‘போட்’ திரைப்பட விமர்சனம்

யோகி பாபு ,கௌரி ஜி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் ,மதுமிதா, ஷாரா ,ஜெசி, குள்ள புல்லி லீலா, அக்ஷத் நடித்துள்ளனர்.

சிம்பு தேவன் இயக்கியுள்ளார். இசை ஜிப்ரான், ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம் ,மாலி மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளன.

எப்போதும் சிம்பு தேவன் இயக்கும் படங்களில் எளிதான அரசியல் பகடியும் நாட்டு நடப்பு எள்ளலும் இருக்கும்.இப்படத்தில் பூர்வகுடிகளின் உரிமை பற்றியும் வியாபார வர்க்கத்தின் அரசியல் பற்றியும் கதையை நடுக்கடலில் வைத்துப் பேசியிருக்கிறார்.

படத்தின் கதை இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் நடக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் குண்டு வீச்சுத் தாக்குதல் நடக்கிறது. அப்படித் தாக்குதல் செய்பவர்கள் சென்னையிலும் குண்டு வீசத் திட்டமிடுகின்றனர்.இந்தச் செய்தி மக்களிடையே பரவுகிறது .அவர்கள் சென்னையை விட்டுத் தப்பித்து வெளியேற நினைக்கிறார்கள். மீனவர்கள் பலர் தங்களது படகுகள் மூலம் நடுக்கடலுக்குச் சென்று தப்பித்துக்கொள்ள முயல்கிறார்கள்.

யோகிபாபு காசிமேடு பகுதி மீனவர். அவர் தனது பாட்டியுடன் தனது படகில் நடுக்கடலுக்குச் செல்ல முயற்சிக்கிறார். அவருடன் வெவ்வேறு மொழி பேசும் இந்தியர்களும் படகில் பயணம் செய்கிறார்கள். நடுக்கடலில் படகு பழுதடைகிறது,நடுக்கடலில் நிற்கிறது ,பயணம் தடைப் படுகிறது.படகை கரைக்குக் கொண்டு போக வேண்டும் என்றால், படகில் இருப்பவர்களில் மூன்று பேர் வெளியேற வேண்டும், இதைப் படகின் உரிமையாளர் யோகி பாபு சொல்கிறார். நடுக்கடலில் இருக்கும் படகில் இருந்து எப்படி வெளியேற முடியும்?சென்றவர்கள் யோசிக்கிறார்கள். அப்போது இன்னொரு அபாயம் அவர்களைச் சூழ்கிறது.அவர்களால் கரை சேர முடிந்ததா ?அந்த மூன்று பேரை இறக்கி விட்டார்களா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.

படத்திற்காகப் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் மூலம் நாட்டு நடப்பையும் சூழ்நிலையையும் கடத்த நினைத்துள்ளார் இயக்குநர்.அந்த வகையில் ஆங்கிலேயே காவல்துறை அதிகாரி ,வெவ்வேறு மொழி பேசும் இந்தியர்கள் ஆகியோர் இடையே நடைபெறும் விவாதங்கள் கவனிக்க வைக்கின்றன.வசனங்கள் மூலம் இந்திய சுதந்திரப் போரில் தமிழகத்தின் பங்கு, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை, ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி, சமூக ஏற்றத்தாழ்வு, பூர்வக் குடிகளுக்கு நேரும் அவலம்
உள்ளிட்ட அனைத்து அரசியல்களையும் அலசும் இயக்குநர் சிம்புதேவன், குறிப்பாக சென்னையின் பூர்வகுடிகளின் வறுமை நிலை மற்றும் அவர்கள் சென்னையை விட்டுப் படிபடியாக வெளியேற்றப்படுதல் பற்றி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

கதையின் நாயகனாக காசிமேடு பகுதி மீனவராக நடித்திருக்கிறார் யோகி பாபு.அவர் தனது கேலி கிண்டல் நகைச்சுவையை விட்டு, இயக்குநர் சிம்புதேவன் சொல்படி நடித்திருக்கிறார். இது கதைக்குப் பலமாகவும், ரசிகர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது.யோகி பாபுவுடன் படகில் பயணம் செய்யும் குல்லபுலி லீலா, கெளரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாரா, ஜெஸ்ஸி, அக்‌ஷத் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்குக் கன பொருத்தம்.

கதை ஒரு கட்டத்தில் படகில் மையம் கொள்வதால்,படகில் அமர்ந்தபடி நடித்திருந்தாலும் வசனங்களுக்கு ஏற்ப உடல்மொழியை வெளிப்படுத்தி அந்தந்த கதபாத்திரங்களாகவே பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா படகைச் சுற்றி வலம் வந்தாலும், கடலின் வெவ்வேறு நிறங்களையும், அதன் விரிவான பிரமாண்டத்தையும் திரையில் கொண்டு வர அதிகம் உழைத்திருக்கிறார்.

படம் முழுவதும் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருந்தாலும், தனது இசை மூலம் கதை சொல்ல முயன்றுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான் . பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்.

தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பும், டி.சந்தானத்தின் கலை இயக்கமும் படத்தை தாங்கிப் பிடித்திருக்கின்றன.

சில காட்சிகள் திணிக்கப்பட்டது போல் தோன்றினாலும் சிம்புதேவன் பேச முயற்சித்திருக்கும் அரசியலும் அதைச் சார்ந்த வசனங்களும் கைதட்டல் பெறும் ரகத்திலானவை. கதபாத்திரங்கள் இடையே நிகழும் உரையாடல்கள் கவனம் ஈர்க்கும் அளவுக்கு படகுப் பயணம் கவனம் பெற முடியவில்லை. நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் படம் பயணிப்பதால், திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டு விடுகிறது.

மொத்தத்தில், இந்த ‘போட் மிதவேகம்.