’மகா அவதார் நரசிம்மா’ திரைப்பட விமர்சனம்

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வழங்கும் க்ளீம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக இந்த ‘மகா அவதார் நரசிம்மா’ அனிமேஷன் திரைப்படம் உருவாகியுள்ளது.

தொழில்நுட்பக் குழுவினராக கலை கருத்துருவாக்கம் :க்ளீம்,எழுத்து .ஜெயபூர்ணாதாஸ்,படத்தொகுப்பு :அஸ்வின் குமார், அஜய்வர்மா,இசை : சாம்ஸ் சி எஸ்,தயாரிப்பாளர்கள் ஷில்பா தவான், குஷால் தேசாய், சைதன்யா தேசாய்,திரைக்கதை இயக்கம் : அஸ்வின் குமார்,முதன்மை நிதி ஆலோசகர் : ரஜத் சாப்ரா , பாடலாசிரியர் : தி ஸ்லோகா,இணைத் தயாரிப்பாளர்கள் :சுபாஷ் சந்திர தவான் – துர்கா பலுஜா, கூடுதல் திரைக்கதை வசனம் அஸ்வின் குமார் மற்றும் ருத்ரா பி கோஷ், ஒலிக் கலவை : கண்ணன் சம்பத் – அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்,தலைமை தொழில்நுட்ப அதிகாரி சமய் மகாஜன், சி ஜி மேற்பார்வை : மகேஷ் குமார் மண்டல், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போலே : கரண் அர்ஜுன்சிங் – ஜஸ்ட் போலே ஆர்ட் என்று பணியாற்றியுள்ளனர்.

பாகவத புராணத்தில் உள்ள பக்த பிரகலாதன் கதை அனைவரும் அறிந்ததே.இது பல்வேறு கலை வடிவங்களில் மக்களிடம் புகழ்பெற்றது. கிராமங்களில் கூட பக்த பிரகலாதன் நாடகம் ஆங்காங்கே அரங்கேறும்.பக்த பிரகலாதன் யார்?  விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுக்கக் காரணமான பின்னணி என்ன? என்பது பற்றியும் அறியும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அனிமேஷன் திரைப்படம் தான் ‘மகா அவதார் நரசிம்மர்’

காசிபர் சிறந்த பக்திமான் அவர் ஒரு தியானத்தில் இருக்கும் போது மனைவி திதி தனது காமத்தை அடக்க முடியாமல் தீர்த்து வைக்கக் கோருகிறாள். கூடலுக்கு அது தகாத நேரம் என்று கணவன் மறுத்தும் அவள் விடவில்லை. முடிவில் அவள் வெற்றி பெறுகிறாள். அதன் விளைவாக அவர்களுக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என அடங்காத இரு பிள்ளைகள் பிறக்கின்றன. இரண்யாட்சன், இரண்யகசிபு (தமிழில்   இரண்யாட்சன் ,இரணியன் என அழைக்கப்படுகிறார்கள்) வளர்ந்து மோசமானவர்களாக மாறுகின்றனர்.

இரணியாட்சன், இரணியகசிபு என இருவரும் இந்த உலகத்தை ஆள நினைக்கிறார்கள். தங்களை கடவுளாகக் கருத வேண்டும் என்கிறார்கள். அவர்களால் தேவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை இளையவனை வராஹ  அவதாரம் எடுத்து விஷ்ணு அழித்து விடுகிறார். ஆனாலும் தனது தம்பியை அழித்தவர்களை பழிவாங்க நினைக்கிறான் அண்ணன் இரணியகசிபு.தம்பி போலவே அண்ணனும் அதே அழிவு வேலையைத் தொடர்ந்து செய்கிறான்.

இரணியகசிபு, பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்து, எந்த ஆயுதத்தாலும் பகலில் அல்லது இரவில், நிலத்திலோ அல்லது வானத்திலோ, மனிதனாலோ அல்லது மிருகத்தாலோ மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றவன்.சக்தி மிக்கவனாக இருப்பதால் அவனைக் கண்டு தேவர்கள் உட்பட எல்லாரும் அஞ்சுகிறார்கள்.

இரணியனுக்குப் பிரகலாதன் என்ற மகன் பிறக்கிறான்.  விஷ்ணுவின் தீவிர பக்தனாக இருக்கிறான். இதைக் கண்டு இரணியன் மிகவும் கோபமடைகிறான்.இரணியன், பிரகலாதனை கொல்ல பல்வேறு முறைகளில் முயன்றும், விஷ்ணுவின் அருளால் பிரகலாதன் காப்பாற்றப்படுகிறான்.இறுதியில், இரணியன், தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்ம வடிவத்தில் இருந்த விஷ்ணுவால் கொல்லப்படுகிறான். இது இரணியன் கேட்ட வரங்களுக்கு ஏற்ப அமைந்தது. நரசிம்மர், அந்தி நேரத்தில், மனித மற்றும் மிருக வடிவில், வாசலில் வைத்து இரணியனைக் கொன்றார்.

இந்தக் கதை, பக்தியின் வலிமையையும், தீமை ஒருபோதும் வெல்லாது என்பதையும் விளக்குகிறது. இக்கதையை இக்காலத்துக்கு ஏற்றவகையில் அனிமேஷன் திரைப்படமாக பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர்.காட்சிகள் அனைத்தும் மிகப்பிரமாண்டமாகவும் நவீன தொழில்நுட்பத்தைப் பறைசாற்றும் வகையிலும் உலகத் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

படம் ஆரம்பத்தில் என்னமோ அனிமேஷன் திரைப்படமாகத்தான் தொடங்குகிறது ஆனால் போகப் போக அதில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் உயிர் பெற்று மனதில் ஒட்டிக் கொள்கிறார்கள்.கதையோடு நாமும் ஒன்றி விடுகிறோம்.பாத்திர சித்தரிப்புகளும் பாத்திரங்களின் தோற்ற வடிவமைப்புகளும் மிக அழகாக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன பாத்திரங்களுக்கு ஒவ்வொரு உடல் மொழியும் உருவாக்கப்பட்டு மெருகேற்றப் பட்டு திரைப்படமாகியுள்ளது.

படத்தில்  கதாபாத்திரங்களில் தோற்றம் எவ்வளவு துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்றால் பாத்திரங்களின் உடல் தோற்றம், தலை,முகம்,கண்கள், உதடு, வாய் ,பற்கள், காது ஏன் புருவமுடி அது மட்டுமல்ல கைவிரல்களின் நகக் கண்களில் தெரியும் அரை வட்ட வெண்மை கூட துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளது.தாவர வகைகளின் பசுமையும் செடிகொடி, பூக்களின் அசைவுகளும் அரக்கர்களின்,விசித்திர விலங்குகளின் தோற்றங்களும் அவற்றின் ரோமத்தில் நெளியும் அசைவுகளும் அணிகலன்களின் வேலைப்பாடு நுட்பங்களும் நேர்த்தியாக உருவாக்கிச் சித்தரிக்கப்பட்டுள்ளன.நாடு, நகரம், அந்த அரண்மனையின் சிற்ப வேலைப்பாடுகள் பூவேலைப்பாடுகள் அனைத்தும் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளன.இதற்காக உழைத்திருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.பின்னணி இசையில் சாம் சிஎஸ் வழக்கம் போலவே மிளிர்ந்து ஒளிந்துள்ளார்.ஆகாயம்,கடல், அருவி, மலை,ஆறு, தடாகம், சோலை போன்றவை தத்ரூபமாக ஈர்க்கும் வண்ணங்களோடு காட்சிப்படுத்தப்பட்டு கண் முன் விரிகின்றன.ஒரு புராணக் கதையோடு கூடுதல் பரிசாக அகன்ற திரையில் வேறொரு உலகத்துக்குள் சென்று வந்த அனுபவத்தை, ஆன்மீகஉணர்வுகளைப் பெறுகிற அனுபவத்தை இந்தப் படம் அளிக்கிறது.

இந்திய திரைப்பட உருவாக்கம் உலகத் தரக்திற்குச் சென்று கொண்டுள்ளது என்பதற்கு இந்த அனிமேஷன் திரைப்படம் சான்றாக இருக்கும் .

பெரியவர் முதல் சிறியவர் வரை பார்க்கும் வகையிலும் இந்தப் படம் உருவாகி உள்ளது .நிச்சயமாக
‘மகா அவதார் நரசிம்மா’ திரைப்படம் பிரமாண்டமான முழு நீள சுவாரஸ்யமான  திருப்திகர திரையரங்க அனுபவத்தை தரக்கூடிய படம் எனலாம்.

 

(தமிழில் என்பர்)