அந்த வீட்டில் நான்கு பேய்கள் இருக்கின்றன. பேய் இருக்கும் இடத்தில் ஆள் இருக்க முடியுமா என்று வாங்க வந்தவர்கள்எல்லாம் பின்வாங்க..அந்த வீட்டில் நால்வரைத் தங்க வைக்க ஏற்பாடாகிறது. அந்த நால்வர் முனிஷ்காந்த், காளிவெங்கட், சத்யன், டி.எஸ்.கே. இவர்களைப் பேய்கள் என்ன செய்தது? பேய்களை இவர்கள் என்ன செய்தார்கள் என்பது தான் கதை.
எங்கள் வீடு எங்கள் உரிமை என்று கூறும் ஒரு அட்டகாசமான பேய்ப்படம்தான் பெட்ரோமாக்ஸ். இடைவேளை வரை பொறுமை காத்தால் பின்பாதியில் ஓர் இமாலய சிரிப்பு அனுபவம் கிட்டும் என்பதற்கு நாங்கள் உறுதி கூறுவோம்.
பேயாக நடித்துள்ள தமன்னா அந்தக்குட்டிப் பெண் மற்றுமுள்ள இரண்டு கேரக்டர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இவர்களுக்கான பின்கதையும் அந்த வீட்டை அவர்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்காத காரணமும் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.
முனிஷ்காந்த் அண்ட் கோ நால்வரும் வீட்டிற்குள் சென்று செட்டில் ஆகும் போது தியேட்டரில் கேட்கும் சிரிப்புச் சத்தம் படம் முடிந்த பிறகும் கேட்கிறது.
முதல் பாதியில் மிதமாகக் கதை சென்றாலும் நேர்த்தியான காட்சிகளால் இது பேய் படம் என்று நம்ப வைத்து இரண்டாவது பாதியில் சிரிக்க வைக்கும் மாதிரி கதையாகத் தடம் புரண்டதால் சீரியஸ்னஸ் குறைந்து சிரிப்பு அதிகமாகியுள்ளது.காட்சிகளை அவசர அவசரமாக காட்டுகிறார்கள்.ஆனாலும் இரண்டாம் பாதியில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள் நிச்சயமாக.இந்த சிரிப்புதான் இந்தப் பெட்ரோமாக்ஸ் லைட்டின் பிரகாச வெளிச்சம்.
முனிஷ்காந்த் பயத்தையும் சிரிப்பையும் ஒருசேர முகத்தில் கொண்டுவந்து நான்கடி பாய்கிறார் என்றால் தண்ணிப்போடும் முன்பு ஒருரகம் தண்ணிப்போட்ட பின் ஒருரகம் என நடிப்பை ரகரகமாக பிரித்தெடுத்து எட்டடி பாய்கிறார் காளிவெங்கட். காது கேட்காமலும் இரவில் மட்டும் கண் தெரியாமல் சத்யம் பண்ணும் அலம்பலும் வேறலெவல். மிக முக்கியமாய் பேய்களிடம் மிமிக்ரி செய்து அள்ளு கிளப்பும் டி.எஸ்.கே லொள்ளு சபாவை விட ஏராளமாக சிரிக்க வைக்கிறார்.
தமன்னாவின் நடிப்பு கச்சிதம். ஜிப்ரானின் பின்னணி இசை சிரிப்புக்கேத்த இனிப்பு. இயக்குநர் ரோகின் வெங்கடேசனுக்கு இந்தப் பெட்ரோமாக்ஸ் மூலம் ஒரு ஒளிவட்டம் கிடைக்கும். படம் பார்க்குற நமக்கு கொஞ்சம் பிபி சுகர்லாம் கன்ட்ரோல் ஆகும்.