‘பேய் மாமா’விமர்சனம்

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, கோவை சரளா, மாளவிகா மேனன், ‘மொட்டை’ ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘பேய் மாமா’.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் ‘பேய் மாமா’ எப்படி இருக்கிறது?

பட்டுமலை பங்களாவில் பேய்கள் இருப்பதால், அந்த பங்களாவை யாரும் வாங்க முன்வரவில்லை. அந்த பங்களாவில் இருக்கும் பேய்களை விரட்ட முயலும் வில்லன் குழுவிற்கும் யோகிபாபு குழுவிற்கும் இடையே நடக்கும் நகைச்சுவை கலந்த ஃபேண்டஸி ட்ரீட்தான் ‘பேய் மாமா’வின் திரைக்கதை.

வழக்கமான கதைதான், ஆனால் காலத்திற்கு ஏற்ப சில புதிய விஷயங்களை இதில் சேர்த்திருக்கிறார்கள். வைரஸை பரப்பும் வில்லன் குழு, அதற்கு மருந்து வைத்திருக்கும் பாரம்பரிய எம்.எஸ்.பாஸ்கர் குடும்பம் என ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் ஆறுதல். பணமதிப்பிழப்பு உள்ளிட்ட சில அரசியல் விஷயங்களும் உண்டு.

ஷக்தி சிதம்பரம் எப்போதும் நக்கல் நையாண்டிக்குப் பெயர் பெற்றவர்.ஒரு பேய்ப் படத்தில் சமகால அரசியல் எனப் பலவற்றையும் போட்டுக் கலக்கி , சிரிக்க வைப்பதற்காக படாத பாடு பட்டிருக்கிறார்.பல இடங்களில் பலனும் கிடைக்கிறது.
சிரிக்க வைக்கும் நோக்கில் எந்த லாஜிக்கும் பார்க்காமல் மன அழுத்தம் மறந்து சிரிக்கலாம்.


பல காட்சிகள் நாடகத்தனமாக இருந்தாலும் இப்படம் இந்த வகைதான் கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்ற வகையில் அந்தக் காட்சிகளில் சிரிக்க வைக்கிறது படம்.
யோகிபாபு தனது வழக்கமான செயற்கையான நகைச்சுவை பாணியைத் தவிர்த்துவிட்டு, கதாபாத்திரத்தின் போக்கில் இயல்பாக நடித்திருப்பது ஆறுதல்.

நித்யானந்தாவை இமிடேட் செய்வது, யூடியூபரை கலாய்ப்பது எனத் தொடங்கி ‘புன்னகை மன்னன்’ காட்சிகளை ரேகா – மொட்டை ராஜேந்திரனை வைத்து மீள் உருவாக்கம் செய்வது வரை எந்த லாஜிக்கும் பார்க்காமல் மன அழுத்தம் மறந்து சிரிக்கலாம்.

பாடல்கள், கிராஃபிக்ஸ் காட்சிகள், ஒளிப்பதிவு இவை எல்லாம் கதைக்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. இரண்டு மணி நேரத்தை குடும்பத்தோடு செலவு செய்ய நினைப்பவர்களுக்கு ‘பேய் மாமா’ நல்ல ஜாலி மாமாவாக இருப்பார்.