பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் குரங்கு பொம்மை.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கதாநாயகன் விதார்த், ”இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு நிறைய காம்பினேஷன் காட்சிகள் இல்லை. ஆனால், அவரது காட்சிகள் படப்பிடிப்புக்கு நடக்கும்போது அருகில் இருந்து கவனிப்பேன். மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் நிச்சயமாக இந்த படத்தில் சிறந்த நடிப்பிற்காக தேசியவிருது நிச்சயம் வாங்குவார், நமது இயக்குநர் இமயம்.
அவர் படத்தில் நான் நடித்திருப்பதால் எனக்கு நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதோடு, நான் இப்போது இயக்குநர் இமயம் இயக்கும் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஏன் இதைச்சொல்கிறேன் என்றால், இது எல்லாம் அமைய நித்திலனும் குரங்கு பொம்மையும் தான் காரணம். எனவே நித்திலனுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படம் உருவாக என் நண்பர்கள் கண்ணன் மற்றும் கர்ணா ராஜா மிக முக்கியமான காரணம். அவர்கள் இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
பாரதிராஜா படத்தில் நடிப்பது அவ்வளவு கஷ்டம், சம்பளம் தரமாட்டார், திட்டுவார், அடிப்பார் என்று சொல்வார்கள். ஆனால், பாரதிராஜா அவர்கள் என்னிடம் கதை சொன்னதும் உனக்கு இவ்வளவு இலட்சங்கள் சம்பளம் தருவேன் என்று ஒரு நல்ல தொகையை சொன்னார். நானும் சரி என்றேன். அவர் என்ன தொகை சொன்னாரோ, அதே அளவு தொகை ஒரு கடன்காரருக்கு நான் உடனடியாக கொடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நான் அப்போது இருந்தேன். பாரதிராஜா சார் என்னை அழைத்து கதை சொன்னதும், எனக்கு அட்வான்ஸ் பணத்தை செக்காக கொடுத்தார். சம்பளமாக சொன்ன தொகையில் ஒரு கால்வாசியை அட்வான்ஸ் செக்காக கொடுத்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால் சம்பளமாக பேசிய முழுத்தொகையையும் ஒரே செக்’காக கொடுத்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. உடனே அந்த செக்கை வைத்து என் கடனை திருப்பிகொடுத்து அந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பித்தேன். அதே மாதிரி அவ்வளவு அழகாக அன்பாக நடிக்கச் சொல்லிகொடுத்தார். அந்தபடம் வந்ததும் என் வளர்ச்சி அடுத்த லெவலுக்கு கண்டிப்பாக போகும்” என்றார்.