ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்குள்ள மக்களைப் பணயக் கைதியாக்கி சிறையில் இருக்கும் தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியை விடுவிக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள். அங்கே தனி ஒருவனாகப் புகுந்த விஜய் எப்படி அவர்களுக்கு போக்குக் காட்டி அவர்களைத் தனது புத்தி சாதுரியத்தால் தோற்கடித்து மக்களை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.
இது முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களை முன்னிட்டே உருவாகியிருக்கும் படம். மற்றவர்களைப் பற்றி எந்தவித கவலையும் இன்றி அவரது ரசிகர்களுக்காகவே இயக்குநர் நெல்சன் உருவாக்கி இருப்பதால் ஏகப்பட்ட காதில் பூ சுற்றும் வேலைகளைச் செய்திருக்கிறார்.எனவே பல இடங்களில் விஜய் ரசிகர்கள் இது எங்க ஏரியா உள்ள வராதீங்க என்று மற்ற ரசிகர்களைப் பார்த்து சொல்லுவது போல் நினைக்கத் தோன்றுகிறது.

வீர ராகவனாக தனது வழக்கமான நடிப்பு, வசன உச்சரிப்பு, நடனம், ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார் விஜய். ஆனால் ஒரு கை ஓசை போதுமா?படம் முழுக்க வியாபித்திருக்கும் விஜய்யின் ஹீரோயிசம் அவரது ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும். ஆனால் அதற்குச் சமமான வில்லன் இருந்திருந்தால் மேலும் விறுவிறுப்பு தூக்கலாக இருந்திருக்கும்.
படத்தில் வரும் பல காட்சிகள் பழைய விஜயகாந்த், அர்ஜுன் படத்தில் வரும் கடத்தல், தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளாகவே பழைய உணர்வைத் தருகின்றன.
படத்தில் பாடல்கள் அதிகம் இல்லாததும் ஒரே மாலுக்குள் கதை முடங்கிப் போவதும் பலவீனம்.வீடிவி கணேஷ் அடிக்கும் அசட்டுத் தனமான லூட்டிகளில் அப்படியே டாக்டர் படத்தின் சாயல். இவை அலுப்பூட்டுகின்றன.
நாயகி பூஜா ஹெக்டே கறிவேப்பிலை ரகம்., VTV கணேஷ், செல்வராகவன் தங்களின் பங்கை முடிந்தவரை செய்துள்ளனர்.யோகி பாபு, கிங்ஸ்லிக்கு அதிகமான காட்சிகள் இல்லை, பிறத கதாபாத்திரங்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. படத்தில் தீவரவாதிகளை அப்பாவியாகக் காண்பித்துள்ளார்கள், இதனால் விஜய் போடும் திட்டங்களைப் பார்க்கும் நமக்கு படத்தின் மீதான விறுவிறுப்பு இல்லை.
இது விஜய் ரசிகர்களுக்கான படம்.நடிகரின் ரசிகர்களை மட்டும் திருப்தி படுத்தினால் போதும் என்று இவ்வளவு வலுவில்லாத கதையை எடுத்துக்கொண்டு நம்ப முடியாத காட்சிகளை வைத்துப் படமெடுத்து மிகவும் சமரசப் பட்டுள்ளார் நெல்சன்.விஜய் தனது வியாபார எல்லையின் அகலத்தை உணர்ந்து நல்ல, புதிய, வித்தியாசமான அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்.
மொத்தத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் படத்துக்கு முன் ஏற்படுத்திய பெரிய அளவிலான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்று தான் கூறவேண்டும்.