அர்ஜுன் தாஸ் ,கா ளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன், டி எஸ் கே , கிச்சா ரவி, பூவை யார், எப்புட்றா ரோகன், காவியா நடித்துள்ளனர்.
விஷால் வெங்கட் இயக்கி உள்ளார். இசை – டி இமான், ஒளிப்பதிவு -பி எம் ராஜ்குமார், படத்தொகுப்பு பிரசன்னா ஜிகே ,கலை இயக்கம் – மனோஜ் குமார்.கேம்பிரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் .
காளக்கம்மாய்ப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு காலத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.மலைமுகட்டில் அமர்ந்து மயில் அகவும் ஓசையையும் அதைத்தொடர்ந்து வானில் தெரியும் ஜோதியையும் அவர்கள் நல்ல அறிகுறிகளாக நம்புகிறார்கள்.அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இந்த அறிகுறிகள் ஒரு காலத்தில் வராமல் போகவே அவர்களுக்குள் புகைச்சல் வருகிறது.இயற்கைச் சீரழிவால் பெரிய கல் விழுந்து உடைந்து இரண்டாகி அந்த ஊரும் இரண்டாகச் சிதறுகிறது.
பெரிய கல்லை ஒரு கூட்டமும் சிறிய கல்லை ஒரு கூட்டமும் எடுத்துக் கொண்டு தெய்வமாக வழிபடுகிறது.காளக்கம்மாய்ப்பட்டி என்பது காளப்பட்டியாகவும் கம்மாய்ப் பட்டியாகவும் பிரிகிறது. மக்களும் பிளவுண்டு நிற்கிறார்கள்.இதன் மூலம் இரு சமூகத்தினர் இடையே எழும் சண்டை சச்சரவுகள் மோதல்கள் அரசாங்கத்திற்குப் பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினையாக இருந்து வருகிறது.அரசு தரப்பில் எவ்வளவோ சமாதான முயற்சிகள் எடுக்கப்பட்டும் அனைத்துமே தோல்வியில் முடிகின்றன. இந்தப் பிளவைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும் குளிர் காய்கிறார்கள்.
அப்படிப்பட்ட சூழலில் அங்கே வாழும் கதிர் என்கிற காளிவெங்கட் இரு கூட்டத்தையும் ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறார். ஆனால் பலன் அளிக்காமல் காலம் நகர்கிறது .அவரது தங்கைதான் ஷிவாத்மிகா ராஜசேகர். நண்பன் மணி முத்துதான் அர்ஜுன் தாஸ்.அவர் மீது ஷிவாத்மிகாவுக்குக் காதல்.
அந்தப் பூசல் நிறைந்த சூழலை விட்டு வெளியேற வேண்டும் என்று அர்ஜுன் தாஸ் நினைக்கிறார். ஆனால் அந்த ஊரில் தான் இருப்பேன் என்று காளி வெங்கட் பிடிவாதமாக இருக்கிறார்.
ஒரு நாள் காளி வெங்கட் இறந்துவிட அதிர்ச்சியில் உறைகிறது கிராமம். இருந்தாலும் அவர் உடலில் இருந்து இயற்கை வாயு அதாவது குசு வெடி போல் வெடித்து ஓசை அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. இதனால் அவர் இறக்கவில்லை என்று அர்ஜுன் தாஸ் நம்புகிறார். இரண்டு ஊருக்கும் மத்தியில் உள்ள ஆலமரத்தடியில் காளி வெங்கட்டை ஒரு நாற்காலியில் அமர்த்தி வைக்கிறார் அர்ஜுன் தாஸ். வாயு வெளியேறும் போது காளி வெங்கட் உடல் அதிர்கிறது. அந்த ஊர் பூசாரி ஊருக்கு சாமி வந்திருப்பதாகக் கூறுகிறார். இதனால் தங்கள் வேற்றுமைகளை மறந்து சாமியாக அந்த ஊர் நினைக்கிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் ‘பாம்’ படத்தின் மீதிக் கதை
கதையின் நாயகனான அர்ஜுன் தாஸ் ,இப்படி ஒரு கிராமத்து மண்மணம் சார்ந்த பாத்திரத்தில் தன்னை மாற்றிக் கொண்டு தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கதை அவரைச் சுற்றிச் சுழலாவிட்டாலும் தனது நடிப்பு பயணத்தில் இது ஒரு பரிமாணம் என்று உணர்ந்து அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சினிமாத்தனமும் ஹீரோயிசமும் இல்லாத அந்தப் பாத்திரத்தில் நடித்து ஒரு பண்பட்ட நடிகராக அந்த மணிமுத்து பாத்திரத்தில் வெளிப்பட்டுள்ளார்.
கதாநாயகி ஷிவாத்மிகா அந்தக் கிராமத்து மனுஷியாக மாறி சிரிக்கும் கண்களுடன் அழகாகத் தோன்றி அளவாக நடித்து தனது கடமையைச் செய்திருக்கிறார்
காளி வெங்கட் இதுவரை ஏற்று நடித்து வரும் துணைப் பாத்திரங்களில் பளிச்சிட்டு வருபவர், இதில் சில காட்சிகளில் மட்டும் உயிருடனும் , பல காட்சிகளில் இறந்து பிணமாகவும் நடித்து தனது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவராக வரும் அபிராமி தனது தோற்றம் மூலமே படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார்.அவர் பேசும் வசனங்கள் பளிச் ரகம். படத்தில் வரும் சிங்கம் புலி, பாலசரவணன், நாசர், ராட்சசன் சரவணன் போன்ற நடிகர்களும் சரியாகவே பாத்திரங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
படம் ஒரு பாட்டி பேரனிடம் கதை சொல்வதாகத் தொடங்குகிறது.முதலில் அந்தக் கதையும் காட்சிகளும் சற்று அன்னியமாகத் தோன்றினாலும் பிறகு நாம் அந்த ஊருக்குள் நுழைந்து அவர்களின் நம்பிக்கையில் ஆழ ஆரம்பித்து விடுகிறோம்.
தங்களுக்குள் பேதங்கள் காட்டி இரண்டு வர்க்கமாகப் பிரிந்து கிடக்கும் அந்தக் கிராமத்தை புரட்சி செய்து இணைக்கா விட்டாலும் மக்களிடம் நிலவி வரும் நம்பிக்கையை வைத்தே இணைத்து இருப்பது இயக்குநரின் சாமர்த்தியம் என்றே கூற வேண்டும்.அப்படிப்பட்ட கதையை உருவாக்கி சுகமான முடிவை கொடுத்துள்ளார் இயக்குநர். இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் குறை சொல்ல ஒன்றும் இல்லை.காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி எம் ராஜ்குமார்.
செயற்கையான பரபரப்புகள் இல்லாமல் இயல்பாக நகர்கிறது கதை. வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.
அழகான திரை உருவாக்கத்தில் ஒரு நல்ல கருத்து சொன்ன படத்திற்கு ‘பாம்’ என்றும் அது சார்ந்த சிரிப்பு வர வைக்கும் படியான ஒரு மலிவான தலைப்பு ஏன் என்று கேள்வி எழுகிறது. வேறு நல்ல தலைப்பு வைத்திருக்கலாம்.எப்படியோ ஒரு புதிய திரை அனுபவம் தான் இந்த’பாம்’ திரைப்படம்.


