட மக்கள் ,ஜாதி ரீதியாக மட்டும் பிரிந்து இருக்கிறார்கள்.அவர்களுக்குள் அடிக்கடி முட்டல் மோதல்கள் நிகழ்கின்றன.அவர்கள் பிழைப்பு தேடி கர்நாடகா செல்லும் போது அங்கே உள்ள இனப் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள் அப்போது அவர்கள் தங்களை எப்படி உணர்கிறார்கள் அவர்கள் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை சொல்லும் கதை தான் இது.

எல்லா ஊரிலும் மக்களை பல்வேறு வகையில் பிளவு படுத்தி மோதவிடும் அரசியல் நடக்கிறது.ஆனால் கலவரத்தைத் தூண்டிவிட்டு அவர்கள் சொகுசாக இருக்கிறார்கள் .இதை மக்கள் உணராமல் இன்றும் இருக்கிறார்கள் என்கிற கருத்தைச் சொல்கிறது படம்.

கடவுள் நம்பிக்கை, மேல் கீழ் ஜாதி வேறுபாடுகள், முதலாளிகளின் நயவஞ்சகங்கள், வஞ்சிக்கப்படும் ஏழைகள்,அதிகார வர்க்கத்தின் நரித்தனம்,கிராமத்து கூத்துகள் ,கலைகள், காதல் அனைத்தும் கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் நடித்த நடிகர்களை விட கதாபாத்திரங்கள் தான் வெளியே தெரிகின்றன. எனவே ஒரு இயல்பான நாட்டு நடப்பு பேசுகிற ஒரு படமாக இதைப் பார்க்க முடிகிறது.முன்னணி கதாபாத்திரங்களில் ஹரி சங்கர் ,சங்கீத் கல்யாண் நடித்திருக்கிறார்கள். குறை சொல்ல ஒன்றுமில்லை. இருந்தாலும்,படத்தில் நடித்த மற்றவர்கள் பெரும்பாலும் தொழில் ரீதியான நடிகர்கள் அல்ல. எனவே இயல்பான மனிதர்களாகவே தெரிகிறார்கள்.உள்ளூரில் வாழும் மக்களும் அவர்களின் நடத்தைகளும் அவர்கள் சார்ந்த மோதல்களும் அழகாக இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கர்நாடகாவில் பெங்களூரில் நடக்கும் சம்பவங்கள் யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பகடைக்காய் பலிகொள்ளப்படும் ஏழைகள் எங்கும் இருக்கிறார்கள் என்பதைக் கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்களும் கூறுகின்றன.

நாயகன் நாயகி காதல் காட்சிகள் வழக்கமான பாணியில் உள்ளன.படத்தின் முதல் பாதியில் திரும்ப திரும்ப அந்த மகள்களே காண்பிப்பது சற்றுச் சலிப்பூட்டுகிறது.கதை எதை நோக்கிச் செல்கிறது என்று முடிவு எடுக்க முடியவில்லை.

சில போதாமைகள் இருந்தாலும் கிளைமாக்ஸ் ஏற்படுத்தும் வலி மற்றவற்றைப் புறந்தள்ளுகின்றன.ராஜுமுருகன் நினைத்த கதையை  காட்சிகளின் மூலம் உருவாக்கி இயக்குநர் எழில் பெரிய வேடி வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறலாம்.சமகாலத்தைப் பிரதிபலிக்கிற ஒரு படம் இந்தப் ‘பராரி’.

.