தங்களது பாணியில் இருந்து ஒவ்வொரு நடிகரும் வெளியே வர வேண்டிய காலகட்டம் ஒன்று உள்ளது. அப்படி பிரபுதேவா தன் பாணியிலிருந்து வெளியே வந்து நடித்துள்ள படம் தான் பொய்க்கால் குதிரை.
சரி படத்தின் கதை என்ன?
விபத்து ஒன்றில் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார் பிரபுதேவா. ஒரு கால் இழந்தாலும் தனது அன்பு மகளைக் காப்பாற்ற வேண்டும் என வாழ்ந்து வருகிறார்.ஒரு நாள் திடீரென மகளுக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பது தெரிகிறது. பல லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கின்றனர். பெரும் பணம் படைத்த வரலட்சுமி சரத்குமாரின் மகளைக் கடத்திப் பணம் கேட்கலாம் என்று திட்டமிடுகின்றனர்.ஆனால், வரலட்சுமியிடம் சிக்கிக் கொள்கிறார் பிரபுதேவா. அப்படி இருந்தும் அவரது குழந்தையை வேறு ஒருவர் கடத்த அந்த குழந்தையைப் பிரபுதேவா காப்பாற்றினாரா? இல்லையா? கடத்தியது யார் என்பது தான் பொய்க்கால் குதிரை படத்தின் கதை.
நடனப்புயல் பிரபுதேவா நடிக்கும் போது அவரை ஆட விட்டு நாலைந்து பாடல்களை வைத்து ஓட்டி விடலாம் என இயக்குநர் சந்தோஷ் நினைக்கவில்லை.
பிரபுதேவாவுக்கு ஒரு காலே இல்லை என திரைக்கதை எழுதியதும் பிரபுதேவா நடித்ததும் நல்லதொரு முயற்சி.. இது நிஜமாகவே பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
ஒரு கால் இல்லாதவராகவும், மகள் வாங்கிக் கொடுக்கும் செயற்கைக் காலுடன் பாடல் சண்டை என அசத்தி உள்ளார்.பிரபுதேவா தனது குழந்தையை கடத்த திட்டம் போடுவதை அறிந்து கொண்டு அவரது ஆட்களை வைத்துப் பிரபுதேவாவை மடக்கிப் பிடிக்கும் காட்சிகளில் வரலட்சுமி கா மிரட்டுகிறார்.
மற்றபடி கதையோடும் கதாபாத்திரத்துடனும் ஒன்றவில்லை.
சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து அசத்திய நடிகர் ஜான் கொக்கன் இந்த படத்தில் வரலட்சுமியின் கணவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆபாசப் படம் எடுத்த இயக்குநரிடமிருந்து பாசத்தைச் சொல்லும் ஒரு படம்.
பொய்க்கால் குதிரை டைட்டிலில் இருந்து மகளின் சந்தோஷத்துக்காக வீட்டையே நீச்சல் குளமாக மாற்றும் அப்பாவின் அன்பு என அப்பா – மகள் பாசத்தை ரசிக்கும்படியாக கொடுத்துள்ளார்.
கடைசி வரை யார் வில்லன் என்கிற புதிரைப் பராமரிக்கப் போராடியது போன்றவை படத்திற்குப் பலம் தான். பிரகாஷ் ராஜ், ரைசா வில்சன், ஜெகன் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதைச் சரியாக செய்துள்ளனர். ஒரு கால் இல்லாத நபர் எப்படிச் சண்டை போடுவார், சண்டை போட்டால் நம்பும்படியாக இருக்க வேண்டுமே என்பதைப் பார்த்து பார்த்து செய்து தினேஷ் காசி மாஸ்டர் பாராட்டுகளை அள்ளுகிறார்.
படத்தின் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் குறைகிறது.

திரைக்கதையில் சறுக்கும் இடங்களில் கூடுதல் கவனத்தைச் செலுத்தியிருந்தால் படம் அருமையான படமாக அமைந்திருக்கும்.
பொய்க்கால் குதிரை, பிரபுதேவாவின் புதிய முகம். ஒரு முறை பார்க்கலாம்.