‘ப்ரீடம்’ திரைப்பட விமர்சனம்

சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் ,மு.இராமசாமி, ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட், ஆண்டனி, மணிகண்டன் ,மாளவிகா அவினாஷ், ரீல்ஸ் அம்ருதா, சரண்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர்.
இயக்கம் சி. உதயகுமார்,இசை ஜிப்ரான், எடிட்டிங் என். பி .ஸ்ரீகாந்த், பாடல்கள் சினேகன், அருண் பாரதி, மோகன் ராஜன், இயக்கம் சத்திய சிவா, தயாரிப்பு விஜய கணபதி பிக்சர்ஸ் பாண்டியன் பரசுராமன், இணைத் தயாரிப்பு சுஜாதா பாண்டியன்.

வேலூர் சிறையில் இருந்து இலங்கை அகதிகள் 1995 இல் சுரங்கம் தோண்டி தப்பித்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரத்துக்குக் கூட்டம் கூட்டமாக வந்து சேர்கிறார்கள்.அவர்கள் பல்வேறு அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்படுகின்றனர் .அந்தக் காலத்தில் ராஜீவ் கொலைச் சம்பவம் நடக்கிறது.போலீசார் இலங்கைத் தமிழர்கள் பலரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அதில் ஒருவர் தான் சசிகுமார். தங்கள் பக்கம் எந்த குற்றச் செயலும் நடைபெறவில்லை என்று அவர்கள் எவ்வளவோ எடுத்து மன்றாடியும் ஒன்றும் நடக்கவில்லை. அன்றாடம் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள்.எனவே வெறுத்துப் போன அவர்கள் ஒரு கட்டத்தில் சிறையில் இருந்து தப்பிக்க எண்ணுகிறார்கள். படிப்படியாகத் தோண்டி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சுரங்கம் தோண்டி 1995 ஆகஸ்ட் 14ஆம் நாள் அவர்கள் தப்பிக்கிறார்கள் .அவர்களில் ஒரு பகுதியினர் வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்கிறார்கள் .மற்றவர்கள் என்ன ஆகிறார்கள்?சுரங்கத்தை எப்படித் தோண்டினார்கள் என்பதே ‘ப்ரீடம் ‘படக்கதை.

அகதிகளாக வரும் தமிழர்கள் அகதிகள் முகாம்களில் எவ்வளவு அல்லல்படுகிறார்கள் என்பதைக் காட்சிகள் காட்டுகின்றன.சில நேரம் அகதிகள் முகாம் என்பது வதை முகமாக மாறிவிடும் கொடுமை நடக்கிறது.முகாமே ஒரு கொட்டடி போல் இருக்கும் போது அவர்களை மேலும் கொடுஞ் சிறையில் தள்ளி வதை செய்தால் என்ன செய்வார்கள்? எனவே தான் விடுதலைக் காற்றைச் சுவாசிக்க அவர்கள் குறுக்கு வழியைத் தேடுகிறார்கள்.இதில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார் .அவரது தோற்றம் உடல் மொழி இலங்கைத் தமிழ்ப் பேச்சு அனைத்தும் அவரை ஓர இலங்கைத் தமிழராக நம்ப வைக்கிறது. நடிகர் சசிகுமார் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களின் மூலம் ஓசைப்படாமல் தனது வெற்றி இருப்பைத் திரையுலகில் அழுத்தமாக பதிவு செய்து கொண்டு வருகிறார்.அந்த மாறன் பாத்திரத்தில் அலட்டிக் கொள்ளாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து அனுதாபங்களையும் கண்ணீரோடு கைதட்டல்களையும் அள்ளுகிறார்.

லிஜோமோல் ஜோஸ்   எப்போதுமே உயிர்ப்புள்ள கதாபாத்திரங்களை ஏற்பவர்.இதில் அவர் செல்வி என்கிற பாத்திரத்தில் அச்சு அசலான இலங்கைத் தமிழச்சியாக வருகிறார்.சிறையில் வாடும் தனது கணவரைச் சந்திப்பதற்காக மனு போட்டு மனு போட்டுக் காத்திருந்து பல தடைகளால் சந்திக்க முடியாமல் மனம் நொந்து போகிறார்.அகதிகளுக்காக பரிந்து சேவைகள் செய்யும் வழக்கறிஞராக மாளவிகா அவினாஷ் வருகிறார். அவர் கம்பீர தோற்றத்திற்குப் பின்னால் கனிவுள்ள இதயமாக வருகிறார்.

மோசமான காவல் அதிகாரியாக வரும் சுதேவ் நாயர் சரியான தேர்வு.அவர் சுதேவ் நாயராகவே வருகிறார்.இரக்கம் என்பதே அறியாத இதயத்துடன் இருக்கிறார்.காவல்துறை அதிகாரியாக போஸ்ட் வெங்கட், ஈழத்து பெரியவராக பேராசிரியர் மு. இராமசாமி என்று பிற பாத்திரங்களில் வருபவர்களும் மனதில் பதிகிறார்கள்.

சிறையில் சுரங்கம் அமைத்துத் தப்பிக்கும் காட்சிகள் சுரங்கம் தோண்டியதில் இருந்தே அனைவரையும் இருக்கை நுனிக்குக் கொண்டு செல்கின்றன.சிறையில் இருந்து தப்பித்து விடுதலையை எதிர்பார்த்து எலி வலையைப் போல் சுரங்கம் தோண்டும் பணியில் அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் பேரவலங்கள். அவர்களது நகர்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிமிடமும் பார்வையாளர்களைப் பதற வைக்கின்றன.அவர்கள் தப்பித்துச் செல்ல வேண்டும் , விடுதலை காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்று படம் பார்ப்பவர்களின் மனம் விரும்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.சிறையில் இருந்து தப்பிக்க அவர்கள் செய்யும் முயற்சிகளும் ஒவ்வொரு அசைவும் பதற்றமும் சுவாரசியமும் கலந்து படத்தை நகர்த்துகின்றன.

அகதிகளின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் காட்சிகளை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சத்திய சிவா.அதற்கேற்ற ஒளிப்பதிவு ஜிப்ரானின் இசை என்று அவருக்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.விடுதலைக் காற்றைச் சுவாசிக்க விரும்பும் மனிதர்களின் உணர்வுகளைப் பேசுகிற படம் தான் இந்தப் ‘ப்ரீடம்’.

உணர்ச்சிகரமான காட்சிகளும் உணர்வுபூர்வமான தருணங்களும் நிறைந்த படமாக ‘ப்ரீடம் ‘உருவாகி  இருக்கிறது.