நட்ராஜ் சுப்ரமணியன் ( தேவ் ) ருஹி சிங் ( ஜனனி ) , மனிஷா ஸ்ரீ ( பிரியா ) அதுல் குல்கர்னி ( சுபாஷ் ), முண்டாசு பட்டி ராம்தாஸ் ( மணி ) , அர்ஜுன் ( பாஸ்கர் ) வில்லன் ஷரத் லோகித்தஷ்வா ( பாண்டியன் ), ராஜன் ( பாபு ) , பாவா லட்சுமணன், மயில்சாமி சாம்ஸ் நடித்துள்ள படம்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் தாஜ்.
ஆர்.டி.இன்பிடினிட்டி டீல் எண்டர்டைன்மெண்ட் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
கார்திருட்டு செய்யும் கும்பல் தொடர்பான கதைதான் படம்.
சொகுசு கார் நிறுவனத்தில் பணிபுரியும் நட்டியும் அவர்களது நண்பர்களும், அமைச்சர் ஒருவருக்காக கார் ஒன்றை டெலிவரி செய்ய செல்லும் வழியில், சில மர்ம நபர்கள் அந்த காரைத் திருடிக்கொண்டு ஓடி விடுகிறார்கள். தவறே செய்யாத நட்டியையும் அவரது நண்பர்களையும் திருட்டுப் பட்டம் கட்டி சிறைக்கு அனுப்பும் நிறுவனம், அவர்கள் வேறு எங்கும் வேலை செய்யாதபடி செய்துவிடுகிறது. அவமானப்பட்டு துன்பப்பட்டு சிறையில் இருந்து வெளியே வரும் நட்டியும் குழுவும்.இனி நேர்மை எடுபடாது இனி போங்காட்டம் தான் என்று இறங்குகிறார்கள்.
விலை உயர்ந்த கார்களைத் திருடும் வேலையில் இறங்குகிறார்கள். கார் திருடும் ஒரு பெரிய தாதாவிடமிருந்து மதுரையில் உள்ள பெரும்புள்ளியான ஷரத் லோகித்தஷ்வாவிடம் இருக்கும் பத்து விலை உயர்ந்த கார்களை திருட வேண்டிய அசைன்மெண்ட் அவர்களுக்குக் கிடைக்கிறது. இதையடுத்து, மதுரைக்குச் சென்று கார்களைத் திருடத் திட்டம் போடும் நட்டிக்கு பெரிய அதிர்ச்சி.
காரணம், நட்டியை திருடனாக்கிய, அந்த சொகுசு கார் திருட்டுக்கும், ஷரத் லோகித்தஷ்வாவுக்கும் தொடர்பு இருப்பதை தெரிந்து கொள்கிறார். பிறகு என்ன? தன்னைத் திருடனாக்கிய வில்லனைப் பழிவாங்குவதுடன், அவர் ஏன் அந்தக் காரைத் திருடினார் என்ற காரணத்தையும் தெரிந்து கொள்பவர், அவருக்குத் தண்ணி காட்டுகிறார்,. அவரிடம் ருக்கும் 10 கார்களுடன், தான் தொலைத்த காரையும் மீட்கப் போராடுகிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.
‘சதுரங்க வேட்டை’ படத்திற்குப் பிறகு, கோடம்பாக்கம் கவனிக்கும் நாயகனான நட்டி, தனக்கான கதைத் தேர்வில் கவனமாக இருக்கிறார் என்பதை இப்படம் உணர்த்துகிறது. ஏனென்றால் அவருக்கான அளவான பொருத்தமான பாத்திரம்.இவரை விட்டால் இக்கதைக்கு வேறு நடிகர் பொருத்தம் இல்லை எனும்படியான அப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப்போகிறவர், நடிப்பாகட்டும், வசன உச்சரிப்பாகட்டும், காரைப் போலவே, சர சரவென்று பறக்கிறார். நட்டியின் வியாபார சந்தையில் அவருக்கு மேலும் சில படிகள் உயர இப்படம் வாய்ப்பளிக்கும்.
நாயகியாக மட்டும் இன்றி குணச்சித்திர நடிகையாகவும் வலம் வருகிறார் ருஹி சிங். அர்ஜூன், ராஜன் ஆகியோரது பணி படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்திருப்பதை போல, மணியாக வரும் ராமதாஸின் அப்பாவித்தனமான நடிப்பு படத்துக்குக் கலகல பலமே.
ஷரத் லோகித்தஷ்வாவின் மிரட்டலான நடிப்பும், நட்டியின் பரபரப்பான நடிப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதே சமயம் அதுல் குல்கர்னிக்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும், அவரது மிடுக்கும் நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கும்.
அட .. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் கூட அடடா சொல்லவைக்கிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் திரைக்கதையின் வேகத்திற்கு ஈடுகொடுத்துள்ளது.
சாதாரண கதையாக இருந்தாலும் இயக்குநர் தாஜின் திரைக்கதை புத்திசாலித்தனமாக போரடிக்காமல் உள்ளது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும், படம் முழுவதுமே பரபரப்பு மூடு இருப்பது போலவே திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது சபாஷ் போட வைக்கிறது.
இந்த ‘போங்கு’ நிச்சயமாகப் போரடிக்காத நல்ல பொழுதுபோக்குப் படம்தான்.