‘பொன்னியின் செல்வன்’ நினைவுகள்: மணிரத்னம்!

”பட சம்பந்த பட்டவர்கள்.. சம்பந்தபடாத திரை உலக பிரமாக்கள்.. தமிழ் சினிமா உலகம்.. உலக சினிமா ரசிகர்கள்.. கதை படித்தவர்கள்.. படிக்காதவர்கள்.. கதை படித்துக் கொண்டிருப்பவர்கள்.. விமர்சனம் எழுத நினைப்பவர்கள்.. முதல் ஷோவை பார்த்து எழுத துடிப்பவர்கள்..

எல்லோரும் மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்” பார்க்க ஆவலோடு இருப்பது ஒரு வரலாற்று நினைவு.. சந்தோசம்.

நமக்கே பார்க்க ஆவல் இருந்தால்.. கல்கியின் பொன்னியின் செல்வனை,
மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனாக உருவாக்கியவருக்கு தான் எத்தனை ஆவல் இருக்கும்.

வருகிற 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் வெளியாக இருக்கின்ற நிலையில் அந்த படம் உருவாக்கத்தில் தனக்கு நிகழ்ந்த அனுபவங்கள் சம்பவங்கள் மகிழ்ச்சிகள், நெகிழ்ச்சிகள் பற்றி இயக்குநர் மணிரத்னம் அவரின் உரையாடலில் இருந்து கூறுகிறார் இப்படி!

”கல்கியின் காவியத்தை கண் முன்னால் கொண்டு வருகிற சவால் அசைன்மென்ட்.

கதை, களம், வரலாறு, சமூகம், அரசியல் என கதை நடக்கும் காலக்கட்டத்திற்கே அழைத்துச் செல்ல வேண்டும்.

அதில் வருகிற காட்சிகள், பிரம்மாண்டம், அட்வென்சர் எல்லாம் ஸ்கூல் படிக்கும்போது பொன்னியின் செல்வனை படித்து எப்படி ரசித்தேனோ, உணர்ந்தேனோ, உள்வாங்கினேனோ அப்படியே கொண்டு வர முயற்சி செய்திருக்கேன்.

அழுக்கு, புழுதி, வேர்வை இருக்கும். அதெல்லாம் அவரோட ஸ்பெஷாலிட்டி. இந்த ஸ்டைலைத்தான் பொன்னியின் செல்வனில் கொண்டுவர பார்த்திருக்கோம்.

முந்தயகாலமாக இல்லாமல், வந்தியத்தேவன் இப்ப பக்கத்தில் இருந்தால் என்ன நடக்குமோ அதே தான் இதில் நடந்திருக்கு. படம் பிடிச்சது, கலர்ஸ் எல்லாம் நிகழ்காலம் மாதிரியே இருக்கும். பேசுகிற விதத்தில், எமோஷன் வெளிப்படுவதில், நடிகர்களின் நடிப்பில் எல்லாம் நாடகத் தன்மை குறைந்து ரியலிசம் அதிகம் வெளிப்பட்டிருக்கும்.

வந்தியதேவன் வழியாகத்தான் ஒவ்வொரு கேரக்டரையும் கல்கி அறிமுக படுத்துகிறார். அவர் மூலமாகத்தான் ஒவ்வொண்ணா தெரிஞ்சிக்கிறோம். சினிமாவில் அதுதான் அழகு. ஒரு கேரக்டர் வழியாக நாமும் வந்தியத்தேவனும் சேர்ந்து கத்துக்கிறோம். அது வெளியிலிருந்து கதை சொல்லாமல் உள்ளிருந்தே கதை சொல்கிற அமைப்பு. கிட்டத்தட்ட கல்கி போட்ட பாதையில் தான் போயிருக்கோம். அவர் தொட்டதையெல்லாம் நாங்களும் தொட ஆசைப்பட்டோம். இதை பத்து பாகமாகக்கூட வேண்டுமானால் பண்ணலாம். இதையே சினிமாவாக செய்யும்போது சில விதிகள் இருக்கு. இது ஒரு எக்னாமிக் மீடியா. அதனோட பலம் மினிமம் இடத்தில், மேக்சிமம் கொண்டு வரணும்.

நாவலில் சுந்தர சோழரின் மனநிலை, அந்த நாளில் எப்படி இருக்கார், அவர் யோசிச்சதையெல்லாம் சொல்லலாம். இதை படத்தில் வேறு விதத்தில் சொல்லணும். பாடி லாங்குவேஜ் வேணும். குறைந்த வார்த்தைகளில் சொல்லணும். அதுக்குள்ளேயே
சுந்தர சோழன் நம் கைக்குள்ளே வந்திடணும். சினிமாவில் அதன் சாராம்சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, அதை எந்த அளவுக்கு கோர்வையாக சொல்லணுமோ அப்படி சொல்லணும். நாவலில் ஒரு விஷயம் சொல்லிட்டு இருக்கும்போது, அங்கே வந்தியதேவனை விட்டுட்டு வந்துட்டேன்னு, கல்கி பின்னாடி போயிடுவார்.
அங்கே கதை சொல்லிட்டு அப்புறம் இங்கே வருவார். படிக்கிறவனையும் எப்பவும் கூட சேர்த்துக்கிட்டே போவார் கல்கி. திரும்ப கூட்டிட்டு வருவார். சினிமாவில் அப்படி செய்ய சுதந்திரம் கிடையாது. இறங்கி அப்படி செய்ய முடியாது. அதற்கு கூடுதலாக முயற்சி பண்ணி இயல்பாக செய்திருக்கேன்.”

டெக்னாலஜி நிறைய வளர்ந்திருப்பதால் இப்ப பெரிய சௌகரியம். நிஜத்திற்கு பக்கமாக நிறுத்திக் கொண்டு வந்திருக்கோம். செட் போட்டு எடுத்த மாதிரி தெரியக்கூடாது. செயற்கைத்தனம் வரக்கூடாது. முடிந்தவரை வானம், கீழே மண் தெரியணும். புழுதி பறக்கணும்..
ரவிவர்மனோடு சேர்ந்து அப்படிதான் எடுத்திருக்கோம்.

எல்லாம் பொருந்தினால் தான் நடிகர்கள் உள்ளே வர முடியும். உடல் அமைப்பும் பெர்சனாலிட்டியும் ஒண்ணு. அதை தாண்டி திறமை வேறொண்ணு. திறமை இருக்கு, பண்ணிட்டாங்க.

எனக்கு வாய்த்த நடிகர்கள் அருமையானவர்கள். யார் யார்னு சரியாக முடிவு பண்ணிட்டால் டைரக்டரோட பாதி வேலை சுலபமாகிடும். அப்படி யோசிச்சபோது அமைஞ்ச காம்பினேஷன் தான் இது. ஒவ்வொருத்தரும் இப்ப எப்படி இருக்காங்களோ.. அதைவிட பெரிய உயரங்களுக்குப் போக வேண்டிய தகுதியுடையவர்கள்.”

எனக்கு ஜெயமோகன் ஒரு கையிலும் கல்கி ஒரு கையிலும் இருந்தது பெரிய பலம். எழுதின விதம், வசனம் எல்லாம் பழைய தமிழில் இருக்கணும். நாடகம் மாதிரி தெரியக்கூடாது. அலங்கார தமிழும் வேண்டாம். மனோகரா மாதிரி போயிட முடியாது. அது அந்த காலத்திற்கு அருமையாக பொருந்தியது. அது தமிழ் பிரவாகமெடுத்த நேரம். இப்ப அது மாதிரி இருக்கக் கூடாது. ஜெயமோகன் எளிய, புரியக்கூடிய வடசொல் கலக்காமல் வசனம் எழுதினார். அது பேச சுலபமாக இருந்தது. குமரவேலுக்கு, கதையின் ஐந்து பாகத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும்.. .. எந்த பக்கத்தில் உள்ளதை கேட்டாலும் தெரியும். அவர் நாவலில் அத்துபடியாக இருந்தார். அவரோட உதவி முக்கியமானது.”

ரஹ்மான்,
அவர் தந்த இசை, குவாலிட்டி இதுவரை பார்த்த சரித்திர படங்களிலிருந்து வித்தியாசத்தை கொடுத்திருக்கு.

ரவிவர்மன் பிரமாதம். நாங்கள் எவ்வளவு உழைப்பை போட்டோமோ அதுக்கு மேலே அவர் போட்டாகணும். எப்பவும் ரெடியா இருப்பார். நிறைய நடிகர்கள்.
யாரையும் காக்க வைக்க முடியாது. நாங்கள் நிற்கும் போது அவர் ஓடணும். நாங்க ஓடும்போது அவர் பறக்கணும். அழகாகவும் எடுக்கணும். நிதானமாக ஆற அமர எடுக்க முடியாது. குறைந்த அவகாசத்தில் நிறைவு வேணும். நல்லா இருக்கணும். அப்படியே செய்தார் ரவி. அவரால்தான் அது முடியும்.

2022,செப் 30 உலகமெங்கும் வெளியீடு.