வலுவான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அறம்’ படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும்.
இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ், பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் தமிழகமெங்கும் பல திரையரங்கங்களில் எழுப்பப்படவுள்ளன.
” ‘அறம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. நயன்தாராவின் பெரிய மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான விளம்பர யுக்திகளை கையாள்வதே சரி” என்கிறார் ‘KJR ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் J கொட்டப்படி. தென்னிந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் இது ஒரு மிக முக்கிய படமாக கருதப்படுகிறது. KJR ஸ்டுடியோஸும் ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்களும் இணைந்து இப்படத்திற்கான மேலும் பல பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை திட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தைய வெற்றி படங்களில் பல படங்களை வெளியிட்டது ‘Trident Arts’ ரவீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில்,ஆண்டனியின் படத்தொகுப்பில், ஜிப்ரானின் இசையில் ‘அறம்’ உருவாகியுள்ளது.
முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
”டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கோபி. நடிகர் நாகேஷ் கூட முதல் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் தான் நடித்தார், நீங்க நல்ல வருவீங்க என்று சொன்னார் இயக்குநர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெரிய ரசிகன், அவருடன் நடித்தது என் பாக்கியம் ” என்றார் நடிகர் பழனி பட்டாளம்.
”இந்த காலகட்டத்துக்கு தேவையான மிகவும் முக்கியமான படம். படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை இந்த அறம் கனக்க செய்யும் படம். படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் சாட்டையடியாக இருக்கும். கோபி பெரிய புரட்சிகர இயக்குநராக வருவார்” என்றார் நடிகர் ஈ ராம்தாஸ்.
”ராஜா ராணி படத்தின் நயன்தாராவுடன் நடித்ததன் மூலம் நிறைய இளைஞர்களிடத்திலும் போய் சேர்ந்திருக்கிறேன். அவருடன் இரண்டாவது முறையாக சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. கடும் வெயிலில் ஒரு பெருங்கூட்டம் மிகவும் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கியிருக்கிறது ” என்றார் நடிகர் பாண்டியன்.
” இந்த படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த துயரத்தின் போது எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது பத்திரிக்கையாளர்கள் தான். அதன் மூலம் தான் இந்த மிகப்பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது என்பது தான் உண்மை. இயக்குநர் சற்குணம் தான் தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பின் நயன்தாராவுக்கு கதை சொல்ல வைத்தார்கள், சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது.
கதை ஓகே ஆனபிறகு கூட இந்த படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள். ஆனாலும் நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து இந்த படத்தை முடிக்க துணை நின்றார். இந்த படத்தில் என்னை போலவே எல்லோருக்கும் சமூக அக்கறை இருந்தது, அதனால் தான் எல்லோரும் இந்த படத்துக்குள் வந்தார்கள். முதலில் பாடல்கள் வேண்டாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். பின்னர் படத்தை முடித்த பிறகு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு போட்டுக் காட்டி, உமாதேவியின் வரிகளில் பாடல்களை சேர்த்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசிய நயன்தாரா, நிச்சயம் படம் வெற்றி பெறும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும் வரை நான் உடன் இருப்பேன் என்றார். எங்களை போன்ற கலைஞர்களை பத்திரிக்கையாளர்கள் நீங்கள் தான் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் .
நம்நாட்டில் .கலைஞர்களை பத்திரிக்கையாளர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.” என்றார் இயக்குநர் கோபி நயினார்.
இந்த சந்திப்பில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், சௌந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.