பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை; மக்களிடம் அமைதி திரும்பினால் போதும் : நடிகர் ஆர்.கே. சுரேஷ்!


 நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு மே, 19 பிறந்தநாள்.
ஊரடங்கு  பொது முடக்கம் என்று நாடே ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அவருக்குப் பிறந்தநாள் வருகிறது.வழக்கமாகத் தன் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் ஆர்.கே. சுரேஷ், இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.ஊரறிய கொண்டாடுபவர் ஒடுக்கமான சூழ்நிலையில் மனதிற்குள்மட்டும் மகிழ்ச்சி அடைந்து கொள்ள வேண்டிய இறுக்கமான  சூழலில் இருக்கிறார்.
“கொரோனா காலம் முடிவுக்கு வந்து நாட்டில் அமைதி திரும்பி படப்பிடிப்புகள் வழமைபோல தொடங்கப்படுவது ஒன்றுதான் உண்மையான கொண்டாட்டம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
“திரையுலகம் மீண்டும் புத்துணர்ச்சியோடு உயிர்த்தெழுந்து சகஜ நிலைக்குத் திரும்பும் நாள்தான் திரையுலகினர் அனைவருக்கும் உண்மையான கொண்டாட்டம் ஆகும்” என்கிறார் ஆர்.கே .சுரேஷ்.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என்று பல்வேறு தளங்களில் தன் பயணத்தைத் தொடங்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் ஆர்.கே. சுரேஷ், இயக்குநர் பாலாவால் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அழுத்தமான பாத்திரம் மூலம் பட்டைதீட்டப்பட்டவர்.முத்திரை பதித்த அந்தப் பாத்திரத்தின் மூலம் அதிர்ந்து கவனிக்க வைத்தவர். அவர் மீண்டும் பாலாவின் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்தப் படம் தன் ஓடுதளத்தில் புதிய ஓர்  இலக்காக இருக்கும் என்று கருதுகிறார்.அதுமட்டுமல்லாமல் :வேட்டை நாய்’ என்கிற படத்தில் பிரதான நாயகன் வேடம் ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார். ‘அமீரா ‘படப்பிடிப்பு முடிவடைய உள்ளஇன்னொரு படம்.தமிழ், மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கு . கன்னடம் என்றும் கால் பதிக்கிறார் புதிதாக நான்கு புதிய படங்களில் வித்தியாசமான வேடங்கள் சுமக்கிறார்.
அண்மைக் காலத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் ஒரு வேடம் ஏற்று நடித்திருந்தார். குறிப்பாக சமுத்திரக்கனியுடன் ஆர்.கே. சுரேஷ் பிளாஷ்பேக் காட்சியில் தோன்றும் வரும் ‘ஜிகிரி தோஸ்து’  பாடல் காட்சியில் நடித்தது தனக்குப் பரவலான பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது என்று  மகிழ்ச்சி அடைகிறார்.செல்கிற இடங்களில் சந்திக்கிற மனிதர்களில் இது பற்றி பேச்சு ,விசாரிப்புகள் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.
“லாக்டவுன் ஆகியுள்ள பொது முடக்கம் காலத்தில் இவ்வாண்டு என் பிறந்தநாள் வருவது சற்று வருத்தமான விஷயம்தான். நண்பர்களை, நலம் விரும்பிகளை ,ரசிக்கும் மனம் கொண்ட இளைஞர்களையெல்லாம் சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.கொண்டாட்ட மனநிலையில் நான் இப்போது இல்லை. மீண்டும் சகஜ நிலை திரும்புவது ஒன்றுதான் அனைவருக்குமான கொண்டாட்டமாக இருக்கும்” என்று கூறுகிறார்.