லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் .கணேஷ் மூர்த்தி, ஜி.சவுந்தர்யா ஆகியோர் தயாரித்து, நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் வழங்கியிருக்கும் படம், ப்ளூ ஸ்டார்.
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, பகவதி பெருமாள், குமாரவேல், லிசி ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழ்பிரபா, திரைக்கதை, வசனம் எழுதியிருக்க, எஸ். ஜெயக்குமார் கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
இது தொண்ணூறுகளில் நடக்கும் கதை. அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமம், பெரும்பச்சை. இங்கே, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே சாதீய படிநிலை விலகல்கள் உண்டு.அது அவ்வப்போது ஏதாவது பிரச்சினையில் தலை தூக்கி வெடிப்பதுண்டு.
ஊர்ப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களில், சாந்தனு தலைமையில் ஒரு தரப்பு, காலனிப் பகுதி இளைஞர்களில், அசோக் செல்வன் தலைமையில் ஒரு தரப்பும் தனித்தனியாக அந்த ஊரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.யார் முதலில் மைதானத்தை பிடிப்பது யார் முதலில் விளையாடுவது என்று அவ்வப்போது அவர்களுக்குள் சீண்டல் சீறல் மோதல் ஏற்படும்.அது பெரிதாகிறது.இது ஒரு புறம் இருக்க கிரிக்கெட் போட்டிகளின்
அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலையில் அங்கே உயர் ஜாதியினர் இவர்கள் இருவரையுமே புறக்கணிக்கிறார்கள்; அவமானப்படுத்துகிறார்கள்;இவர்கள் திறமையைத் தகுதி என்ற பெயரில் ஒடுக்குகிறார்கள்.பெரிய போட்டிகளில் நுழைய விடாமல் புறந்தள்ளுகிறார்கள்.தங்கள் ஊர் விளையாட்டில் பெயர் பெற வேண்டும் என்றால் தங்கள் பகையை மறந்து கைகோர்க்க வேண்டும் என்ற சூழலை அவர்களுக்குக் காலம் வழங்குகிறது. அவர்கள் என்ன முடிவெடுத்தார்கள்? அதன் விளைவு என்ன என்பதுதான் , ப்ளூ ஸ்டார் படத்தின் கதை.
படத்தின் பிரதான நாயகர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன்,சாந்தனு இருவரும் கதாபாத்திரத்தினை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். ரஞ்சித்தாக வரும் அசோக் செல்வனும், ராஜேஷ் ஆக வரும் சாந்தனுவும் உரிய பாத்திரச் சித்தரிப்பில் ஒளிர்கிறார்கள்.
அசோக் செல்வன், காதலி கீர்த்தி பாண்டியனிடம் கனியும் போதும் சாந்தனுவிடம் ஆவேசமாக மோதும் காட்சிகளிலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.சாந்தனு மேட்டிமை குணத்தோடு ஆரம்பத்தில் இருந்தாலும் பிறகு நட்புக்காக அதை தள்ளி வைப்பதும் சிறந்த கிரிக்கெட் வீரராக ஜொலிப்பதும் எனத் தன் பங்கைச் சிறப்பாக செய்துள்ளார்.
போட்டிக்குச் செல்லும்போது எதிரெதிராக இருந்தாலும் கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்துக்கு செல்லும் வாய்ப்புகளுக்கு தடைகள் வரும் போதும் அவமானத்தைச் சந்திக்கும் போதும் அவர்கள் இருவரும் ஒன்று சேருகிற தருணம் உணர்ச்சிகரமானது.
அசோக் செல்வனின் காதலியாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன் நெஞ்சில் துணிவுடன் ஒரு கிரிக்கெட் ரசிகையாக வருகிறார்.எதையும் தடாலடியாக போட்டு உடைக்கும் அவரது பாத்திரத்தில் உரிய நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அசோக் செல்வனின் தம்பியாக நடித்திருக்கும் பிருத்வி ஏற்றுள்ள பாத்திரம் சற்று எதிர்மறை நிழல் படிந்தது போல் தெரிந்தாலும் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவரது காதலி திவ்யா துரைசாமியும் துடுக்கான பாத்திரத்தில் வந்து கை தட்டல்களைப் பெற்றுவிடுகிறார்.
ஒரு பயிற்சியாளரைப் போல கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கும் ‘பக்ஸ்’ பகவதி பெருமாள் பாத்திரத்திலும் ஜீவன் உள்ளது.
அசோக் செல்வனின் தந்தையாக வரும் குமரவேல் எதையும் பக்குவமாக அணுகுபவர், தாயாக வரும் லிசி ஆண்டனி பதற்றத்துடன் பார்ப்பவர். இப்படி அந்த இருவர் ஏற்றுள்ள பாத்திரங்களும் இரு வேறு முரண்பாடு கொண்டவை என்றாலும் மனதில் பதிபவை.
அரக்கோணம் பகுதி தான் கதை மையம் என்பது நன்றாகவே பதிந்து விடுகிறது .படத்தில் அடிக்கடி ரயில் செல்லும் காட்சிகள் வருகின்றன. ரயில் ஆற்றலின் வேகத்தின் குறியீடாகக் காட்டப்பட்டாலும் அதையே பலமுறை காட்டுவது சலிப்பூட்டுகிறது. நம்மை மைதானத்தில் அமர வைத்து கிரிக்கெட்டை ரசிக்க இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர், தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளன.செயற்கையான ஒளி ஒப்பனை இல்லாத தமிழ் ஏ அழகனின் ஒளிப்பதிவும் ,வழக்கமான வாத்தியங்கள் தவிர்த்த கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் படத்திற்கு ஒரு புதிய நிறத்தை அளிக்கின்றன.ஆங்காங்கே அர்த்தமுள்ள வசனங்களும் உண்டு.
எந்தவிதமான பகைமை உணர்ச்சிகளுக்கும் இடையே ஆணவம் கரைந்து நட்பும் மன இணக்கமும் வருவதற்குத் தேவை ஒரு நூலிழை அளவு நெருங்கி வருவது தான்.ஆனால் அப்படி நெருங்கி வருவதை இருபுறமும் உள்ள தீய சக்திகள் தடுத்துவிடும். அவற்றை மீறி நெருங்குவது தான் பெரிய வெற்றியாகும்.
அந்த விலக்கத்தை விலகினால் எல்லாரும் ஒன்றாகி விடலாம் என்ற கருத்தை கிரிக்கெட் பின்னணியில் கூறியுள்ளார்கள். அந்த நோக்கத்திற்காக இந்தப் படத்தை வரவேற்கலாம்.