‘பாட்னர் ‘விமர்சனம்

ஆதி ,யோகி பாபு ,ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வாணி, ஜான்விஜய், முனீஸ் காந்த், பாண்டியராஜன்,ரவி மரியா, ரோபோ சங்கர், தங்கதுரை, அகஸ்டின் நடித்துள்ளனர்.மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார் .

சபீர் அகமது ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். எடிட்டர் பிரதீப் ஈ ராகவ். ராயல் பார்ச்சனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூர்யா பிரகாஷ் தயாரித்துள்ளார்.

சொந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட ஆதி கடனாளியாகிறார்.பணம் கொடுத்த கந்து வட்டிக்காரர் தங்கையைப் பெண் கேட்கிறார்.சென்னை வந்து பிழைத்துக் கொள்ளலாம் என்று ஆதி சென்னைக்கு வருகிறார்.  சென்னையில் நாகரிகமாகத் திருட்டுத் தொழில் செய்து வரும் யோகி பாபு உடன் கூட்டு சேர்ந்து பார்ட்னர் ஆகி,சில களவாணி வேலைகளையும் செய்கிறார்கள்.  ஜான் விஜய் ஒரு வேலையை முடித்துக் கொடுத்தால் பணம் தருவதாகக் கூறுகிறார். அதன்படி விஞ்ஞானி ஆர்.பாண்டியனிடம் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சிப் ஒன்றைத் திருடுவதற்காகச் செல்கிறது இந்தக் கூட்டணி.அங்கு நடந்த களேபரத்தில் தவறுதலாக யோகி பாபுவுக்கு ஊசி ஒன்று போடப்படுகிறது. ஊசி போட்ட பின் ஆண் பெண்ணாக மாறி ஹன்சிகாவாக ஆகிறார். ஹன்சிகா மீண்டும் யோகி பாபுவாக மாறினாரா? ஆதிக்குத் தேவைப்பட்ட பணம் கிடைத்ததா?தங்கையின் திருமணம் என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு விடை தருவதே படம்.

நாயகன் ஶ்ரீதராக ஆதி நடித்துள்ளார். இதுவரை அடர்த்தியான பாத்திரங்களை ஏற்று வந்த ஆதிக்கு இது யானை பசிக்கு ஒரு சோளப் பொரி வேடம் தான்.எனவே ஆதி நடிப்பில் சாதிக்க வாய்ப்பில்லை எனும் நிலை.எனவே அவர் பாத்திரம் படம் பார்ப்பவர்களைப் பாதிக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய் விடுகிறது.

கல்யாணாக யோகிபாபு. முதல் பாதி முழுக்க வருகிறார். ஆனால் சிற்சில இடங்களில் தான் சிரிக்க வைக்கிறார். படத்தில் எதிர்பாராத வரவு ஹன்சிகா தான்.
இரண்டாம் பாதியில் சிரிப்பூட்டும் பகுதியை அவர் கையில் எடுத்துக் கொள்கிறார்.அதில் வெற்றியும் பெற்றுள்ளார். உள்ளுக்குள் ஆணாகவும் வெளியில் பெண்ணாகவும் வித்தியாசம் காட்டுகின்றார்.

படத்தில் இந்தப்பாத்திரங்கள் தவிர, மூடர்கூட்டமாக கூமுட்டை குவியல்களாக பல பாத்திரங்கள் வருகின்றன. ரோபோ சங்கர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, ‘டெம்பிள் மங்கீஸ்’ அகஸ்டின், வில்லன் ஜான் விஜய் , அரசியல்வாதி ரவிமரியா விஞ்ஞானியாக ஆர்.பாண்டியராஜன் போன்றோர் தனது அசட்டுத்தனங்களால் அலுப்பூட்டுகிறார்கள். ஆதியின் காதலியாக வரும் பாலக் லால்வாணி, யோகி பாபுவின் காதலியாக வரும் ‘மைனா’ நந்தினி, ஹெச்.ஆராக வரும் முனிஷ்காந்த் எனப் படையெடுத்து வருகிறார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசை பரவாயில்லை ரகம். இயக்குநர், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் அதிகமாக உழைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாகக் கடைசி 20 நிமிடங்களில் தான் நகைச்சுவைக் களை கட்டுகிறது. லாஜிக் மீறல்களை குழி தோண்டிப் புதைத்து விட்டுச் சிரித்து வைக்கலாம்.
நடிக்கத் தெரிந்த நல்ல நடிப்புக் கலைஞர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கான இடம் படத்தில் கொடுக்கப்படாததால் நடிப்பால் எவரும் கவர முடியாத நிலையில் படம் உள்ளது.  இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக கையாளப்பட்டிருந்தாலும் கூட காட்சிகளின் சுவாரஸ்யமின்மை அனைத்தையும் தலைகீழாக மாற்றி நம்மைச் சோதித்து விடுகிறது.